Skip to main content

ஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை

ஆற்றிடைத் தீவு


ஷங்கர்ராமசுப்ரமணியன்


எனது தொடக்கநிலைக் கவிதைகளை இப்போது படிக்கும்போதுஅவை கருத்துகளால், கதைகளால்நாடகங்களால் நால்திசையிலும் இருந்து ஒளிவீசும் வீடாய் இருந்துள்ளதை உணரமுடிகிறது. மொழிப்பிரக்ஞைவடிவ உணர்வுஅர்த்த அணுக்கம்வார்த்தைச் சிக்கனம் கூடிவராத நிலையில் அவை இருந்தாலும் அவற்றின் மேல் படர்ந்திருக்கும் ஒளியைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக உள்ளது. அந்தக் கவிதைகள் கடந்த நிலப்பரப்புகள்முகங்கள், உணர்வுகள் எல்லாம் மேலெழுந்து சமநிலையின்மையை உருவாக்குகிறது. பெருமிதம், அசூயை, கூச்சம், சுயகிண்டல் எனக் கலவையான உணர்வுகளை அடைகிறேன்.

அடுத்தடுத்த தொகுதிகளில் வெளிச்சம் குறைந்துபயம் மிகுந்துபேச்சொலியும் குறைவதை உணரமுடிகிறது. கதை முற்றிலும் அகன்று சிறுகாட்சிகளாகஒரு மின்னல்வெட்டாக கவிதைகள் மாறின. பேச்சின் அரவம் குறைந்துவிட்டது. நான் பேசுவதற்கு விரும்புவன். எனது கவிதைகள் என்னைப் பேசாத இடத்துக்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலப்போக்கில் வடிவங்களின் மீது பெரும் ஏக்கம் உருவாகியுள்ளது. புதிய நிலப்பரப்புகளுக்காக என் கால்கள் கனவு காண்கின்றன. அதிகாலை மரங்கள்நிலங்கள், கூழாங்கற்கள், தென்னங்குரும்பைகள்கோவில் சிற்பங்களைத் தொட்டுப் பார்ப்பதில் என்னைக் குணமூட்டிக் கொள்கிறேன். வடிவம் கொள்வதற்குத்தானா இத்தனை ஏக்கங்கள். 




புதியது என்பது குறித்த அர்த்தத்தில் நம்பிக்கை உள்ளவை எனது கவிதைகள். உலகம் மாறுகிறதுவாழ்க்கை கணம்தோறும் மாறுகிறது. இதைத் துடிப்புடனும் வலியுடனும் தகவமைத்துக்கொள்ளும் நெருக்கடியுடனும் அருகிப்போகும் சாத்தியத்தின் விளிம்பிலும் எனது கவிதைகள் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

உலக வரலாற்றில் சிறுதுளி அளவே இருக்கும் எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையில் திரும்பிச் செல்ல இயலாத, எத்தனையோ மாறுதல்களை இந்தப் பூமி அடைந்துவிட்டது. விஷ்ணு திரும்பத்திரும்பப் பலமுறை புரண்டு புரண்டு படுத்துவிட்டார்.

சிறுபையனாக திருநெல்வேலி கீழப்புதுத்தெருவில் உள்ள ஒரு வளவில் குடியிருந்த போது, அருணாசலத்து ஆச்சி இருட்டில் எனக்கும் எனது அம்மாவுக்கும் சேர்த்துச் சொன்ன கதைகளின் இருட்டை எனது மகளால் உணர முடியவில்லை. எனது மகளின் முகம் பார்த்து என்னால் கதைகளைச் சொல்லவே முடியவில்லை. அவள் கதை கேட்கும்போதெல்லாம் கதை உரம் அற்றவனாக என்னை உணர்கிறேன். இந்த நாற்பது ஆண்டுகால வரலாறு, கதையைச் சொல்வதற்கான புதிர்தன்மையை என்னிடம் இருந்தும் என் தலைமுறையினரிடமிருந்தும் பறித்துக்கொண்டுவிட்டது. கதை கேட்கும் மர்மத்தை அவளும் இழந்துவிட்டாள்.

