Skip to main content

தேவதச்சன் என்னும் மஞ்சள் புத்தகம்



    

 ஷங்கர்ராமசுப்ரமணியன்



எழுபது எண்பது வருடங்களாகிவிட்ட ஒரு கலைவடிவத்தில் செயல்படுபவர்களையும் அவர்களது படைப்புகளையும் சேர்த்துப் பார்க்கும்போது ஒரு மரபைக் காணும் விழைவும் அந்தப் படைப்புகள் அந்த மரபின் தொடரிழையாகத் தெரியவருவதுமான விசேஷ அனுபவம் ஏற்படுகிறது. 30, 40 ஆண்டுகளுக்கு மேல் புத்தூக்கத்துடனும் நம்பிக்கையுடனும் நவீன கவிதை என்னும் ஊடகத்தில் செலவழித்த தேவதச்சனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது அதன் வெவ்வேறு பருவங்கள், மாறும் அழகுகள், தரையிரங்கிக் கனியும் கோலங்களைப் படிப்பது தண்ணீரில் அழுத்தும்போது ஏற்படும் மூச்சுமுட்டலையும் துக்கத்தையும் இறந்து பிறந்து இறந்து இறந்து எழும் துய்ப்பையும் தருவதாக இருந்தன. தேவதச்சனின் ஆரம்பகாலக் கவிதைகளிலிருந்து சமீபத்தில் எழுதிய இருபது முப்பது கவிதைகள் வரை வாசிக்க நேர்ந்தபோதுதான், புதுக்கவிதையிலும் புதுமைப்பித்தனின் ஒரு மரபு தொடர்வதன் தடயங்கள் கிடைத்தன. அறிவும் விமர்சனமும் அழகும் உணர்ச்சியும் இயல்பாய் சேரும் பாதை என்று அந்த தடத்தைத் தற்போது குறித்துக் கொள்ளலாமா? பிரமிள், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, ஆத்மாநாம் என அந்தப் பாதையிலிருக்கும் மரங்களை  எண்ணிப் பார்க்கிறேன். அங்கேதான் தேவதச்சனின் துவக்கமும் உள்ளது.

வாழ்வு
சாவெனத் தன்
வேசம் மாற்றிக் கொள்ளுமுன் உன்
சீட்டைக் காலி பண்ணு
நீ பாத்திரம் அது
பார்வையாளனெனத் தலை கீழாய்
நாடகம் மாறப்போகிறது

000
என்றும்
சோற்றால் பசியை
ஜெயிக்கணும் என்றால்
பசியால் சோற்றை
ஜெயிக்கணும் தான்.

தேவதச்சனின் புகழ்பெற்ற தொடக்க காலக் கவிதைகளுள் ஒன்றான இந்தக் கவிதைக்குள் புதுமைப்பித்தனின் எதிரொலி இருக்கிறது. புதுமைப்பித்தனின் ‘செல்லும் வழி இருட்டு என்பதன் தொடர்ச்சிதானே...பிரமிளின்

பாலை 


 
பார்த்த இடமெங்கும்

கண்குளிரும்

பொன்மணல்

என் பாதம் பதித்து

நடக்கும்

இடத்தில் மட்டும்

 
நிழல் தேடி

என்னோடு அலைந்து

எரிகிறது

ஒரு பிடி நிலம்.  
000

கணிதம் போன்றும் தத்துவம் போன்றும் தோற்றம் கொடுக்கும் ‘அவரவர் கைமணல் கவிதைகளை முதலில் படித்திருந்தேன். சுந்தர ராமசாமி ஆசிரியராக இருந்து கொண்டு வந்த காலச்சுவடு சிறப்பு மலரில் வெளிவந்திருந்த கவிதைகளில் ‘இலையைப் பிடிக்கும்போதெல்லாம் நடனம் நின்றுவிடுகிறது என்ற வரி கொடுத்த துயரம் எனக்கு இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. இதற்குப் பின்னர் சில வருடங்கள் ஆகியிருக்கலாம். கோவில்பட்டி தேவதச்சன் மிகவும் பிரஷ்ஷாக முப்பது, நாற்பது கவிதைகள் எழுதியிருக்கிறார். அதைப் படித்துவிட்டு வந்ததாக அறைக்கு வந்த எஸ். ராமகிருஷ்ணன் என்னிடமும் தளவாயிடமும் பகிர்ந்துகொண்டார்.

