Skip to main content

வெறுமையுடன் ஒரு நடனம்





பரூச்

வடிவமாக இல்லாததற்கு வடிவம் கொடுக்க முயல்வது தவிர்க்கவே முடியாத செயலாக இருப்பதால், ‘வெறுமை’ குறித்து எழுதுவதில் உள்ளார்ந்த நிந்தித்தல் உள்ளது. இன்னும் தெளிவாகப் பார்ப்பதற்கு உதவக்கூடிய, பயன்பாட்டுக்குப் பிறகு அகற்றப்பட வேண்டிய தற்காலிகச் சாரக்கட்டுமானங்களாகவே இந்தத் தன்மையிலான கட்டுரைகளை அணுக வேண்டும்.
ஒரு காலியான இடம் தொடர்ந்து காலியாக இருப்பதில்லை, ஒரு அமைதியான மனம் தொடர்ந்து அமைதியாக இருப்பதில்லை என்பதால் இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்று கூறப்படுவதுண்டு. உண்மையில் காலியான வெளியென்று எதுவுமே இல்லை. மிகக் குட்டியூண்டு இடத்தில் கூட, துணை அணுத்துகள்கள் சிறு இடைவெளிகளில் நுரைத்துத் தோன்றி மறைகின்றன. இருக்கும் எல்லாப் பொருட்களையும் எல்லாம்’ என்று கூறி இருப்பை வெற்றிடத்திலிருந்து வேறுபடுத்துகிறார் லாவோட்சு.

அவர் வெற்றிடத்தை இருள், அமைதி மற்றும் மர்மம் நிறைந்ததாகக் காண்கிறார்.  எல்லாப் பொருட்களையும் அவர் தற்காலிகத் தோற்றங்களாக, உபயோகப்படுத்தப்பட்ட பின் நெருப்பில் எறிய வேண்டிய அலங்காரப் பொருட்களின் குப்பைகளாகவே அவர் பார்க்கிறார். “வானக, வையகத்திற்குத்/ தங்கள் கருணை சொந்தமில்லை;/ அவற்றுக்கு அனைத்தும் வைக்கோல் நாய்தான். / ஞானிக்கும் தன் கருணை சொந்தமில்லை/ அவனுக்கு மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.” என்கிறார் லாவோட்சு. சீனாவில் சடங்குகளின்போது வைக்கோலில் செய்யப்பட்ட நாய் பொம்மைகளை வைப்பார்கள். அந்த வைக்கோல் நாய்கள் சடங்கு முடிந்தவுடன் கழிக்கப்படும் அல்லது தீயில் தூக்கியெறியப்படும். அந்த வெறுமையைத் தான்- நீ மற்றும் நான் உட்பட- அனைத்துத் தற்காலிகத் தோற்ற உருவங்களும் பிறக்கும் கருப்பையாக மதிப்பிடுகிறார்.

இயற்கையைப் போன்றே, மனிதர்களும் வெறுமையை நிரப்பும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வெறுமையின் தாங்க முடியாத மௌனத்தை நொறுக்குவதற்காக, பெரிய பெரிய கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் சிந்தனையில் உருவாக்குகிறோம். அர்த்தம், காரணம், மதிப்பீடுகள், ஒழுங்கு, நல்லது, கெட்டது இன்னபிறவற்றின் அடிப்படையில் நாம் சிந்திக்கிறோம். ‘காரணம்’ மற்றும் ‘அர்த்தம்’ ஆகிய கருத்துருக்கள் அனைத்தும் முற்றிலும் பெரும்பாலானவர்களால் கண்டுகொள்ளவே படாத மனுஷ விவகாரங்களே- காரணம், அர்த்தம் குறித்து பிரபஞ்சத்துக்கு எதுவுமே தெரியாது. எதார்த்தத்தில், இந்த கருத்துருவங்கள் அனைத்தும், அந்த எல்லாப் பொருட்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நித்தியமான மௌனத்தைத் தவிர்ப்பதற்காக, நம்மை மதிப்பிட்டுக் கொள்வதற்கான முயற்சிகள் தான். ஸ்பினோசா, கடவுளை, “இருப்புக்கான ஆற்றல்” என்று குறிப்பிடுகிறார். எல்லாமும் தோன்றி மறையும் வெளியாக இருக்கும் இருப்பென்பது கூர்ந்து கவனிக்கப்பதற்கு லாயக்கற்றதே. ஆனால் வெற்றிடமோ, தோன்றாமலும் நித்தியமாகவும் இருப்பதால் தூய்மையான ஆற்றலாக உள்ளது. அத்துடன் அர்த்தம், காரணம், நல்லது, கெட்டது என்று கண்டு கற்பிக்கும் முயற்சிகள் எல்லாம் வெறுமையைக் காலியாக்குவதைத் தவிர வேறில்லை.

