Skip to main content

துயரத்தைத் தவிர்ப்பது அல்ல; அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை

லிசா ஓ கெல்லி | தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் குடியேறிய தமிழ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் பால் கலாநிதி. நரம்பியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அறுவை சிகிச்சைப் பயிற்சி, ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருந்த அவருக்கு, 36 வயதில் அரிதான நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறியப்பட்ட பின்னரும் உடல் மோசமாகத் தளர்ந்துபோகும்வரை சிக்கலான அறுவைசிகிச்சைகளைச் செய்த அவர், சக்கர நாற்காலியில் இருந்தபடி தன் நினைவுக்குறிப்புகளை நூலாகவும் எழுதத் தொடங்கினார். மரணத்தை எப்படிப்பட்ட நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் அரிய உதாரணம் அந்த நூல். 37 வயதில் காலமான பால் கலாநிதியின் மனைவி லூசி கலாநிதியின் நேர்காணல் இது…

பால் கலாநிதியினுடைய புத்தகத்தின் வெற்றி உங்களை ஆச்சரியமடைய வைத்ததா?

நினைத்தே பார்க்கமுடியாத வரவேற்பு கிடைத்தது. அது முறைப்படி வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் இறக்கும் நிலையில் எழுதப்பட்டு, அதை எழுதியவர் இறந்துபோயிருந்த சூழலில் வெளியான ஒரு புத்தகத்தை மக்கள் படிப்பார்களா என்பது பெரும் கேள்வியாகவே இருந்தது. எந்த நிச்சயத்தன்மையும் இல்லாமல் இருந்தது. ஆனால், மக்கள் வாசித்தார்கள். ஏனென்றால் அந்தப் புத்தகம் இறப்பது குறித்தது மட்டுமல்ல, வாழ்வது குறித்தும் பேசியிருக்கிறது. கலாநிதிக்கு என்ன நடந்ததோ, அது எல்லோருக்குமான அனுபவம் என்பதும், அத்துடன் மிகவும் எழிலார்ந்த வகையில் அது வெளிப்படுத்தப்பட்டிருந்ததும் அத்தகைய வரவேற்பு கிடைத்ததற்குக் காரணமாக இருக்கலாம்.

உங்கள் கணவரின் இறப்புக்குப் பின்னர், அவரது இறப்புக்காகவே புகழ்பெற்றிருப்பது குறித்து நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?

வலி கலந்த மகிழ்ச்சி என்று சொல்வது உள்ளத்தில் இருப்பதை மறைப்பதாகவே இருக்கும். அந்தப் புத்தகத்துக்குக் கிடைக்கும் வரவேற்பின் மூலம், அவரது பெருமை அதிகரித்து வருவதைப் பார்ப்பது அருமையான அனுபவமாக இருக்கிறது. இது எனக்கு மிகவும் அர்த்தப்பூர்வமானது.
கலாநிதி இறந்து ஒரு வருடம் ஆகிறது. காலம் நகராதது போலத்தான் உள்ளது. அவரைப் பற்றி இன்னும் நினைத்துக்கொண்டிருக்கவும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவும் விரும்புகிறேன். அவரைப் பற்றி தனியாக நினைத்துக் கொண்டிருப்பதைவிட நிறைய பேரோடு சேர்ந்து நினைவுகூர்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் உதவியாக உள்ளது.
தன் புத்தகத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்துப் பால் கலாநிதி எப்படி உணர்ந்திருப்பார்?

அவர் மிகுந்த உற்சாகமடைந்திருப்பார். அவர் கண்கள் பளபளப்பாக மின்னியிருக்கும். அந்தப் புத்தகத்தை மையமிட்டு நடக்கும் பேச்சில் மகிழ்ச்சியோடு பங்கெடுத்திருப்பார். ஏனெனில், மரணம் மற்றும் அதன் இயல்பு குறித்து அவர் மிகுந்த சுவாரசியம் கொண்டிருந்தார்.

