Skip to main content

Posts

Showing posts from 2015

மரத்தின் உச்சியில் ஏறிய பாம்பு

                                                                    ஷங்கர்ராமசுப்ரமணியன் எங்கள் வீட்டுத் தென்னை மரத்தின் மேல் ஒரு பாம்பு ஏறியுள்ளது அது சாரைப்பாம்பென்றார்கள் கடந்துபோகிறவர்கள் சிலர் கொம்பேறி மூக்கன் என்றனர் சென்னையின்  மழை ஈர நசநசப்பால் எரிச்சல்பட்டு  சற்று வெயிலேறியவுடன் தென்னையில் ஏறியிருக்கலாம் தலை சற்று சிறுத்து உடல் தடித்த நீளமான பாம்பு அது சற்று நேரம் பன்னாடையில் சுருண்டு இளைப்பாறுகிறது சற்று நேரம் கழித்து தென்னை இலைகளில் நீண்டு நெளிந்து சுற்றிப் தன் பராக்கிரமம் காட்டுகிறது தெருவில் நின்று வேடிக்கை பார்க்கும் என்னை தலையை மடக்கிக் கூர்மையாகப் பார்த்து உன்னை யுகம்தோறும் தொடர்வேன் என்பதாகப் பயமுறுத்துகிறது வழக்கமாகத் தென்னைக்கு வரும் அணில் தனக்குப் பழக்கமான இடத்தில் இன்னொருவர் இருப்பதைப் பார்த்து வாலைத் தூக்கி திரும்பத் திரும்ப நெருங்கி கீச்சிடுகிறது பாம்பு பதுங்கியிருக்கும் போது அணிலின் வாலைப் பாம்பென்று கருதி பாம்பைப் பார்த்த திருப்தியில் செல்கிறாள் ஒரு பாட்டி நான் பாட்டியிடம் அது அணில் என்று சொல்லவில்லை மரத்தின் உச்சியில் ஏறிய பாம்பை எனது காமம் என்

சிறிய பொருட்களே சின்னஞ்சிறிய பொருட்களே

                                            ஷங்கர்ராமசுப்ரமணியன்   நேசத்துக்குரியவர்களும்  அத்தியாவசியமானவைகளும்  இல்லாமலாகும்  வயதில்  இடத்தில்  சிறிய மதிப்பற்ற  பொருட்கள்  மூடநம்பிக்கைகளாய்  வந்து ஒட்டிக்கொள்கின்றன  புதிய நகவெட்டி  ஒரு காதலின் பருவத்தில் சேகரித்த  பறவையின் இறகுகள் துங்கபத்ரை நதியின் பாறை இடுக்குகளில் பொறுக்கிய கூழாங்கற்கள் வளர்ந்த மகளின் சின்ன உடைகள் இறந்துபோன வளர்ப்புமீன்களுக்கு வாங்கிய உணவுப் புட்டி பழைய அடையாள அட்டையிலிருந்த புகைப்படம் நண்பரின் கையெழுத்தைக் கொண்ட புத்தகம் அனைத்தும் தொலைந்தவற்றின்  நினைவைப்  பதுக்கிவைத்திருக்கின்றன ஒருபோதும் என்னால் விட்டுச் செல்ல இயலாத சிறிய பொருட்களே சின்னஞ்சிறிய பொருட்களே

கடவுளின் இடத்தில் காமராக்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் நாம் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் நம்மை மேலிருந்து கேமராக்கள் கண்காணிக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலை பார்க்கும் அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நெடுஞ்சாலைகள் முதல் தெருமூலை பிள்ளையார் கோயில்கள் வரை மேலிருந்து பார்க்கின்றன. ஏதாவதொரு கேமராவின் கண்கள். சிறுசிலிருந்து பெரிசுவரை எலெக்ட்ரானிக், கணிப்பொறி சார்ந்த அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் சென்னையின் முக்கியக் கடைவீதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில், முதலாளி பணியாட்களைக் கண்காணிப்பதற்கும், கணவர்கள் மனைவிகளை வேவு பார்ப்பதற்கும், பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமான கேமரா ஒற்றுக் கருவிகளுக்குத்தான் தற்போது மிகவும் மவுசு. பேனா, பொம்மைகள், கதவில் ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டு என சந்தேகமே பட முடியாத எல்லா வடிவங்களிலும் ஒற்று கேமராக்கள் நம்மைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. அன்றாடம் நாம் படிக்கும் தினசரிகளில் இந்த கேமராக்கள் பற்றிய வரிவிளம்பரங்களும் வருகின்றன. எல்லாருக்கும் சாத்தியமான சல்லிசான விலையில்! சென்னையின் முக்கிய வீதிகளெங்கும் சிசிடிவி கேமராக்கள் விற

