Skip to main content

Posts

Showing posts from August, 2018

வந்தனம் வந்தனம் வந்தனம்

முந்தைய தினத்தின் குப்பைகள் கூட்டப்படும் சத்தம் மட்டுமே கேட்கும் காலையின் ஆளற்ற பேருந்து நிலையத்தில் தூசிக்கோளமாய் புலப்படத் தொடங்கும் ஒளியே உனக்கு வந்தனம் மேலாடைக்குள்ளும் உள்ளாடைக்குள்ளும் அடங்காமல் அலை போல எழுந்து பெருகும் யுவதியின் தடந்தோள் முலைகளை ஒளிரவைக்கும் தூய்மையான சூரியனே உனக்கு வந்தனம் சற்று முன்னர் சமுத்திரத்தில் உயிர்த்து இப்போது கருத்த முதியவளின் எடைத்தராசில் துடிப்பு நீங்கி துயிலும் மீன்களின் மீது ஈக்கள் போலப் படரும் கதிரே உனக்கு வந்தனம் விளையாடுபவர்கள் ஆடாதவர்கள் காலை நடையாளர்கள் வேடிக்கை பார்க்க குந்தியிருப்பவர்கள் என மைதானம் நிரம்பி இருக்கிறது. சிதறும் கூக்குரல்களின் நடுவே அவன் எப்போது இறந்தான் இன்னும் யார் பார்வைக்கும் அறியவராத அவன் சடலத்தின் மீது ஏறத்தொடங்கியிருக்கும் நோயுற்ற வெயில் நாயே உனக்கு வந்தனம்.

காதல் அற்ற காதல் கவிதைகள்

இந்தக் கோடை எந்த நினைவுகளின் மேலும் சாய்ந்து இளைப்பாறவோ துக்கப்படவோ அனுமதிக்கப் போவதில்லை பழுத்து உதிர்ந்து வேனலின் நீராவிக் கலத்தில் அவியும் இலைகளின் மணத்தை நான் அப்படியே முகரவேண்டும் அதிகாலையில் ஆறுதலாகப் பெய்யும் பின்பனிக்கு என் உடலை எந்த முன்ஞாபகங்களுமின்றி சுத்தமாகத் துடைத்துத் தர வேண்டும் ஒரு பறவையை அதன் வாலின் துடிப்போடு நிகழ்கணத்தில் அப்படியே பார்க்கவேண்டும் கடக்கும் பெண்ணின் உடல் எழிலை குட்டிக் குழந்தைகளை தன்னிரக்கமின்றி ரசிக்க வேண்டும் சென்றவளின் சுவடின்றி இந்தக் கோடை தரும் காதலுணர்வை என் உதடுகளை நானே தடவி ருசிப்பதைப் போல நான் தனியே சுவைக்க வேண்டும் இந்தக் கோடையில் பெருகி என்னைக் கொல்லும் ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு அழித்து மீண்டும் ஏகாந்தத் தனியனாக வேண்டும் . தெரியாதா பேரன்பே தெரியாததன் பெருந்துளையிலிருந்து தானே அவள் வந்தாள் வந்த துளைக்குள்ளேயே அவளும் மறைந்து போனாள் காதலும் மறைந்தது தெரியாததற்குள் நீ இதுவரை எதையெல

நான்கு நாய்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் வார விடுமுறையில் போகும் இறைச்சிக் கடையில் கறிவெட்டுபவரின் கையில் ஒரு விரல் பாதியளவு துண்டாகி இருப்பதைப் பார்த்தேன். தொழிலின் ஈரத்தால் துண்டிக்கப்பட்ட இடம் ஆறாமலேயே கண்ணைப் போல வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்கள் எல்லோரையும் உற்றுப் பார்க்கிறது. வெட்டப்பட்ட எல்லாவற்றுக்கும் வேறு கண் முளைத்துவிடுகிறது. சென்ற குளிர்காலம் ஆரம்பித்து, தற்போது துவங்கியிருக்கும் கோடைக்காலம் வரை என் கவனத்தில் அதிகம் இடம்பிடித்தவை நாய்கள்தான். அதிகாலைக் குளிரில் நடைப்பயிற்சிக்குச் செல்லக் கீழிறங்கும்போது தாய்நாயின் உடலோடு உடலாக ஆக முயன்று மெத்மெத்தென்று உறங்கும் குட்டி நாய்களைப் பொறாமையோடு பார்ப்பேன். உறக்கத்தைத் தொடர விரும்பும் மனம் அந்தக் குட்டிகளோடு அடையாளம் கண்டு துக்கமும் பொறாமையும் கொள்ளும். நாய், வெயிலில்தான் இளைத்துச் சலித்து நிராசையை எச்சில் சிந்த வெளியேவிடும். குளிரின் போர்வையில் அந்த உயிர்களே அமைதியுடன் தூங்கும் அதிகாலையில், நாயைப் போலவே சலிக்கத் தொடங்கிவிடுமென் மனம். நான் இந்தக் காலகட்டத்தில் பார்த்த நாய்களில் நான்குக்கு ஒன்று ஆளுமைக்குள்ளேயே ஊடுருவியிருக்கும் உ