உங்கள் திருமண உறவில் நிலவிய சிக்கல்கள் குறித்து அந்தப் புத்தகத்தில் அவர் எழுதுவதை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

எனக்கு அதைப் பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் கலாநிதி ஒரு தனிமை விரும்பி என்பதால், அந்தப் பகுதியை முதலில் அகற்றச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பின்னர், அதுவும் அந்தக் கதையின் ஒரு அங்கமென்றும் அப்புத்தகத்தின் உண்மைத்தன்மைக்கு அது அவசியமென்றும் நினைத்தேன். மக்கள் உண்மைத்தன்மையை விரும்புவார்கள் என்பதால், புத்தகத்தில் அந்தப் பகுதி இருக்கட்டும் எனவும் அது பகிரப்பட வேண்டுமென்றும் உணர்ந்தேன். இப்போது அது குறித்துப் பெருமிதப்படுகிறேன்.

அவருக்கு வந்த புற்றுநோய்தான், உங்களை மறுபடியும் இணைத்து உங்கள் திருமணத்தையும் காப்பாற்றியது என்பது இதயத்தை நொறுக்கச் செய்யும் நகைமுரண் இல்லையா?

ஆமாம். ஆனால், அதுதான் சரியான சந்தர்ப்பமென்று இப்போது நினைக்கிறேன். ஏனென்றால் அவருக்குப் புற்றுநோய் இருந்தது கண்டறியப்படுவதற்கு முன்னர், எங்களுடைய பிரச்சினைகள் உச்சத்துக்குப் போய்ப் பேசித் தீர்க்க முடியாத நிலைக்குச் சென்றிருந்தது. நாங்கள் எங்கள் பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொண்டிருக்காவிட்டால், என்ன நடந்திருக்கக் கூடும் என்பது குறித்து நினைத்துப் பார்க்கவே திகைப்பாக உள்ளது. நோய் தாக்கியதாலேயே எங்கள் உறவில் மீண்டும் நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ள முடிந்தது. அவருக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று தெரியவருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத் தொடங்கினோம். அதுதான் பிரச்சினையை எதிர்கொள்ளும் வலுவான மனநிலையை எங்களுக்கு வழங்கியதாக நினைக்கிறேன்.


தந்தையாக அதிக நாட்கள் இருக்கமாட்டார் என்னும் நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தது, அத்தனை எளிதாக இருந்ததா?

அத்தனை எளிதாக இல்லை. மிகுந்த யோசனைக்குப் பிறகு எடுத்த முடிவு அது என்பதை நீங்களே உணரமுடியும். நாங்கள் அத்தனை சாத்தியங்களையும் பரிசீலித்தோம். குழந்தை வளர்வதைப் பார்ப்பதற்கு அவர் இருக்கமாட்டார் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. அவர் இறந்த பிறகு நான் தனியாளாகக் குழந்தையை வளர்ப்பது என்பதையும் சேர்த்தே ஆலோசித்தோம். அவருக்கு நோய் கண்டறியப்பட்ட நிலையில், முதல்முறையாக அதைப் பற்றி பேசத் தொடங்கினோம். ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு அது குறித்த நிச்சயமற்ற நிலையிலேயே இருந்தோம்.
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு இருவருக்குமே இருந்தது. குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இருவருமே கவலை கொண்டிருந்தோம். மரணப் படுக்கையில் குழந்தைக்கு விடை தருவது கலாநிதியின் இறுதி நிமிடங்களில் மரணத்தை மேலும் வலியுள்ளதாக்கும் என்று பயந்தேன். “அப்படியிருந்தால் தான் என்ன?” என்று அவர் கேட்டார். துயரத்தைத் தவிர்ப்பதல்ல வாழ்க்கை, அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை என்பது அவருடைய பார்வையாக இருந்தது. குழந்தை பெறும் முடிவு என்பது கூடுதல் நிச்சயமற்றதன்மையை நாமே வலிந்து அழைப்பது, வாழ்க்கையில் கூடுதல் வலியை உருவாக்கும் சாத்தியமுள்ள ஆபத்தான விஷயமாகவே இருக்கப்போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. ஆனால், நான் எடுத்த சிறந்த முடிவு இதுதான்.

