Skip to main content

வெளிச்சம் தின்ற உடல்


ஷங்கர்

தொண்ணூறுகளின் மத்தியில் சிறுபத்திரிகைகள், சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் அருகி வரும் உயிரினங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், ‘காலச்சுவடு படியுங்கள்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி ஆட்டோ ஓட்டியவர் சிவதாணு. நாகர்கோவிலிலிருந்து சிறுவயதிலேயே சென்னை வந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் இலக்கிய வாசிப்பும் சேர்ந்திருந்தது. நடிகர்கள் பாலாசிங், நாசருடன் நேரடியான பழக்கம் இருந்தது. சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோரின் எழுத்துகளில் மட்டுமின்றி நேரிலும் பரிச்சயம் கொண்டவராக அப்போது இருந்தார். சென்னைக்கு வரும் எழுத்தாளர்கள் எல்லாரும் ஒருமுறையாவது அவருடைய ஆட்டோவில் பயணித்திருப்பார்கள். அவரது தெற்கத்தி வெள்ளந்தித்தனத்தாலும் சுபாவத்தாலும் சீக்கிரமே நிறைய நண்பர்களையும் சேர்த்திருந்தார். சுந்தர ராமசாமி சென்னை வந்தால் அவரை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ஆஸ்தான சாரதியாக ஆனார். வெகுஜனக் கதைகளுக்கும் சிறுபத்திரிகை கதைகளுக்கும் இடைப்பட்ட சில சிறுகதைகளையும் எழுதினார். அவரது ஆட்டோ பல இடங்களுக்கும் பயணப்படத் தொடங்கியது.

1999-ல் பாலு மகேந்திரா, தமிழ் சிறுகதைகளை ‘கதை நேரம்’ எடுத்துக் கொண்டிருந்த போது, சிவதாணு எழுதி குமுதத்தில் வெளியாகியிருந்த சிறுகதையை ‘ஏ ஆட்டோ’ –வாக எடுத்தார். அது சிவதாணுவைப் பொருத்தவரை மிகப்பெரிய அங்கீகாரமாக ஆனது. சிவதாணு தொடர்ந்து கதை நேரத்திலும் சில திரைப்படங்களிலும் நடித்தாரென்றாலும் அவருக்கு அமைந்த வேடங்கள் எதுவும் அழுத்தமாக அமையவில்லை. அதேசமயத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் இலக்கியவாதியாக இருப்பதை முன்னிட்டு அனைத்துப் பத்திரிகைகளிலும் அவரைப் பற்றிய கட்டுரைகளும் வெளியாகின. அவர் மீது சிறு நட்சத்திரம் ஒளி அப்போது படர்ந்திருந்தது. ஓரளவு நிலையான வருவாயை அளித்து வந்த ஆட்டோ ஓட்டுனர் தொழில் மீது அவரது கவனம் குறையத் தொடங்கிய நாட்கள் அவை. ஆட்டோவில் அவரைப் பற்றி வந்த செய்திப் பத்திரிகைகளை சீட்டுக்குப் பின்புறம் பத்திரமாக வைத்து நண்பர்களுக்குக் காண்பித்து மகிழ்வார். காசு இருக்கும் வேளைகளில் இலக்கியவாதி நண்பர்களுக்கு கணக்குப் பார்க்காமல் செலவழிப்பவராகவும் சவாரிக்குதிரையாகவும் இருந்தார்.

ஒரு வாசகராக எழுத்தாளராக அவரது அனுபவங்களை பீடிகுடித்த படியே ஆட்டோவின் முன் அமர்ந்து பேசும் அவரது சித்திரம் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. ஆட்டோவில் வாய்ப்பு கேட்டு அவர் பல சினிமா இடங்களுக்குப் போய்க்கொண்டே இருந்தார். அவரது அனுபவங்களும் ஏமாற்றங்களும் கூடிக்கொண்டிருந்தன. ஒருகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தினார். ஆட்டோ அவர் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய உயரங்களுக்குக் கொண்டு சேர்க்கவில்லை. இடையில் ‘கள்ளியங்காட்டு நீலி’ என்றொரு சிறுகதைத் தொகுப்பும் வெளியானது.

பத்திரிகைகள், ஊடகங்கள் வேறு கதைகளை ,வேறு நபர்களின் மேல் தன் வெளிச்சத்தை திருப்பிவிட்டன. சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக் கொண்டு சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர், அரசியல் செல்வாக்கு மிக்க இலக்கிய ஆளுமைகளின் உதவியுடன் மீண்டும் ஆட்டோ வாங்கவும் முயற்சித்தார். ஒருகட்டத்தில் குடும்பத்தில் பையன்கள் வளர்ந்து அவரைச் சார்ந்திருக்க வேண்டாத நிலை ஏற்பட்டது. நடுவில் ஒருமுறை பக்கவாதமும் தாக்கியது.

நீரிழிவு நோய் பாதிப்பும் இருந்த சிவதாணு, சமீபத்தில் தான் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவருக்கு நடிகர் விஜய் சேதுபதி தான் உதவியதாகத் தெரிகிறது. கண் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரத்துக்குள்ளாகவே ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்திருக்கிறார். அங்கிருக்கும் அதீத விளக்கொளியின் பாதிப்பால் வீட்டுக்கு வந்த பிறகு கண் பார்வை சரியில்லாமல் இருந்திருக்கிறது. இனி கண் தெரியாமல் போய்விடுமோ என்ற படபடப்பில் மூச்சுத்திணறல் வர இறந்துபோய்விட்டார்.

நோய் வந்துதான் மரணம் ஏற்படவேண்டுமென்பதில்லை. விரும்பிய விஷயங்கள் ஒருவருக்கு சாத்தியமாகாமல் போவதும் மரணம் தான். திடீர் ஊடக வெளிச்சமும் கவனமும் சிலருக்கு மட்டுமே நீடித்த பலன்களை அளிக்கிறது.   

(தி இந்து, கலை ஞாயிறு இணைப்பிதழில் வெளியானது)

Comments