காலச்சுவடில் தீராமலர் என்ற பெயரில் அந்தக் கவிதைகள் கிட்டத்தட்ட பத்துபக்கங்கள் வந்ததாக ஞாபகம். அந்தக் கவிதைகள் தான் புதிய தலைமுறைக்குள் ஒரு புதிய முதிர்ந்த கவிஞனையும் கவிதைகளையும் அறிமுகப்படுத்தின என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து தேவதச்சன் அவரது கவிதைகளில் வரும் எல்லாப் பொருட்களையும் போல நகர்ந்துகொண்டே இருக்கிறார்.

ஒரு இடையன்

ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிறந்த தூக்குவாளிகள்
எண்ணிலிறந்த மழைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த காற்றுகள்
எண்ணிலிறந்த தொரட்டிகள்
எண்ணிலறந்த பகல்கள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்
எப்படா திறக்குமென்று

இந்தக் கவிதை எனக்கு இன்றைக்கும் கொடுக்கும் காணனுபவம் பெரியது. உண்மையில் அது என் போன்றவர்களிடம் செய்தது புரட்சி. எல்லாமே தெரிந்தவை. பழசும் புதுசுமாய் கலந்தவை. ஆனால் முற்றுப்புள்ளி இல்லாத இந்தக் கவிதை போலவே நமது அனுபவத்தை அந்தரத்தில் வைத்துவிடும் மாயத்தைச் செய்துவிடுகிறார் தேவதச்சன்.

கண், செவி, மூக்கு, விரல்கள், நாக்கு என ஐந்து புலன்களையும் தொடும் மகிழ்விக்கும் கவிதைகள் தேவதச்சனின் கவிதைகள் என்று சொல்லலாம். அறிவை ஒரு முகமறைப்பைப் போல திரைச்சீலை போல மெல்லிய ஆபரணத்தைப் போல இல்லாதது போல தோன்றும் இருப்பாய் தன் கவிதைகளில் வைத்துள்ளார். தமிழ்க் கவிதையில் அதுவரை கவிதை சொல்லியாக இருந்த சமூகவயமான நானின் இடத்தை பறவை உட்காரும் கிளைகளில் தண்ணீரில் துள்ளும் தவளையின் கல்லின் இடத்தில் வைத்துவிடுகிறார். அறம் பாவம் என்னும் அருங்கயிற்றுக் கட்டிலிருந்து தமிழ்க் கவிதையை முற்றிலுமாக விடுவித்தவர் தேவதச்சன் என்று சொல்லலாம். அதனால் தான் தேவதச்சனின் கண்கள் துண்டிக்கப்பட்ட காண்நிலைகளை உணர்நிலைகளை அதன் வேதிவினை துவங்கும்போதே பார்க்கிறது. தேவதச்சன் தரும் அனுபவம் பச்சையாக மஞ்சளாக இருக்கின்றன. மிகச் சிறிய யானைக்குட்டி மற்றும் வேப்பங்கன்றின் மேல் அந்தக் கண்களால் தான் கவனம் குவிக்கமுடிகிறது.  தேவதச்சனின் கவிதைகளை பெருஞ்சமூகம் படிக்காத வேறொரு மஞ்சள் புத்தகமாகவும் படிக்கமுடியும்.   

இடம் மணமாக, உணர்ச்சி பேரோலியாக மாறும் ரகசியப் புத்தகம் அது. பல்வேறு கதவுகள் திறந்து ரகசிய அறையில் கபாடபுரத்தில் இருக்கும் கருநாவல் பழத்தை அவர் தொடும்போது அந்தப் பிசுபிசுப்பு நம்மையும் அதனால்தான் தழுவிக்கொள்கிறது.