இதே நாற்பது ஆண்டுகளில்தான் உலகின் விலங்கினத் தொகையில் பாதி எண்ணிக்கையைத் தொலைத்திருக்கிறோம். விலங்குகள் அருகிப்போனதற்கும் நமது குழந்தைகளுக்குக் கதை சொல்லமுடியாமல் போனதற்கும் ஒருவேளை தொடர்பு இருக்கலாம். கல்வி, மருத்துவம், ஆன்மிகம், நுண்கலைகள், அரசியல், பாலியல் என அனைத்து துறைகளின் உள்ளடக்கங்களும் மாறிவிட்டன. என் பெற்றோரின்மூதாதையரின் காமம்உலோகத்தின் திண்மையுடன் இறையாண்மை கொண்ட நிலமாக இருந்தது. எனது தந்தை டி.எச்.லாரன்சின் கடைசிப் பேரனாக இருந்திருப்பார். நமது காலத்தின் காமம்அவரவர் வீட்டில் இல்லை. அனைவரின் வேட்கைகளாலும் நிரப்பப்பட்ட ஹைட்ரஜன் பலூனாக பெருநிறுவனக் கட்டிடங்களின் மேல் அது பறந்துகொண்டிருக்கிறது.

றவை என்ற உயிர் குறித்த வரையறையும் அதன் கவித்துவபடிம அர்த்தங்களும் பழையவைதான். நிறங்கள் விசித்திரமாக முயங்கிக் கலந்துகோடிக்கணக்கான வடிவ சாத்தியங்களின் பட்டியலில் இன்னொரு சாத்தியமாக நுழைந்து, ஒரு பறவை எனது கண்ணுக்குத் தென்படும்போது, அந்த உயிர் முழுக்கப் புதியதாகி விடுகிறது; நேற்று என் குடியிருப்பில் பார்த்த புதிய தவளையைப் போல. பறவையின் இரைப்பையும் அதன் சிறகு உடலும் என் கவிதைகளைப் பொருத்தவரை இணையான மதிப்பும் நிறையும் கொண்டவைதான். புதியது தரும் ஆற்றலையும் அழகையும் நுகர்வதோடு மட்டுமின்றி அவற்றின் அபாயங்களையும் அவை தம் உடலில் முன்னுணர்ந்தே உள்ளன. இந்த பூமியில் பறவைகளைத் தவிரவும்புவிஈர்ப்பு விசையை மீறிப் பறப்பதற்கு ஆசைப்படும் அரிய உயிரினங்களாக கவிஞர்களும் கவிதைகளும் இருக்கின்றன.

மானுடம்கொள்ளும் சுயநலம்ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாகபயனாளியாகஅலகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது, எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. சில நேரங்களில் எங்கள் கவிதைகள் அபூர்வமாகப் பறக்கவும் செய்கின்றன.

அருகிப்போன உயிர்களையும் எறும்புகள் போன்ற சிறு உணர்வுகளையும் என் உலகில் அறிமுகமாகும் புதிய பொருட்களையும் அதன் முன் நான் கொள்ளும் துடிப்பையும் கொண்டு சேர்த்து உருவாக்கும் சிறுபிரபஞ்சமாக இருக்கிறது எனது கவிதைகள்.

அசாமில் உள்ள சோன்டிபூர் மாவட்டத்தில் உள்ள நெல்வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களைச் சாப்பிட்டுத் திரும்பிச் செல்லும் யானை மந்தையின் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். அந்தக் மந்தையில் பிறந்து சில நாட்களே ஆன புதியக் குட்டிகளும் பெரியவர்களுக்கு இடையில் உள்ளன. பொன் போல மின்னும் மஞ்சள் கதிர்களுக்கு அப்பால் அவை பின்புறங்களைக் காட்டிச் சென்றுகொண்டிருக்கும் புகைப்படம் அது. ஐந்து மனிதர்களைக் கொன்ற யானைகள் அவை. ஆனால், அந்த யானைகள் புதிய குட்டிகளோடு திரும்பிச் செல்லும் புகைப்படத்தைப் பார்க்கும் போது அவை செய்த குற்றம் எதுவுமே தெரியவில்லை. அவை கடவுளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அமைதி அனுபவத்தைத் தருபவை. குற்றமும் களங்கமின்மையும் ஒன்றுசேர்ந்த உயிர்கள் அவை.
எனது கவிதைகள் அந்தக் குட்டியானைகளைப் போல இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

(எனது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 'ஆயிரம் சந்தோஷ இலைகள்' என்னும் பெயரில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அம்ருதா, க்ரியா, பனுவல் போன்ற ஸ்டால்களில் கிடைக்கும். அத்தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரை இது.)




Comments