Skip to main content

நான்கு நாய்கள்


ஷங்கர்ராமசுப்ரமணியன்


வார விடுமுறையில் போகும் இறைச்சிக் கடையில் கறிவெட்டுபவரின் கையில் ஒரு விரல் பாதியளவு துண்டாகி இருப்பதைப் பார்த்தேன். தொழிலின் ஈரத்தால் துண்டிக்கப்பட்ட இடம் ஆறாமலேயே கண்ணைப் போல வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்கள் எல்லோரையும் உற்றுப் பார்க்கிறது. வெட்டப்பட்ட எல்லாவற்றுக்கும் வேறு கண் முளைத்துவிடுகிறது.

சென்ற குளிர்காலம் ஆரம்பித்து, தற்போது துவங்கியிருக்கும் கோடைக்காலம் வரை என் கவனத்தில் அதிகம் இடம்பிடித்தவை நாய்கள்தான். அதிகாலைக் குளிரில் நடைப்பயிற்சிக்குச் செல்லக் கீழிறங்கும்போது தாய்நாயின் உடலோடு உடலாக ஆக முயன்று மெத்மெத்தென்று உறங்கும் குட்டி நாய்களைப் பொறாமையோடு பார்ப்பேன். உறக்கத்தைத் தொடர விரும்பும் மனம் அந்தக் குட்டிகளோடு அடையாளம் கண்டு துக்கமும் பொறாமையும் கொள்ளும். நாய், வெயிலில்தான் இளைத்துச் சலித்து நிராசையை எச்சில் சிந்த வெளியேவிடும். குளிரின் போர்வையில் அந்த உயிர்களே அமைதியுடன் தூங்கும் அதிகாலையில், நாயைப் போலவே சலிக்கத் தொடங்கிவிடுமென் மனம்.

நான் இந்தக் காலகட்டத்தில் பார்த்த நாய்களில் நான்குக்கு ஒன்று ஆளுமைக்குள்ளேயே ஊடுருவியிருக்கும் உடல் குறைபாட்டைக் கொண்டவை. பிறந்து மூன்று மாதங்களே இருக்கும். இரண்டு சக்கர வாகனம் ஏறி, என் வீட்டுக்கு முன்னாலேயே நொண்டும் குட்டி நாயையும் தினசரி பார்க்க நேர்ந்தது. அதிகம் வாகனங்களும் மனிதர்களும் புழங்காத நிழல்தெரு என்பதால் ஐந்து நாய்கள் எப்போதும் வீட்டைச் சுற்றிப் படுத்திருக்கும். அதில் ஒன்று கால் ஊனமானது. நாய்கள் என் புலன்களுக்குள் கூராக நுழைந்த காலத்தில்தான் அஷ்டாவக்கிரரும், அஷ்டாவக்கிர கீதையும் எனக்கு அறிமுகமானார்கள்.

உடல் குறைபாடுகள் கொண்ட மனுஷர்கள், பிராணிகள், பறவைகள் எல்லோரும் எனக்கு அஷ்டாவக்கிரர்களாக வந்து என்னைச் செயலுக்குத் தூண்டும் எண்ணங்கள், என்னைப் படுத்தியெடுக்கும் ஆசைகள், வாதைகள், வேட்கை, காமம், விழைவு அனைத்தும் என்னுடையவை அல்ல அல்லவென்று நினைவுபடுத்தினார்கள். நனவிலும் கனவிலும் திகிலூட்டும் படங்களைத் திரையிட்டுக் குரைக்கும் பயத்தின், பரிவின், அறத்தின் முகமூடி போட்ட ஆசையின் நாயோடு நானும் சேர்ந்து இத்தனை நாட்களும் ஓடித்திரிந்திருக்கிறேன் என்பது சற்றேத் தெளியத் தொங்கிய நாட்கள் அவை.

முதலில் உறங்கும் மெத்தைக்கு அருகிலேயே குரைத்துப் பயமுறுத்தியதை அறைக்கு வெளியே கட்டி வைத்தேன். பின்னர் பால்கனிக்கு அனுப்பினேன். இப்போது தூரத் தெருமூலையில் அந்தக் குரைப்பு கேட்கிறது. இத்தனை ஆண்டுகள் நான் வளர்த்த நாய் அல்லவா. இப்போதும் தெரு மூலையில் அச்சமும் ஆசையும் கொண்ட அதன் குரைப்பொலி கேட்கிறது.