கலாநிதி, நுரையீரல் புற்றுநோயின் முதல் தாக்குதலுக்குப் பிறகு பணிக்குத் திரும்ப முடிவெடுத்ததை உங்களால் புரிந்துகொள்ள முடிந்ததா?

அவரை நான் தெரிந்துகொண்டிருந்த அளவில், அவரது முடிவை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரது நிலையில் இருக்கும் வேறு யாரும், மீண்டும் பணிக்குச் சென்றிருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான முன்னுரிமைகள் இருக்கும். அத்துடன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றுவதற்கும் ஒரு நூலை எழுதுவதற்கும் குறிப்பிட்ட அளவு வலியைக் கலாநிதி தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அவர் இயற்கையாகவே கற்றுக்கொள்பவராக இருந்தார். ஊக்கமும் ஆர்வமும் கூடியவராகவும் உணர்ச்சிவசப்படாதவராகவும் இருந்தார். அவரது ஆளுமையின் அங்கமாக அந்த வேலை இருந்தது என்பதே அதற்குச் சாட்சி.

கலாநிதியின் கடவுள் நம்பிக்கை நூல் மதிப்புரையாளர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஒரு விஞ்ஞானி, கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பதை ஆச்சரியமான விஷயமாக நீங்களும் நினைக்கிறீர்களா?

அவர் சிறந்த விஞ்ஞானியாக இருந்தார். ஆனால் மனிதார்த்தம் என்றால் என்னவென்பதை அனுபவ அறிவு சார்ந்த விஞ்ஞானம் அவருக்கு விளக்கவில்லை. “நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?” என்று அவரிடம் நான் ஒருமுறை நேரடியாகக் கேட்டேன். “நேசத்தில் உனக்கு நம்பிக்கை உள்ளதா?” என்கிற கேள்வியளவுக்கு முக்கியமான கேள்வி அது என்று தான் நினைப்பதாகவும், நேசத்தின் மீது நம்பிக்கையுண்டு என்றுதான் நான் சொல்வேன் என்றும் அவர் பதிலளித்தார். அது என்னை மிகவும் ஈர்த்தது. நானும் அதையேதான் பதிலாகக் கூறுவேன்.

உங்கள் கணவர் எழுதிய புத்தகத்துக்குப் பின்னுரை எழுதுவது நிச்சயம் சங்கடமாக இருந்திருக்கும் அல்லவா. அதை எப்படி அணுகுகிறீர்கள்?

நான் என்னை ஒரு எழுத்தாளர் என்று கருதியதே இல்லை என்பதுதான் மிகவும் சிரமமான விஷயம். நான் ஒரு மருத்துவர். என்னால் மருத்துவ அட்டவணையையும் தகவல்களையும் எழுதமுடியும். ஆனால், ஒரு கட்டுரையை எழுத வலியுறுத்தப்படுவேன் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை. அதனால்தான் கலாநிதியின் எடிட்டர் என்னைப் பின்னுரை எழுதுமாறு கேட்டபோது, நான் அதிர்ச்சியடைந்தேன். இருந்தாலும், அந்தத் தன்வரலாறு முழுமை அடையவில்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன்; தான் எப்படி மரணமடைந்தேன் என்பதைக் கலாநிதியால் விவரித்திருந்திருக்க முடியுமென்றால், நிறைவுப் பகுதியை நிச்சயம் அவர் எழுதியிருப்பார் என்பதையும் உணர்ந்தேன்.
அவர் இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதை எழுதினேன். அது மிகவும் மோசமான காலம். ஆனால், அதை எழுதுவது மிகவும் உதவியாக இருந்தது. அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.


