Skip to main content

Humpty Dumpty had a great fall

 ஷங்கர்ராமசுப்ரமணியன்

 

நான் திருநெல்வேலியிலிருந்து

இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு

பிழைக்க வந்தவன்.

அசாமிலிருந்து புலம்பெயர் தொழிலாளியாக

வந்திருந்த ஹம்டி டம்டியை

நேற்று மாலை

நான் மைலாப்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்தபோது

அவன் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து

கீழே விழுந்து சற்றே புரண்டு

மரணத்திலிருந்து தப்பி எழுந்துகொண்டிருந்தான்.

ஐயோ என்று ஓடினேன்

அடுத்த ரயிலில் பொறுமையாக ஏறினால்

என்ன கேடு என்று ஒரு பெரியவர்

ஹம்டி டம்டியை அடித்தார்

தகவல் போய் சேர்வதற்கே ஒரு வாரம் ஆகிவிடும்

என்றார் 

கழுத்தில் அடையாள அட்டை மாட்டிய 

நடுத்தர வயது மென்பொறியாளர்

‘ஜஸ்ட் மிஸ்ட்’ என்று சொல்லிவிட்டு

இரண்டு கல்லூரி மாணவிகள்

வாட்ஸ்அப்புக்குள் நுழைந்துவிட்டனர்

நான் ஹம்டி டம்டியின் தடித்த புட்டத்தைத் தட்டிக்கொடுத்து

சிரித்தேன்

ரயில்வே நிலையக் காவலர்கள் வந்தனர்

ஹம்டி டம்டியை அழைத்துச் சென்றனர்

ஹம்டி டம்டி என்னைத் திரும்பிப் பார்த்து சிரித்தபடி போனான்

நானும் உன்னைப் போல ஹம்டி டம்டிதான்

திரும்பத் திரும்ப விழுகிறேன்

முழுமையாக உடைவதில்லை என்றேன்

அவனுக்கு எல்லாமே புரிந்துவிட்டது சிரித்தான்

அவன் காவலர்களுடன் சென்றபோது

அவனது ஜீன்ஸுக்குள் பிதுங்கி ஆடிய

யானைப்புட்டங்கள் எனக்கு

ஏனோ விடுதலையான சந்தோஷத்தை அளித்தது.  


 

Comments