வெறுமையுடன் நடனமாடுவதென்பது, இச்சைக்குரிய துணையுடன் நடனமாடுவதைப் போன்றது. கொஞ்சம் கூடுதலாக நெருங்கும் ஆசை தவிர்க்கவே முடியாதது. நம்மில் ஒவ்வொன்றும் அந்த வெறுமையை - ஒவ்வொன்றையும் விளக்க, மேலும் பொருள் சேர்க்க, வாழ்க்கைக்கு அர்த்தம் தர, ஒரு லட்சியத்தை வைத்திருப்பதன் வாயிலாக- நிரப்புவதற்கு விரும்புகிறது. ஆனால் அதைச் செயல்படுத்தும் போது, நாம் மெய்யான வாழ்க்கையைக் கொன்று விடுகிறோம். அதற்குப் பதிலியாக ஒரு சமயத்தையோ, ஆன்மிகப் பயிற்சியையோ, கருத்தியலையோ, ஒழுக்கம் தொடர்பான கருத்தமைவுகளையோ நாம் உருவாக்கிய பூதங்களாக உலவ விட்டு விடுகிறோம்.
வெறுமையை அழிப்பதற்கு வாழ்வு தரும் அழைப்பை நிராகரித்தபடியே வெறுமையுடன் நடனமாடுவதுதான் உச்சபட்ச நடனம்- தோன்றாததற்கும், அங்கே தன்னை நிரப்புவதற்கு ஆசைப்படும் தோன்றியதற்கும் நிலவும் தீராத பதற்றம் காணப்படும். தற்போது இந்த சிறுகட்டுரை முடிந்துவிட்டது. வெறுமையை நிரப்ப மேற்கொள்ளப்படும் இன்னொரு முயற்சி என்று அதை நீங்கள் தூரப்போட்டு விடலாம்.

(இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தைக் காண corporealfantasy.com)



Comments

Popular posts from this blog

மாறும் நிலங்களை மொழிபெயர்க்கும் கவிஞன்

சிறுவயதிலேயே ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலைப் படித்துவிட்டு உற்பத்தி உறவுகளின் கதையாக இந்த உலகத்தின் கதையை வாசிக்கத் தெரிந்த இந்திய, தமிழ் குடியானவன்.
யவனிகா என்று இவர் வைத்த பெயர் எழுத்தாளர் சுஜாதா நாவலின் பெயராக பின்னால் ஆனது. 1990-களில் ஏற்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பாரம்பரியத்தொழிலை இழந்தவர்களில் ஒருவர். தலித் அரசியல், தலித் இலக்கியம், சோவியத் உடைவுக்குப் பின் மார்க்சியம் சந்தித்த நெருக்கடி, பின் நவீனத்துவ,அமைப்பியல் கோட்பாட்டு விவாதங்களும் இவரது கவிதையில் கதைகளாக, கதாபாத்திரங்களாக, குழந்தைகள் விளையாடும் கூழாங்கற்களைப் போல உருளுகின்றன.
வியாபாரத்துக்காக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அலையத் தொடங்கியபோது இவரது கவிதைகளில் மாறும் நிலங்கள், தாவரங்கள் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும். சிறு துணி வணிகனாக கிழக்கு ஆசிய நாடுகளிலும் பயணம் செய்யத் தொடங்கியபோது, ஒரு புதிய வர்த்தகக் காலனியாக உருவாகி மேல்கீழாக மாறப்போகும் இந்தியாவின் நிலங்களை மனிதர்களை தீர்க்க தரிசனமாகப் பார்த்துவிட்டான் யவனிகா. அப்படியாக ஊகித்து உணர்ந்த அவனது கவிதைகளின் முதல் தொகுதிதான் ‘இரவு என்பது உறங்க அல்ல’. இரவு என்ப…