காலமற்று ஓடிக்கொண்டிருக்கும் நதி

பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பில்லாதது நம்மில் பெரும்பாலானோரின் அன்றாட யதார்த்தம். அற்புதங்களோ அரிது. காலங்காலமாக இப்படித்தான் வாழ்க்கை இருந்திருக்க வேண்டும். இந்த அலுப்பான யதார்த்தத்திலிருந்து தப்பிப்பதற்குத்தான் நமக்குக் கனவு தேவைப்படுகிறது. இன்னும் மேலான வாழ்வுக்கான லட்சியம் மற்றும் கருத்தியல்கள் தேவைப்படுகின்றன. கலையும் கவிதையும் தேவையாக இருக்கின்றன. கடவுள் தேவைப்படுகிறார். ஆலயங்கள் தேவைப்படுகின்றன. இந்த மண்ணிலேயே அவ்வப்போது தரிசிப்பதற்கும், நினைவில் வைத்துப் போற்றுவதற்கும் கனவைப் போன்ற நிலபரப்புகளும் அனுபவங்களும் தேவையாக உள்ளன. தமிழின் சிறந்த சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான வண்ணநிலவன் எழுதியிருக்கும் 'குளத்துப் புழை ஆறு', அப்படிப்பட்ட கனவு நிலவுப்பரப்பை மொழியில் உருவாக்கிய அற்புதம். வண்ணநிலவனின் இந்தக் கவிதையில் வரும் குளத்துப் புழை ஆறு, கொல்லம்-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட குளத்துப்புழா என்ற சிறு கிராமத்தில் ஓடும் சிறு நதி. அதன் பெயர் கல்லடை. இந்தக் கிராமத்திலுள்ள ஐயப்பன் கோயில் புகழ்பெற்றது. ஐயப்பன், இங்கே சிறுவனாகக் காட்சி அளிப்பதால் பால சாஸ்த

தாய் அறியாத புரட்சி எது?

                               ஷங்கர்ராமசுப்ரமணியன் மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலில், ‘தாய்மார்கள் இரக்கத்துக்கு உள்ளானதேயில்லை’என்று ஒரு வரி வரும். ‘லட்சுமி என்னும் பயணி’ சுயசரிதையை எழுதியிருக்கும் லட்சுமி அம்மாவின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. தாய், தந்தையரின் அரவணைப்பிலான, சரியான குழந்தைப் பருவத்தைக்கூட அனுபவிக்காத ஏழைச் சிறுமி லட்சுமி. அடிப்படைத் தேவைகளுக்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல நேர்ந்தவர். அங்கே தொழிற்சங்கத்தில் சேர்ந்தவர். தொழிற்சங்கம் வழியாக முழு நேர அரசியலுக்குத் திருமணம் வழியாகவும் பிணைக்கப்பட்டவர். லட்சுமி அம்மாவின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை, அரசியல், சூழ்நிலைகள் அனைத்தும் அவரது தேர்வு அல்ல. ஆனால், துரும்பளவுகூட மீட்சிக்கு வாய்ப்பில்லாத சூழலில் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துக்காகவும் சகமனிதர்களின் தன்னிறைவுக்காகவும் போராடும் நித்தியப் போராளியாக லட்சுமி அம்மா இந்த சுயசரிதை வழியாக வெளிப்படுகிறார். மேல்நிலைக் கல்வி, மார்க்சியம், பெண்ணியம் சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படை எதுவுமின்றி, சமூகத்தின் அடித்தளத்திலிருந்து வந