நள்ளிரவில்

நள்ளிரவில்-
மங்கிய மஞ்சள் ஒளி
ரயிலில்,
திடீரென்று கொட்டிப்
பரவுகிறது
நறுமணத் திரவம்
எல்லோரும் இறங்கி
எல்லோரும் ஏற
கிளம்பியது ரயில்
வாசனையூரிலிருந்து, என்றும்
தண்டவாளத்தில்
இல்லாத
வாசனை ஊர்களிலிருந்து...
000



இலக்கியப்பூர்வமான உரைநடையோடு பேச்சுமொழியை சரியாக வைப்பதும் தேவதச்சன் தரும் அபூர்வ புலன் அனுபவங்களில் ஒன்றே. அத்துவான வேளை என்று தென் தமிழகத்தில் சொல்லப்படுவதை அவர் அத்துவான வேளையாக தன் உலகுக்குள் செரித்து வெளிப்படுத்துகிறார். எப்படா திறக்குமென்று, எப்பவாவது, என்னவோ என எத்தனையோ நிறங்களும் உணர்வுகளும் நினைவுகளும் கொண்ட பேச்சுமொழியை இவர் ஒரு சிட்டிகை இடும்போது கரிசல் கதை சொல்லிகளில் ஒருவராக ஆகிவிடுகிறார்.

இன்னும் தாதி கழுவாத

இன்னும்
தாதி கழுவாத
இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின்-
பழைய சட்டை என்று ஏதும் இல்லை
பழைய வீடு என்று ஏதும் இல்லை
மெல்லத் திறக்கும் கண்களால்
எந்த உலகை
புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி, அதை
எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்கட்டி.

அறிவார்த்தமான திகைப்பு முதல் பகுதியில் இக்கவிதையில் இருக்கிறது. உண்மையும் இருக்கிறது. எந்த உலகைப் புதுசாக்க வந்தாய் செல்லக்குட்டி அதை எப்படி ஆக்குகிறாய் தங்கக்கட்டி என்னும்போது அது பாடலின் மனவிரிவை அடைந்துவிடுகிறது. 

அம்மா இறந்த வீட்டில் நள்ளிரவில் கணவனுடன் புணரும் மகளைப் பற்றிய கவிதையில் மர்மமான துய்ப்பனுபவமும் அதேவேளையில் புரிபடாத தனிமையையும் சாத்தியப்படுத்துகிறார். காலிச்சேர்கள், உறங்குபவர்கள், எல்லாவற்றையும் பார்க்க சாத்தியப்பட்ட நிலவு என அது ஒரு விபரீதத்தன்மையையும் கொண்டுவிடுகிறது. புலனாகும் பெண்மை புலனாகாத பெண்மை என விதவிதமான பெண்மைகள் பல்வேறு நிறங்களில் பல்வேறு பருவங்களில் தேவதச்சனின் கவிதைகளிலேயே அதிகமாகப் பேசப்பட்டுள்ளன.  

அவர் துண்டிக்கும் காட்சிகள் உரையாடல்களுக்குள் யாருக்கும் அடைபடாமல் மனிதனை அலையவைக்கும் அலைக்கழிப்பும் இரண்டு கிளாஸ்களில் இருக்கும் பழச்சாறுகளைப் போன்ற தனிமை உணர்வும் கிடைக்கிறது.

நினைவுத் தொடர்ச்சிக்கும் கதைக்கும் காரண காரியத் தொடர்புகளுக்கும் எதிரான நிலையில் தான் கவிதைகள் இயங்குகின்றன என்ற பிரக்ஞையை நம்பிக்கையை இன்னும் தீவிரமாக வலுப்படுத்துபவை தேவதச்சனின் கவிதைகள். துண்டித்தல், பறத்தல், காலியாதல், நிரம்புதல், மீண்டும் காலியாகுதல் என மனதைக் கீழே விட்டு விட்டுப் பறப்பவை என்று தேவதச்சனின் கவிதைகளைச் சொல்ல்லாம்.

புறா படபடத்துப் பறக்கும்போது மனம் விடுத்து பறக்கிறோம் நாம். தானியங்களின் மீது ஒவ்வொரு கொத்து கொத்தும்போதும் மனம் புறாவோடு சிதறுகிறது. மனம் விடுத்து தற்கணத்தைக் கொத்த அழைக்கும் தமிழ் மொழியின் அழகிய பறவைகள் என்றும் தரைக்கு மேல் சற்று பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் என்றும் தேவதச்சனின் கவிதைகளைச் சொல்வேன்.   

