Skip to main content

மனம் மனம் மனம் முயல் முயல் முயல்




ஞாயிற்றுக்கிழமையொன்றின்
இந்தக் காலைவேளை
சந்தோஷம் துக்கம்
இரண்டு சாத்தியப் பாதைகளை
ஒளியோடு எனக்கு அருளியுள்ளதாக
மனம் சொன்னது
இரண்டு பாதைகளில்
ஒன்றை நானே தேர்ந்தெடுக்க
கடவுளால் வழங்கப்பட்டிருந்த
பளபளப்பான மெனு கார்ட் அது.
Y –யின் முனை போன்ற நிழல் சாலை அதில்
இறங்கி நடந்தேன்
விழும்போது வடிவம் மாறும்
சரக்கொன்றை
மரத்துக்குக் கீழே
ஒரு முயல் பொம்மையைப் பார்த்தேன்
காதுகள் உயர்ந்த
கண்கள் சிரிக்கும்
இரண்டு முன்பற்கள் வெளித் தெரியும்
விரலளவே உடல் கொண்ட
சாம்பல் நீல பிளாஸ்டிக் முயல் அது.
அதன் இடது கன்னத்திலும்
வலது கண்ணுக்கு மேலும்
இடது முட்டியிலும்
வட்டம் செவ்வகம் சதுரத்தில்
பிளாஸ்திரிகள் ஒட்டப்பட்டிருந்தன
பிளாஸ்திரிகளை அனிச்சையாக உரிக்கத் துவங்கினேன்
அப்போதுதான் உரைத்தது
அந்தப் பிளாஸ்திரிகளும்
முயலின் அங்கம்தான்
உரிக்காமல் விட்ட பிளாஸ்திரிகளுடன்
முயலைப் பார்த்தேன்
அது காயம்பட்ட முயல்
அதில் காயம்பட்ட என்னைப் பார்த்தேன்
எனது பிளாஸ்திரிகளைப் பார்த்தேன்
அவனுக்குக் காயம்பட்ட முயல் வீரன் என்று பெயர் வைத்தேன்
எனது சட்டைப் பாக்கெட்டுக்குள்
வீரனைப் போட்டுக் கொண்டு
நெஞ்சுயர்த்தி நடந்தேன்.
000

மனம் மனம் மனம்
முயல் முயல் முயல்
சாம்பல் முயல் சாம்பல் முயல் சாம்பல் முயல்
காயம்பட்ட சாம்பல் முயல் காயம்பட்ட சாம்பல் முயல்
முயல் வீரன் முயல் வீரன் முயல் வீரன்
காயம்பட்ட வீரனே காயம்பட்ட வீரனே காயம்பட்ட வீரனே
நல்ல பாதை நல்ல கணமென்று ஏதுமுண்டா
சந்தோஷத்தின் பாதை துக்கத்தின் பாதை
என்று எதுவும்
தனியாக உண்டா
முயல் வீரனே.

000

சிவன் தண்டீஸ்வரனாக ஆலயம் கொண்ட
வேளச்சேரியில்
இன்னும் பழமை மிச்சமிருக்கும்
சீதாபதி நகரின் பிரதான சாலை அது.
மழை பெய்த கோடை நாளொன்றுக்கு
அடுத்த நாள் காலை
பாதி பூக்களைக் காலடியிலேயே
உதிர்த்து நின்ற
சரக்கொன்றைக்குக் கீழே
குட்டி அரைக்கால் டிரவுசரில்
நடைப்பயிற்சிக்கு
வந்திருந்த
நெடிய யுவதி
நின்று புகைப்படமெடுத்தாள்
சிவந்த தேகத்தை அவள் இந்தக் கோடையில்
பழுப்பாக்கியிருக்க வேண்டும்.
எதிர்படும் போது
வழக்கமாக முகமன் கூறும்
பால்பாக்கெட் பெண்மணி
நான்
சரக்கொன்றை மரம்
அவள்
மட்டுமே சாலையில் நின்றிருந்தோம்
அவள் பிரிந்து கடந்தாள்
என்னால் இயலவில்லை
நான் அவளை மீண்டும் பார்க்க
பக்கவாட்டு சாலையில் நடந்தேன்
என்னைத் தடுத்து தடுத்து
தடுக்க இயலாமல்
அவள் வரும் சாலையின் நிழல் முனையில்
போய் நின்றேன்
பளிங்குஜாடியின் பளபளப்புடன் சுடரும்
சரக்கொன்றை பூக்களை எனக்குப் பிடிக்கும்
அதன் ஆங்கிலப் பெயர் லேபர்னம் 
லேபர்னம் லேபர்னம் லேபர்னெம்
புகைப்படக் கலைஞர் அல்போன்ஸ் ராய்
வசிக்கும் தெருவின்
பெயர் லேபர்னம்
இந்த வேனில் பருவத்தில் தான் சென்னை முழுவதும்
சரக்கொன்றை மரங்கள்
நாங்கள் இங்கேதான் இருக்கிறோம் என்று கூப்பிட்டு
எனக்குத் தங்களைக் காட்டின
முடியப்போகும் இந்தக் கோடைக்கு
சரக்கொன்றை என்று பெயரிடத் திட்டமிட்டிருந்தேன்
அப்போது இவளை நான் பார்க்கிறேன்
அவள் அணிந்திருந்த காதொலிப்பானை அஞ்சி
ஹலோ என்றேன்
அவள் தயக்கமின்றி நின்று செவிகொடுத்தாள்
அவள் படமெடுத்தது சரக்கொன்றை என்றேன்
ஆங்கிலத்தில் அதன் பெயர் சொன்னேன்
தலையசைத்தபடி பரிவுடன் கேட்டாள்
கோடையில் மலரும் பூ
புலம்பெயர்ந்த தாவரமாக இருக்கலாமென்று
சொல்லி விலகினேன்
அவள்தான் சரக்கொன்றை
கோடை அனலும் என் கணம் தோறும்
அவளைக் கடந்து கொண்டிருப்பவன் நான்.

000

பூனை எலியை உண்கிறது

பூனை எலியை வாசிக்கிறது

என்று விளங்கிக் கொள்ளலாமா

பூனை எலியைச் சாப்பிட்டு
ஏவ் என்று ஏப்பமிட்ட போது

பூனை எலியாகி விட்டது

எலி பூனையாகி விட்டது

என்று விளக்குவது சாத்தியம்தானா.

பூனைக்குள் எலி இல்லா விட்டால்

எலியை வெளியே அதனால்

அடையாளமும் காணமுடியுமா தோழர்களே.

Comments