கலாநிதி எழுதியிருந்த கடைசிப் பத்தியில் உங்கள் மகள் கேடி (Cady) அவரிடம் ஏற்படுத்தியிருந்த சந்தோஷம் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கலாநிதி குறித்து அவளிடம் என்ன சொல்லப் போகிறீர்கள்?

நான் அவளிடம் நிறைய விஷயங்களைச் சொல்வேன். ஆனால் ஒருவிதத்தில் அந்தப் புத்தகமே அவள் அறிய விரும்புவது அனைத்தையும் சொல்லிவிடும். மரணத்துக்குப் பிறகு தன் மகளிடம் தொடர்புகொள்வதற்கான வழியாக எழுத்து அவருக்கு இருந்துள்ளது. அதை வாசிப்பதன் வழியாகவும், அவளுக்காக என்னிடம் அவர் விட்டுச் சென்றுள்ள பொருட்கள் மூலமாகவும் எந்த அளவுக்கு அவரால் நேசிக்கப்பட்டாள் என்பதை அவள் புரிந்துகொள்வாள்.

உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்?

”அந்த வீட்டிலேயேதான் தொடர்ந்து இருக்கப் போகிறாயா?” என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று தீர்மானித்துள்ளேன். கலாநிதியும் நானும் வாழ்ந்த, நாங்கள் மூவரும் சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்த வீடுதான் எங்கள் வீடு. அதில்தான் நானும் கேடியும் தற்போது வாழ்கிறோம். அந்த இடத்தைக் கொஞ்சம் சீர்படுத்த வேண்டியுள்ளது. அப்போதுதான் ஒரு மருத்துவராகவும் ஒரு விதவையாகவும் ஒரு தாயாகவும் என்னால் முன்னகர்ந்து செல்ல முடியும்.
கலாநிதி பயன்படுத்திய பல பொருட்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் எல்லாச் சுவர்களுக்கு வெள்ளை வண்ணமடித்தேன். புத்தக அலமாரிகளை மாற்றியமைத்தேன். நான் மெதுவாக விஷயங்களை மாற்றிக்கொண்டிருக்கிறேன்.
கலாநிதிக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன், நான் மறுதிருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவர் நினைத்தார். அவர் அதை மிகுந்த நேசத்துடன் சொன்னபோதும், அந்த நேரத்தில் எனக்கு அது மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது. இப்போதுள்ள நிலையில், நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டாலும், கலாநிதியை எனது வாழ்க்கை முழுவதும் நேசிப்பவளாகவே இருப்பேன். எனது இறந்த காலத்திலும் எனது எதிர்காலத்திலும் அவர் வியாபித்திருப்பார்.
© தி கார்டியன்

Comments

Popular posts from this blog

ஆனந்தா ஆற்றில் இறங்காதே

ஓஷோ  ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த தாகம் மற்றும் சோர்வை உணர்கிறேன்” என்றார். ஆனந்தா வந்த வழியிலேயே திரும்பிச் சென்றான். ஆனால் அவன் அந்தச் சிறு நீரோடையை அடையும்போது, அவனுக்கு முன்னால் சென்ற சில மாட்டு வண்டிகள் நீரோடைக்குள் இறங்கித் தாண்டிச் சென்றதால், அந்த நீரோடை முழுவதும் கலங்கிச் சேறாகிவிட்டது. நீரினடியில் கிடந்த இலைகளும் மேலே வந்துவிட்டன. புத்தனின் சீடன் ஆனந்தா, நீரோடையின் நிலையைப் பார்த்துவிட்டு, இந்தத் தண்ணீரைக் குடிக்கவே முடியாது என்று நினைத்து, வெறும் கையுடன் திரும்பிவிட்டான். “நீங்கள் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பொறுங்கள். அடுத்த இரண்டு மூன்று மைல்களில் ஒரு பெரிய நதி ஒன்று இருக்கிறது. அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்று புத்தரிடம் கூறினான். ஆனால் புத்தரோ, மறுபடியும் சிறு நீரோடைக்க…