துருவிப் பார்க்கும் கண்களுக்குச் சற்று ஓய்வுகொடுங்கள் சுகுமாரன்

ஷங்கர்ராமசுப்ரமணியன்  நகுலன் மது குடிப்பார். ஆனால் அவரது கவிதைகளில் மது போதை சார்ந்த அனுபவமே இல்லையென்று தமிழின் பெருங்கவிஞர்களான சுகுமாரனும், எம்.யுவனும் நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுதியின் பின்பகுதியில் வெளியாகியிருக்கும் உரையாடலில் கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்திருக்கின்றனர்.  (குடித்த மனத்திலிருந்து ஒரு வரிகூட எழுதப்படவேயில்லை. அல்லது குடித்த அவஸ்தையைக் கூட அவர் எழுதியதேயில்லை-சுகுமாரன் சொல்கிறார். இப்படிப் புரிந்துகொள்ளலாமா, ஒரு கவிதையில் ஒரு கட்டு வெற்றிலையும் சீவலும் எனக் குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தவரை இதற்கும் பிராந்திக் குப்பிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையெனக் கொள்ளலாமா?- யுவன் கேட்கிறார். சுகுமாரன் கடைசியாக ஒரு போடு போடுகிறார்:  ஆமாம்! அப்படித்தான். -  நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்- பக்கம் 90- காலச்சுவடு பதிப்பகம்)   மதுவையும், நண்பர்களுடனான உரையாடலையும், போதையையும் நான் என்பது கரைந்து,  லேசாக  அடிநிலைக்குச் செல்லும் எத்தனமாகவே சித்தரிக்கிறார் நகுலன். அவர் பாஷையில் அது ஒரு சொரூப நிலை.   தன் போதத்தை, தன் சுமையைக் கழற்றிக் கொள்வதற்க

புராதனக் கோவிலின் கல் யாளிகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் வண்ணத்துப்பூச்சியும் கடலும் சமுத்திரக் கரையின் பூந்தோட்டத்து மலர்களிலே தேன்குடிக்க அலைந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி வேளை சரிய சிறகின் திசைமீறி காற்றும் புரண்டோட கரையோர மலர்களை நீத்து கடல் நோக்கிப் பறந்து நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஒய்ந்து அமர்ந்தது முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது                                          - பிரமிள்  இந்தக் கவிதையின் வரிகள் என் நினைவில் தொடர்ந்து கொண்டே இருப்பவை. அந்தக் கவிதையின் கடைசி வரிகளான ‘முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது’ என்பதைத் தெரிந்துகொண்டே நண்பர்களிடம் ‘முதற்கணம் உவர்த்த சமுத்திரம் பின்னர் தேனாய் தித்திக்கிறது’ என்று என் கற்பனை சேர்த்துப் பகிர்ந்திருக்கிறேன். ஒரு அனுபவத்துக்கும் இன்னொரு அனுபவத்துக்கும் இடையில் ஒரு கணம் நிற்க ‘பின்னர்’ தேவைப்படுகிறது எனக்கு. இனிக்கிறது என்பதைவிட தித்திக்கிறது என்பதுதான் எனது அனுபவ சொற்களஞ்சியத்தில் சரியாக இருக்கிறது. ஒரு நல்லகவிதையை இப்படியெல்லாம் ஒரு வாசகன் தன்வயப்படுத்திக் கொள

கவிதை என்னும் இறகு போன்ற வஸ்து - ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

