Skip to main content

தேவதச்ச கணங்கள்




உலகிலேயே அழகான
உயிர் பொருள்
நாய்வால் தான்
அதற்கு கண் இல்லை
காது இல்லை
ஒரு இதயத்திலிருந்து நீளும்
துடிப்பு உண்டு
மிக மிக மிக
முக்கியமாக
அதற்கு
அன்பின் கோரைப்பற்களில்
ஒன்றுகூட இல்லை.

000


பொன்னூரிலிருந்து
சிவப்பூர் செல்லும் வழியில் 
சதுப்புநில நீர்நிலைகளை 
ஒளிரவைக்கிறான் மாலைச் சூரியன் 
நடைபயில்பவர்கள் காதலர்கள் 
ஸ்கேட்டிங் விளையாடும் குழந்தைகள் 
மிருதுவாக்கிய 
ஏகாந்த சாலையின் 
பக்கவாட்டில் 
பறக்கும் ரயில் கடந்து செல்கிறது.
 காற்றில் ஆடிக்கொண்டிருக்கும்
 சிறு வேப்ப மரங்கள்
 நாணல்கள்
சரசரக்கும் புல்
கன்னங்கரெலென்று
ஒரு சிறுகிளையில்
ஆடும் குருவி
எல்லாரும்
என் கண்களுக்குப் பக்கத்தில்
ஈரத்தோடு  வந்து
அமைதியின் சின்னச் சின்ன ஒலிகளோடு
நெருங்குகின்றனர்.
ஒரு கணம்
இன்னொரு கணம்
மற்றுமொரு கணம் என்று
நான்
யாசகம் கேட்டு நீட்டிக்கிறேன்.
பிறந்து நான்கு மாதங்களேயான
எனது குட்டிநாய் தலையுயர்த்தி
முதலில் ரயிலைப் பார்க்கிறது
அதன் காதுமடல்
இலைகளாய்
புல்லாய்
பறவையின் மேனிச் சிலிர்ப்பாய்
சன்னமாக மென்மையாக அசைகிறது
வேளச்சேரி ரயில் நிலையக் கூரைக்கு
மேல் தற்போது சுடரும் செஞ்சூரியன்
தலைகுனிந்து
எனது ப்ரவுனியை ஆசீர்வதிக்கிறான்.

000



அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில்
தொடர்ந்து ஒலித்த சத்தத்தைக் கேட்டு
முதலில் குழந்தைகளுடையதென்று நினைத்தேன்
பின்னர் பூனைகளென்று கருதினேன்
இப்போது மயில்களின் அகவல் துல்லியமாய்
கேட்கிறது.
ஒரு அதிகாலைப் பயணத்தில்
ரயில் பெட்டியின் கதவைத் திறந்தபோது
எங்கோ ஒரு புதரிலிருந்து
இருளைக் கத்தரித்த
வெள்ளை மயில்கள் அவை.
000
73

எங்கள் வீட்டருகே
மேயவந்த
புள்ளிமானை
என் மகளுக்கு
அறிமுகம் செய்வதற்காக
அழைத்துப் போகிறேன்
அவளை என் ஒக்கலில்
சுமந்திருக்கிறேன்
அவளுக்கு
எப்போதும்
ஒன்பது மாதமே வயது
நாங்கள்
மான் மான் மான்
என்றபடி
பின்னால்
ஓடுகிறோம்
முள்கிளைகளென சடசடத்து
எழுந்து
மான்களும்
தொடவிடாமல்
ஓடுகின்றன. 

000

Comments