Skip to main content

எனது ஞாபக சீதா முன்னுரை

  ஒளி ஏறவேண்டும் வார்த்தைகள் 






எனது கவிதைகளில் சுபாவமாகப் புழங்கும் விலங்குகள் குறித்து நான் அதிகம் யோசித்துப் பார்த்ததில்லை. அது எனது உலகில் உள்ள எதார்த்தம் என்பதாக மட்டுமே நான் எண்ணியிருந்திருக்கலாம். கவிஞர் ச.முத்துவேல் தனது முகநூல் குறிப்பு ஒன்றில் என் கவிதைகளில் வரும் மிருகங்கள் குறித்துக் கவனப்படுத்தி எழுதியிருந்தார். எனக்கு அவரது குறிப்பு, விசேஷமான உற்சாகத்தைச் சில நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தது. எனது பிரஜைகளுக்குக் கவனம் கிடைக்கிறதென்ற சந்தோஷம் அது. எனது கவிதைகளில் இத்தனை பிராணிகளுக்கு ஏன் இடம் கொடுத்திருக்கிறேன் என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கான பதிலை நான் நகுலனின் ‘வீடணன் தனிமொழி’ கவிதையிலிருந்து தான் யோசிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ராவணன் தன் தம்பி வீடணனைப் பார்த்து, ‘ஒரு எறும்பைக் கூட இத்தனை சிரத்தையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பாயோ?’ என்று கேட்பான். தன்னைத் தவிர பிற உயிர்களை வேடிக்கை பார்ப்பதில் பிறிதின் விஷயங்களுடன் ஈடுபடுவதில் தோல்வியுற்ற துரியோதனனின் அகந்தை களையும் என்று எனது மகாபாரதக் கவிதை ஒன்றில் எழுதியும் இருக்கிறேன். ( சுயபோதை தெளியும்/குளம்/ தோல்வியில்/ சிறுகணமாவது/ இருப்பதும்/ நல்லதே/ சிற்றுயிர்களான/ மீன்/ பாம்புகளோடு/ பேச/ இது ஒரு சந்தர்ப்பம்)

நவகுஞ்சரம் என்ற புராணிக  உயிரினம் பற்றி நண்பர் காந்தி என்னிடம் பகிர்ந்துகொண்டபோது எனது கவிதைகளில் வரும் பிராணிகள் பற்றி எனக்குக் கொஞ்சம் கூடுதலாக விளக்கம் கிடைக்கிறது. சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி,  குதிரையின் கால், மனிதனின் கையுடன் கூடிய ஒரு பறவை அது.

மனிதனின் எண்ணங்களும் அனுபவங்களும் வரையறைக்குட்பட்டது. அவனது எல்லைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ நிகழ்வுகளும் உயிர்களும், வாழ்க்கைகளும் இந்த உலகில் சாத்தியம் என்று அர்ஜூனனுக்குப் புலப்படுத்திய அந்த நவகுஞ்சரம் எனது தோட்டத்தில் மிகச் சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கும் அழகிய உயிர்.

இந்தப் புதிய தொகுப்புக்கு ‘ஒளியேறிய வார்த்தைகள்’ என்ற தலைப்பை முன்னர் உத்தேசித்திருந்தேன். ஒரு அதிகாலையில் வந்த கனவில் ‘ஞாபகசீதே’ என்று கூப்பிடும் குரல் கேட்டு எழுந்தேன். அதுதான் ‘ஞாபகசீதா’ என்றாகியுள்ளது.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகளைச் சேர்ந்து படிக்கும்போது, ‘தென்னங்குறும்பை’ யும் அதன் கூர்மையும், என் பால்ய ஆற்றலை மீட்கும் அருமையான படிமமாக சில கவிதைகளில் இடம்பெற்றுள்ளது. நிலக்காட்சிகள் மற்றும் பெருமரங்களை நோக்கி ஏக்கத்துடன் நானும் என் கவிதைகளும் போகிறோம்.  மாறிவரும் காட்சித் தொழில்நுட்பங்கள், எனது காட்சி அனுபவத்தைக் கூர்மைப்படுத்தியுள்ளன- முப்பரிமாணத்தில் அவதார் திரைப்படம் பார்த்த பின்னர் எனது பார்வை அனுபவம் முற்றிலும் மாறியதைப் போல.

சில கார்டூன் சித்திரங்களும், திரைப்படங்களும் இத்தொகுதியில் உள்ள சில கவிதைகளைத் தூண்டியுள்ளன- பாலுறவுக்காட்சி சார்ந்த ஒரு ஓவியம், அரிதான வகையில் நமது பாலுணர்வைப் புதுப்பிப்பதைப் போல.

சமீப நாட்களாக செவ்வரளிப் பூக்கள் கொத்துக்கொத்தாக கண்முன்னால் பூத்து, கவனத்தை ஈர்க்கின்றன. இதற்கு என்ன அர்த்தமென்று தெரியவில்லை. அதீத சந்தோஷம், அதீத துக்கம் என முயங்கிக் கலங்கி அலையும் நாட்கள் இவை. நடப்பவை எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறதென்ற மூடநம்பிக்கைக்கும், ஒரு மகத்தான குழப்படியின் ஒரு கண்ணிதான் எனது அன்றாட வாழ்க்கையென்ற அறிவார்ந்த முடிவுக்குமிடையே ஊசலாடுபவனாக இருக்கிறேன். குழந்தை வினுபவித்ரா மனோபலத்தைத் தருபவளாக இருக்கிறாள்.

நாட்களைத் தொடர்ந்து ஒளியூட்டுபவளாக ‘ஞாபக சீதா’ இருக்கிறாள். நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் சுயாதீனமானதல்ல; எனது பிராணவாயுவுக்கு இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நலமாய் இருக்க வேண்டும் என்பதை நான் உணரும் நாட்கள் இவை.

இத்தொகுப்பை ஆத்மார்த்தத்துடன் எடிட் செய்து தந்த மண்குதிரை என்ற ஜெய்குமாருக்கு என் அன்பு. இதை நூலாக வெளியிடும் ‘புது எழுத்து’ மனோண்மணிக்கு நன்றி.    

புறனடை இதழின் நேர்காணலுக்காக அறிமுகமாகி, மனதுக்கு நெருக்கமான நண்பராகத் தொடரும் பிரவீண் குமாருக்கு இத்தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன்.

05 அக்டோபர் 2015                   
வேளச்சேரி

Comments

karur karthik said…
லவ் யூ சங்கர்