கவிதை என்பது ஒருவகையில் மிகவும் அந்தரங்கமானது, அத்தியாவசியமானது என்று நம்புகிறேன். அதை அதீதமாக எளிமைப்படுத்தாமல் அதை வரையறுக்கவும் முடியாது என்றும் கருதுகிறேன்.  மஞ்சள் நிறம், காதல், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகள் ஆகியவற்றை வரையறுக்க முயற்சிப்பதைப் போன்ற காரியம் அது. அத்தியாவசியமான விஷயங்களை எப்படி வரையறுப்பதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரேயொரு சாத்தியமான வரையறையெனில் அது ப்ளேட்டோவினுடையதாகவே இருக்கும். துல்லியமாகச் சொன்னால் அது வரையறை அல்ல, ஒரு கவித்துவச் செயல்பாடு. கவிதையைப் பற்றி குறிப்பிடும்போது அவர், "இறகுகளைக் கொண்டதும் புனிதமானதுமான லேசான வஸ்து" என்கிறார். ஒரு திட்டமான வார்ப்புக்குள் அடையாதென்பதால், ஒரு தேவதையின் வடிவமாகவோ ஒரு பறவையாகவோ கவிதையை வரையறுக்கலாம் என்று நம்புகிறேன். ஆம், கவிதை என்பது அழகியல் செயல்பாடு என்று இன்னும் நம்புகிறேன்; கவிதை என்பது எழுதப்பட்டு கவிதை அல்ல, ஒரு கவிதை வெறுமனே உருவகங்களின் தொடர் வரிசையை மட்டுமே கொண்டதாக இருக்கலாம்.  கவிஞன் எழுதும்போது, வாசகன் வாசிக்கும் போது-அது எப்போதும் சற்று வித்தியாசமான முறையில் நடக்கிறது- நடக்கும் கவித்து

ஜோர்ஜ் லூயி போர்ஹே பிறந்த நாள் ஆகஸ்ட் 24

ஆழ்ந்த வெகுமதி  கலையின் வேலை என்பது, நம்மில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதை மனிதனின் ஞாபகத்தில் தொலைந்து போக இருப்பதை, குறியீடுகளாக, இசையாக மாற்றம் செய்வது. அது தான் நமது வேலை. அதை நிறைவேற்ற முடியாவிட்டால் நாம் கவலை கொள்கிறோம். ஒரு கலைஞனும் எழுத்தாளனும் எல்லாவற்றையும் குறியீடுகளாக மாற்றுவதை ஒரு சமயத்தில் சந்தோஷமான கடமையாக நினைக்கின்றனர். அந்தக் குறியீடுகள் நிறங்களாக இருக்கலாம். வடிவங்களாக, சப்தங்களாக இருக்கலாம். ஒரு கவிஞனுக்கு, குறியீடுகள் என்பவை வார்த்தைகளும் தான்.     நீதிக்கதை,கதை,கவிதை எல்லாமும் தான். கவிஞனின் வேலை முடிவடைவதே இல்லை. எழுதும் மணித்துளிகளுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வெளியுலகிலிருந்து தொடர்ந்து நீங்கள் பெற்றுக்கொண்டே இருக்கிறீர்கள். அவை நிச்சயமாக மாறும். கடைசியில் மாறித்தான் ஆகவேண்டும். இது எந்த சமயத்திலும் வெளிப்படலாம். ஒரு கவிஞன் எப்போதும் ஓய்ந்திருப்பதில்லை. அவன் தொடர்ந்து பணியாற்றியபடியேதான் இருக்கிறான், கனவிலும் கூட. அத்துடன் ஒரு எழுத்தாளனின் வாழ்வென்பது தனிமையான ஒன்று. நீங்கள் தனியானவர் என்று உங்களைக் கருதிக்கொள்கிறீர்கள். வருடங்கள்

நான் வெளியிட விரும்பும் எழுத்தாளர் ஷோபா சக்தி

  க்ரியா ராமகிருஷ்ணன் நேர்காணல் சந்திப்பு : ஷங்கர்ராமசுப்ரமணியன் த மிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, எடிட்டிங், மொழியியல், அகராதியியலில் இன்று தவிர்க்க முடியாத பெயராக க்ரியா பதிப்பகம் திகழ்கிறது. நாவல், சிறுகதை, கவிதை என எந்த நூலாக இருப்பினும் உள்ளடக்கத்திற்கும் அட்டை வடிவமைப்பு, அழகியலுக்கும் சம்பந்தமே இல்லாமல் வெறும் சரக்குகளாகப் புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம் அது. எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தங்கள் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிடும் வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன. இச்சூழ்நிலையில் தரமான வெளியீடு என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவும் இயலாத நிலையே இருந்தது. இப்பின்னணியில் 1974-ல் தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் சார்ந்த சமகால படைப்புகளை வெளியிடுவதன் மூலம் கால்பதித்தனர் க்ரியா பதிப்பகத்தினர். இதன் பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன், தாம் வெளியிடும் புத்தகங்களைக் கலைப்படைப்புகளாக மாற்றினார். தமிழில் புதுக