தேவதச்சனின் கவிதைகளின் துவக்க அனுபவமாக வசீகர ஒழுங்கையும் மகிழ்ச்சியையும் ருசியையும் மென்மையையும் தருவதாகவும் ஆழத்தில் பிரபஞ்சத்தில் தொடர்ந்து நிகழும் பெரும் குழப்படி, துயரம் மற்றும் காம மூர்க்கத்தைக் கொண்டதாகவும் உள்ளது. தேவதச்சனின் சமீபத்திய கவிதைகள் தரையிரங்கி, பூமியின் அழுக்கையும் மனிதர்களின் கண்ணீரையும் ஏற்றவையாக இருக்கின்றன.

நவீன மனிதன் ஒரு அடையாள அட்டையாக, ஒரு எண்ணாக, மர்ம நபராக சுருக்கப்படும் நிலையை அதன் துயரத்தை அவர் தீராமல் எழுதத் தொடங்கியிருக்கிறார். அவரது நேர்ப்பேச்சில் ஒரு புதிய போர்வீரனாக கனிந்திருப்பது போலவே கவிதைகளும் அச்சத்திலும் நேசத்திலும் கனிந்துள்ளது. வறல் ஆறு கவிதையில் உள்ள நம்பிக்கை இப்போதைய கவிதைகளில் இல்லை. உலகத்தின் கடைசி வரிகளை அவரும் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

தேவதச்சனுக்கான கட்டுரைக்காக ஒட்டுமொத்தமாகக் கவிதைகளைப் படிக்கும்போது, தற்செயலாக ரெட்டியப்பட்டி சுவாமிகள் பற்றி எழுதப்பட்ட புத்தகமும் கிடைத்தது. மனம் எல்லாவற்றையும் இப்போதெல்லாம் கோத்துப் பார்க்கிறது. தேவதச்சன் வசிக்கும் கோவில்பட்டிக்கும் ரெட்டியப்பட்டிக்கும் கொஞ்சம் தூரம் தான். அவர் நிஷ்டை அடைந்த இடம் குற்றாலம் செண்பகா தேவி அருவி பக்கத்தில் உள்ள குகை. ஒரு வருடத்துக்கும் மேல் அவர் அங்கே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கோடையில் அருவியின் தேசலான கோவண வழிசலையும் மழைக்காலங்களில்  பிரளயம் போல் மூர்க்கமாக அலறும் வேகத்தையும்  என பகலிரவாக எத்தனை பருவங்களில் அருவியைப் பார்த்திருப்பார் என்று கற்பனை செய்தேன்.
அவ்வளவு ரகசியமான இடங்களுக்கு எந்த ரகசியத்தைத் தேடி இவர்கள் அத்தனை இருட்டுக்கும் மரணத்துக்கும் துணிகிறார்கள்?

காலத்தின் காலிடையில் எத்தனை பேரோடைகள் ஓடியிருக்கின்றன?
ஞானம் அடைவதற்கு முன்னர் இந்தக் கட்டை கொஞ்சமா அழுதது உடையவனிடத்தில் என்று சொல்கிறார் ரெட்டியப்பட்டி சுவாமிகள்.
தேவதச்சனின் கவிதைகள் அடைந்திருக்கும் அமைதி மற்றும் கனிவுக்கு முன்னர் தான் எவ்வளவு உரக்கச் சிரித்திருக்கிறார்...இந்த உலகத்தைப் பார்த்து...கருத்துகளைப் பார்த்து ...கோஷங்களைப் பார்த்து...எவ்வளவு உயரப் பறந்திருக்கிறார்....லௌகீகத்துக்கு மேலே

தேவதச்சனால் தாக்கமுறாத இத்தலைமுறைக் கவிஞர்கள் அரிதாகவே இருக்கக் கூடும். தேவதச்சனின் நகல்கள் கூட இங்கே உருவாகி விட்டன. தேவதச்சனின் காண்நிலைகளை நெஞ்சில் சுமந்துகொண்டே நடை சென்ற ஒரு பருவம் எனக்கும் இருக்கிறது. ‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் தொகுப்பில் உள்ள கவிதைகளில் தேவதச்சன் அந்தக் கவிதைகளின் உணர்நிலையோடு இருக்கிறார்.
தேவதச்சனின் கண்ணாடியை யார் வேண்டுமானாலும் இரவல் வாங்கலாம். ஆனால் யாருக்கும் பொருந்தாது. நிஷ்டை என்னும் கண்களை யாரும் பெறமுடியாது.
தேவதச்சனுக்கு எனது மனம் கனிந்த நேசம்.         

Comments