Skip to main content

நினைவில் நிற்கும் புன்னகை- சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி


(சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளில் எனது பால்ய நினைவுகளுக்கு மிகவும் நெருக்கமான கவிதை இது. உலகின் இன்னொரு எல்லையில் தன் வாழ்வடையாளத்தைக் கொண்ட இந்தக் கவிதையில் வரும் அம்மாவுக்கும் என் அம்மாவுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை என்பதுதான் இந்தக் கவிதை தரும் அனுபவத்தை உலகளாவியதாக மாற்றுகிறது. நிலவு போல அம்மா என்பவளும் தொன்மை, தேய்வு, புனிதம் எல்லாம் சேர்ந்த படிமம் தானோ.

இந்தக் கவிதையை முதல்முறையாகப் படித்து மொழிபெயர்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது நிறைவேறுகிறது. இதே கவிதையை கவிஞர் பெருந்தேவியும் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனாலும் இன்னொரு மொழிபெயர்ப்புதான் ஒரு கவிதைக்கு இருக்கட்டுமே.)



ஆளுயர ஜன்னலை மூடும்
கனத்த திரைமடிப்புகளுக்கு அருகேயுள்ள
மேஜையில்
குடுவைக்குள் சுற்றிச் சுற்றிவரும்
தங்கமீன்களை நாங்கள் வளர்த்தோம்.
புன்னகைத்த முகத்துடன்
நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டுமென்று
கருதும் என் அம்மா என்னிடம் சொன்னாள்
சந்தோஷமாக இருக்க வேண்டும் ஹென்றி
அவள் சொன்னதும் சரிதான்: நம்மால் முடிந்தால் சந்தோஷமாக இருப்பதுதான் நல்லது.
ஆனால் என் அப்பா அவளைத் தொடர்ந்து அடித்தார்
தனது ஆறடி இரண்டு அங்குல உயர உடம்புக்குள் எதுவோ உக்கிரம் கொள்ளும்போது
என்னையும் வாரத்தில் பலமுறை அடித்தார்
ஏனெனில் அவருக்குள்ளிருந்து எது அவரைத் தாக்குகிறதென்று
அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை
 ஒரு பரிதாபப்பட்ட மீன் என் அம்மா
மகிழ்ச்சியாக எப்போதும் இருக்க விரும்பிய என் அம்மா
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று மூறை அடிபட்டாள்
ஹென்றி, சிரி! ஏன் உன்னால் சிரித்தபடி இருக்க முடியவில்லைஎன்றபடி என்னைப் பார்த்து எப்படிச் சிரிக்க வேண்டுமென்று சொல்வது போலச் சிரிப்பாள்
நான் பார்த்ததிலேயே சோகமான சிரிப்பு அது.
ஒருநாள் தங்கமீன்கள் ஐந்தும் இறந்துபோனது
அவை தண்ணீரின் மேல்பரப்பில் மிதந்துகொண்டிருந்தன
பக்கவாட்டில் சாய்ந்திருந்த அவற்றின் கண்கள் திறந்தே இருந்தன
எங்கள் அப்பா வீட்டுக்கு வந்தார்
இறந்த மீன்களைத் தூக்கி பூனைக்குப் போட்டார்
அப்போது சமையலறையிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த
என் அம்மா புன்னகைப்பதை நாங்கள் பார்த்தோம்.

Comments