Skip to main content

இளங்கோ புரோட்டா ஸ்டால்ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஊருக்கு வரும்போதேல்லாம்
திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் முக்கு
இளங்கோ புரோட்டாக் கடையில்
ஆஜர் ஆகிவிடுவான் சங்கரன்.
நள்ளிரவில் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு
வீடு திரும்பும்போதும்
இளங்கோவை அவன் புறக்கணித்ததில்லை.
இப்போது அவனுக்கு வயது நாற்பது.

மஞ்சள், கரும்பழுப்பு, செக்கச்சிவப்பு
மூன்று குழம்புகளையும் ஊற்றச்சொல்வான்
முதிய பரிசாரகனின் கருப்புக் கைகளும் சேரவேண்டும்.
புரோட்டோவை ஆசையோடு பிய்க்கச் சொல்வான்.
எலும்புத் துணுக்குகளை
இலையோரம் ஒதுக்கி வைப்பான்
சைவக்குடும்பத்தில் பிறந்த சங்கரன்.
முதல்முறையாக
ஒன்பது வயதில்
அப்பாவோடு
ரொட்டி சால்னா அறிமுகம் ஆனது.
கோழி எலும்புகள் தான்
செதில்செதிலாக புரோட்டா ஆகிறது
என்று கற்பனையும் செய்தான்
இப்போதும் 
சொந்த ஊர்
திருநெல்வேலிக்கு வரும்போது
தாபத்துடன்
ஏலக்காய் மணக்க மணக்க
புரோட்டா சாப்பிடுகிறான்.
அல்வாவைப் போலவே
புரோட்டாவையும்
தாமிரபரணிதான் ருசிக்கவைக்கிறது 
என்பது அவன் முடிவு.

வெங்காயம் நிறைந்த
உடல் பூரித்த ஆம்லேட்டை
அசௌகரியத்தோடும் வலியோடும்
மெதுவாக மென்று மென்று தின்கிறான்

தனது கடைவாய் பற்குழியை
மருத்துவரிடம் நேற்றுதான் அடைத்துவந்த
நாற்பது வயது சங்கரன்
இன்று

சந்திப்பிள்ளையாரையும்
இளங்கோ ஹோட்டலையும்
பால்யகால நண்பர்களைப் போல
மறக்காமல் இருக்கும்
அவன்
எப்போது
புரோட்டாவை வாயில் வைத்தாலும்
அப்போதெல்லாம்
அவனுக்கு ஒன்பது வயதுதான்.

(கவிஞர் ஞானக்கூத்தனுக்கு)

Comments

Popular posts from this blog

குரங்குகள் சொல்லும் நீதிக்கதை

ஷங்கர்ராமசுப்ரமணியன் 
அம்மா புகட்டிய காலத்திலிருந்து எனக்கு நீதிக்கதைகள் இன்றுவரை தேவையாகவே இருக்கின்றன. எளிய நீதிக்கதைகள் முதல் சிக்கலான நீதிக்கதைகள் வரைத் தேடித்தேடி அவை சொல்லும் நெறிமுறைகள் வழியாக, எனது அன்றாடத்துக்குள்ளும், என்னைச் சுற்றி நடக்கும் துயரமும் ரணமும் சிறு இளைப்பாறுதல்களும் கூடிய நிகழ்ச்சிகள், அபத்தங்கள், புதிர்களுக்குள்ளும் ஒரு ஒழுங்கை நான் கற்பிக்கவோ புனரமைக்கவோ செய்கிறேன்.
என்னைச் சுற்றி நடக்கும் ஒரு நிகழ்வுக்கு கால, வெளிப் பரப்பளவில் மிக அருகிலிருக்கும், கைக்குத் தென்படும் காரண காரியங்களைத் தேடாமல், என் வாழ்வுக்கு அப்பாலும் முன்பும் காரணம் இருக்கலாம்; மனிதத்துவத்துக்கு அப்பாற்பட்ட காரணமும் இருக்கலாம்; அதனால் சஞ்சலமில்லாமல் புகார்கள் இல்லாமல் அமைதியாக இரு என்பதை என் தலையில் குட்டிக் குட்டி உணர்த்தும் நீதிக்கதைகள் அடிக்கடி தேவையெனக்கு.
கட்டற்ற நுகர்வு ஒன்றே வாழ்வென்றாகிவிட்ட இக்காலகட்டத்தில் அடங்கவேயடங்காத புலன்கள் வழிநடத்தும், குறுக்கும்நெடுக்குமான சபலத்தின் பாதைகளில் திரியும் நவீன மனிதனுக்கு, மேலதிகமாக தற்காலத்தின் பாடுகளையும் அகப்படுத்தியிருக்கும் நீதிக்கதைகள் தேவை.ஊ…

நள்ளென் றன்றே யாமம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் 
 நள்ளென் றன்றே யாமம்  சொல்லவிந்து சடலங்களாய்  பேருந்தில்  உடல்சுருட்டியடங்கினர் மக்கள்  இருட்டில் முனகும் சல்லாபப் பாடல்கள்  உதிர்ந்து வரும் திருவள்ளுவர் சித்திரம்  பொன்மொழிகள்  அதிகாலையில் இறங்கவிருக்கும் நகரம் குறித்த நினைவு  எதுவுமல்ல  ஆம்  உண்மைதான் பதுமனார் அவர்களே பற்றித் தள்ளும் விருப்பும் வெறுப்பும்  அலைக்கழிப்புகளும் அல்ல  உறக்கமும் பனியும் தான்  அவர்களைத் தாயென கதகதப்பாக  தற்காலிகமாகப் போர்த்தியிருக்கிறது.     

சிரிக்கத் தொடங்கும் யாளிகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

முன்னம் பழைமையிலிருந்தும்மீண்டும் நம்மை, நமது வாழ்வைப் பரிசீலிக்க ஆரம்பிக்கலாம். பழையதென்றும் மரபென்றும் தளையென்றும் மெய்யியலென்றும் மதமென்றும் சடங்கென்றும் நாம் ஒதுக்கியதில் இன்றை, இப்பொழுதை உயிர்ப்பிக்கும் வஸ்துகள் ஏதாவது மிஞ்சியுள்ளதா? இன்றைக்கான குணமூட்டியோ, எதிர்காலத்திற்கான தீர்வோ இருக்கிறதா என்றும் பார்க்கலாம்.
‘காலடியில் ஆகாயம்’தொகுதியில் ஆனந்தின் சிறந்த கவிதைகளில் ஒன்றான ‘எல்லாமும் எப்போதும்’கவிதையில் கவிதைசொல்லி மண்ணுக்குள் போகிறான். மண்ணுக்குப் போனபின்பு உளிச்சத்தம் கேட்க மேலும் அடியில் செல்கிறான். அவனது பாட்டன் ஒரு சிலையை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். அது அவனது சிலையாக இருக்கிறது. மேலும் கீழே செல்கிறான் கவிதைசொல்லி, அங்கே சிற்பியாக கொள்ளுப்ப்பாட்டன் அமர்ந்திருக்கிறார். அங்கே பாதி செதுக்கப்பட்ட அவனது சிலை இருக்கிறது. மேலும் இறங்க இறங்க கடைசியில் கவிதை சொல்லியே சிலை செய்துகொண்டிருப்பதைப் பார்க்கிறான். அந்த நான், செய்து கொண்டிருந்தது கவிதை சொல்லியின் மகனுடைய சிலை.
ஆனந்த் உருவாக்கியிருக்கும் இளவரசி கவிதைகள் நம் மண்ணுக்குள் புதையுண்டு போனவற்றைத் தேடிப் போவ…