பெருங்குடி ரயில் நிலையத்தில் அலுவலகத்துக்குச் செல்வதற்காக அடுத்த ரயிலுக்குக் காத்திருக்கும்போது பார்த்த நாய்தான் இங்கே வெகு அசலாக வெளிப்படப்போவது. அதை அன்று மட்டுமே பார்த்தேன். நான் ரயில் வருவதற்காக பிளாட்பாரத்தில் சில பயணிகளுடன் காத்திருந்தபோது, அந்த நாய் நுழைந்து பிளாட்பாரத்தின் விளிம்பில், பயணிகள் இறங்கிக் கால்வைக்கும் தடத்தில் மெதுவாக நடைபோட்டுச் சென்றது. வயோதிகம் என்று சொல்ல முடியாது; ஆனால், வடுக்கள் கொண்ட தளர்ச்சியுடன் அதன் நடை இருந்தது. தடுமாறி தண்டவாளத்தில் விழ வேண்டும் என்பதற்காகவேதான் அது ஓரத்தில் நடந்தது என்று இப்போது புரிகிறது. ஒரு புள்ளியில் தண்டவாளத்தின் இரண்டு பாளங்களுக்கிடையே விழுந்தது. விழுந்த பிறகு அது அங்கேயே சரணடைந்ததுபோல கால் நீட்டி உட்கார்ந்துவிட்டது. நண்பருடன் தொலைபேசியில் பேசத் தொடங்கியிருந்த நான் அந்தக் காட்சியைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்.

அது தண்டவாளப் பாளங்களுக்கிடையே உட்கார்ந்திருந்தது உடல் பலவீனத்தால் அல்ல. அதனால் எழுந்து நடக்க முடியும் என்பதை எனக்குத் தீர்மானமாகச் சொல்ல முடியும். அது உட்கார்ந்தே இருந்தது. நாய் அமர்ந்திருந்த தண்டவாளத்தில் நான் ஏறப்போகும் ரயில் வந்துகொண்டிருந்தது. பெருங்குடி ரயில் நிலையக் கூரைக்குள் வேகம் குறைந்து நெருங்கி வரும்போதும் நாய் எழவில்லை. நான் போனைத் துண்டித்து நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். ரயிலின் எஞ்சின் முனை வரும்போது லேசாக நாய் எழுந்து கொடுத்தது. டப்பென்று சத்தம். ஆனாலும் மெதுவான மோதல்தான். ரயில் கடக்கும் வரை சில பேர் காத்திருந்தோம். ரயில் கடந்தது.

நாய் உயிருடனேயே இருந்தது. படுத்தபடியே கழுத்தைத் திருப்பி என்னைப் பார்த்தது. ரயிலை விட்ட சிலர் அதைத் தண்டவாளத்திலிருந்து எழுந்து நடுவில் போய்ப் படுக்கும்படி ‘ச்சூ ச்சூ’ என்று விரட்டினர்.
 யாரும் இறங்கி அதைத் தூக்குவதற்கான மனநிலையையோ அவகாசத்தையோ கொண்டிருக்கவில்லை. நாயின் கண்களில் ஒரு விசேஷ பிதுக்கமும் வெறிப்பும் வந்திருந்தது. மரணப் பளபளப்பு என்று அதைச் சொல்ல முடியுமா? அன்னா கரீனினாவின் கண்கள் பளபளத்திருக்குமா இப்படி? நாக்கை வெளியே நீட்டி, உடலிரைக்க என்னை நீங்கள் நினைத்தால் காப்பாற்றிவிட முடியுமோ என்று ஏளனப் பார்வை பார்த்தது.

அந்த நாய் வேறு யாருக்காகவும் வரவில்லை. அது எனக்கு ஒரு தகவலைச் சொல்லும் திட்டத்திலேயே வந்தது. நப்பாசையின், பற்றின் கடைசி மாமிசத் துணுக்கைக்கூட எலும்பிலிருந்து உரித்து, தனக்குள் அடைய வேண்டிய ஒரு மரணத்தை எனக்கு அறிவுறுத்த வந்த நாய்தான் அது.

பெருங்குடி ரயில் நிலையத்துக்குள் படியேறி, தடுமாற வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுத்து துல்லியமாக தண்டவாளத்துக்கு நடுவே விழுந்து, ரயில் வரும்போது கபாலத்தில் சற்று மோதுவதை அது சரியாகவே திட்டமிட்டிருக்க வேண்டும். இன்னும் நான்கு ரயில்களாவது வர வேண்டும், அதன் நிலையத்தை அடைவதற்கு.
இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் என் வீட்டுக்கு அருகே புதுப்பிக்கப்பட்ட ஆலயத்துக்குப் போயிருந்தேன். அங்கே ஆதிகுரு தத்தாத்ரேயருக்குத் தனிச் சன்னிதி அமைத்திருக்கிறார்கள். அவர் காலடியில் கொழுகொழுவென்று நான்கு நாய்க்குட்டிகள் நிற்கின்றன. ஒரு கணத்தில் அவையெல்லாம் உயிர் பெற்றதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்குள், ஒன்று சமாதானம் அடைந்தது.

Comments