Skip to main content

வந்தனம் வந்தனம் வந்தனம்




முந்தைய தினத்தின் குப்பைகள்
கூட்டப்படும்
சத்தம் மட்டுமே கேட்கும்
காலையின்
ஆளற்ற பேருந்து நிலையத்தில்
தூசிக்கோளமாய்
புலப்படத் தொடங்கும்
ஒளியே
உனக்கு வந்தனம்

மேலாடைக்குள்ளும்
உள்ளாடைக்குள்ளும் அடங்காமல்
அலை போல எழுந்து பெருகும்
யுவதியின்
தடந்தோள்
முலைகளை ஒளிரவைக்கும்
தூய்மையான சூரியனே
உனக்கு வந்தனம்

சற்று முன்னர்
சமுத்திரத்தில் உயிர்த்து
இப்போது
கருத்த முதியவளின்
எடைத்தராசில்
துடிப்பு நீங்கி
துயிலும் மீன்களின் மீது
ஈக்கள் போலப் படரும்
கதிரே உனக்கு வந்தனம்

விளையாடுபவர்கள்
ஆடாதவர்கள்
காலை நடையாளர்கள்
வேடிக்கை பார்க்க
குந்தியிருப்பவர்கள் என
மைதானம் நிரம்பி இருக்கிறது.
சிதறும் கூக்குரல்களின்
நடுவே
அவன் எப்போது இறந்தான்
இன்னும் யார் பார்வைக்கும்
அறியவராத
அவன்
சடலத்தின் மீது
ஏறத்தொடங்கியிருக்கும்
நோயுற்ற வெயில் நாயே

உனக்கு வந்தனம்.

Comments