ஆனந்தா ஆற்றில் இறங்காதே

ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த தாகம் மற்றும் சோர்வை உணர்கிறேன்” என்றார். ஆனந்தா வந்த வழியிலேயே திரும்பிச் சென்றான். ஆனால் அவன் அந்தச் சிறு நீரோடையை அடையும்போது, அவனுக்கு முன்னால் சென்ற சில மாட்டு வண்டிகள் நீரோடைக்குள் இறங்கித் தாண்டிச் சென்றதால், அந்த நீரோடை முழுவதும் கலங்கிச் சேறாகிவிட்டது. நீரினடியில் கிடந்த இலைகளும் மேலே வந்துவிட்டன. புத்தனின் சீடன் ஆனந்தா, நீரோடையின் நிலையைப் பார்த்துவிட்டு, இந்தத் தண்ணீரைக் குடிக்கவே முடியாது என்று நினைத்து, வெறும் கையுடன் திரும்பிவிட்டான். “நீங்கள் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பொறுங்கள். அடுத்த இரண்டு மூன்று மைல்களில் ஒரு பெரிய நதி ஒன்று இருக்கிறது. அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்று புத்தரிடம் கூறினான். ஆனால் புத்தரோ, மறுபடியும் சிறு நீரோடைக்குச் ச…

குரங்குகள் சொல்லும் நீதிக்கதை

ஷங்கர்ராமசுப்ரமணியன் 
அம்மா புகட்டிய காலத்திலிருந்து எனக்கு நீதிக்கதைகள் இன்றுவரை தேவையாகவே இருக்கின்றன. எளிய நீதிக்கதைகள் முதல் சிக்கலான நீதிக்கதைகள் வரைத் தேடித்தேடி அவை சொல்லும் நெறிமுறைகள் வழியாக, எனது அன்றாடத்துக்குள்ளும், என்னைச் சுற்றி நடக்கும் துயரமும் ரணமும் சிறு இளைப்பாறுதல்களும் கூடிய நிகழ்ச்சிகள், அபத்தங்கள், புதிர்களுக்குள்ளும் ஒரு ஒழுங்கை நான் கற்பிக்கவோ புனரமைக்கவோ செய்கிறேன்.
என்னைச் சுற்றி நடக்கும் ஒரு நிகழ்வுக்கு கால, வெளிப் பரப்பளவில் மிக அருகிலிருக்கும், கைக்குத் தென்படும் காரண காரியங்களைத் தேடாமல், என் வாழ்வுக்கு அப்பாலும் முன்பும் காரணம் இருக்கலாம்; மனிதத்துவத்துக்கு அப்பாற்பட்ட காரணமும் இருக்கலாம்; அதனால் சஞ்சலமில்லாமல் புகார்கள் இல்லாமல் அமைதியாக இரு என்பதை என் தலையில் குட்டிக் குட்டி உணர்த்தும் நீதிக்கதைகள் அடிக்கடி தேவையெனக்கு.
கட்டற்ற நுகர்வு ஒன்றே வாழ்வென்றாகிவிட்ட இக்காலகட்டத்தில் அடங்கவேயடங்காத புலன்கள் வழிநடத்தும், குறுக்கும்நெடுக்குமான சபலத்தின் பாதைகளில் திரியும் நவீன மனிதனுக்கு, மேலதிகமாக தற்காலத்தின் பாடுகளையும் அகப்படுத்தியிருக்கும் நீதிக்கதைகள் தேவை.ஊ…