மாறும் நிலங்களை மொழிபெயர்க்கும் கவிஞன்

சிறுவயதிலேயே ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலைப் படித்துவிட்டு உற்பத்தி உறவுகளின் கதையாக இந்த உலகத்தின் கதையை வாசிக்கத் தெரிந்த இந்திய, தமிழ் குடியானவன்.
யவனிகா என்று இவர் வைத்த பெயர் எழுத்தாளர் சுஜாதா நாவலின் பெயராக பின்னால் ஆனது. 1990-களில் ஏற்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பாரம்பரியத்தொழிலை இழந்தவர்களில் ஒருவர். தலித் அரசியல், தலித் இலக்கியம், சோவியத் உடைவுக்குப் பின் மார்க்சியம் சந்தித்த நெருக்கடி, பின் நவீனத்துவ,அமைப்பியல் கோட்பாட்டு விவாதங்களும் இவரது கவிதையில் கதைகளாக, கதாபாத்திரங்களாக, குழந்தைகள் விளையாடும் கூழாங்கற்களைப் போல உருளுகின்றன.
வியாபாரத்துக்காக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அலையத் தொடங்கியபோது இவரது கவிதைகளில் மாறும் நிலங்கள், தாவரங்கள் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும். சிறு துணி வணிகனாக கிழக்கு ஆசிய நாடுகளிலும் பயணம் செய்யத் தொடங்கியபோது, ஒரு புதிய வர்த்தகக் காலனியாக உருவாகி மேல்கீழாக மாறப்போகும் இந்தியாவின் நிலங்களை மனிதர்களை தீர்க்க தரிசனமாகப் பார்த்துவிட்டான் யவனிகா. அப்படியாக ஊகித்து உணர்ந்த அவனது கவிதைகளின் முதல் தொகுதிதான் ‘இரவு என்பது உறங்க அல்ல’. இரவு என்ப…

குரங்குகள் சொல்லும் நீதிக்கதை

ஷங்கர்ராமசுப்ரமணியன் 
அம்மா புகட்டிய காலத்திலிருந்து எனக்கு நீதிக்கதைகள் இன்றுவரை தேவையாகவே இருக்கின்றன. எளிய நீதிக்கதைகள் முதல் சிக்கலான நீதிக்கதைகள் வரைத் தேடித்தேடி அவை சொல்லும் நெறிமுறைகள் வழியாக, எனது அன்றாடத்துக்குள்ளும், என்னைச் சுற்றி நடக்கும் துயரமும் ரணமும் சிறு இளைப்பாறுதல்களும் கூடிய நிகழ்ச்சிகள், அபத்தங்கள், புதிர்களுக்குள்ளும் ஒரு ஒழுங்கை நான் கற்பிக்கவோ புனரமைக்கவோ செய்கிறேன்.
என்னைச் சுற்றி நடக்கும் ஒரு நிகழ்வுக்கு கால, வெளிப் பரப்பளவில் மிக அருகிலிருக்கும், கைக்குத் தென்படும் காரண காரியங்களைத் தேடாமல், என் வாழ்வுக்கு அப்பாலும் முன்பும் காரணம் இருக்கலாம்; மனிதத்துவத்துக்கு அப்பாற்பட்ட காரணமும் இருக்கலாம்; அதனால் சஞ்சலமில்லாமல் புகார்கள் இல்லாமல் அமைதியாக இரு என்பதை என் தலையில் குட்டிக் குட்டி உணர்த்தும் நீதிக்கதைகள் அடிக்கடி தேவையெனக்கு.
கட்டற்ற நுகர்வு ஒன்றே வாழ்வென்றாகிவிட்ட இக்காலகட்டத்தில் அடங்கவேயடங்காத புலன்கள் வழிநடத்தும், குறுக்கும்நெடுக்குமான சபலத்தின் பாதைகளில் திரியும் நவீன மனிதனுக்கு, மேலதிகமாக தற்காலத்தின் பாடுகளையும் அகப்படுத்தியிருக்கும் நீதிக்கதைகள் தேவை.ஊ…