Skip to main content

தற்செயல்களின் சூதாட்டம் என் கதைகள் - சுரேஷ் குமார இந்திரஜித் நேர்காணல்

  சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன்

தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித். 1980-களில் எழுதத் தொடங்கிய இவரின் கதைகள் அன்றாட வாழ்க்கை மற்றும் உறவுகளின் மர்மங்கள் மீது கவனம் குவிப்பவை. அலையும் சிறகுகள், மாபெரும் சூதாட்டம், நடன மங்கை உள்ளிட்ட ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் மதுரையில் வசித்துவருகிறார். தி இந்து கலை-இலக்கியம் பகுதியில் வெளியான நேர்காணலின் முழுமையான வடிவம் இது...



உங்களைப் பாதித்த முதல் கதை எது? ஞாபகம் உள்ளதா?

அப்பா என் சின்ன வயதிலேயே தவறிவிடுகிறார். அண்ணாவுக்கு கல்யாணம் ஆகியிருந்தது. அவர் கூட தான் நானும் எங்கள் அம்மாவும் இருந்தோம். அண்ணி வழியாகத் தான் கதைகள் எனக்கு அறிமுகமானது. அண்ணி தான் படித்த கதைகளை நாங்கள் சாப்பிடும்போது சொல்வார்கள். ஜெயகாந்தனது பொம்மை கதையை அப்படித்தான் கேட்டோம். அந்தக் கதையில் ஒரு பணக்கார வீட்டுக் குழந்தை, ஒரு ஏழை வீட்டுக் குழந்தை பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருக்கிறார்கள். பணக்காரக் குழந்தைக்கு சொந்தமாக பொம்மை இருக்கிறது. அதை வைத்து விளையாடுகிறது. ஏழைக்குழந்தைக்கு பொம்மை இல்லை. அது அந்தக் குழந்தைக்கு ஏக்கமாக இருக்கிறது.  ஏழைக்குழந்தைக்கு ஒரு குட்டித்தங்கை இருக்கிறாள். ஒரு நாள் தங்கச்சிப் பாப்பாவை விட்டுவிட்டு அம்மா,அப்பா  வெளியே போறாங்க. அந்தக் குழந்தை, தன்னோட தங்கச்சிப் பாப்பாவை பொம்மை மாதிரி பாவித்து குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணத் தொடங்குது. அம்மா, அப்பா வருவதற்குள் அந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. இந்தக் கதையை கேட்டபோது எனக்கு எட்டு வயசு இருக்கலாம். அந்தக் கதைக்குப் பிறகு ஜெயகாந்தன் என் மனதில் பதிந்துபோனார்.
தினசரி சாயங்காலம் பொழுது இருட்டும் வேளையில் என் அண்ணி வீட்டின் நடுவில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து லைப்ரரியில் இருந்து கொண்டுவந்த நாவலைப் படிப்பாங்க. நான், அண்ணன், அம்மா எல்லாரும் சுத்தி உட்கார்ந்து கேட்போம். இன்னும் அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவில்லை.

ஜெயகாந்தன் வழியாகத்தான் ஒரு காலகட்டத்தில் தீவிரமான வாசிப்புக்கு இளைஞர்கள் நுழைகிறார்கள் இல்லையா?

கல்லூரியில் படித்தபோது, ஜெயகாந்தன் குமுதத்தில் ஒரு பக்கத் தொடர் ஒன்று எழுதினார். அதன் பெயர் ‘நினைத்துப் பார்க்கிறேன்’. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புதுமையான கோணத்தில் அவர் எழுதியதாகப்பட்டது. ஜெயகாந்தன் வழியாகத்தான் புதுமைப்பித்தன், மௌனி எல்லாருடைய பெயரும் எனக்குத் தெரியத்தொடங்கியது.



80-களின் இறுதியில் எழுத வந்தவர் நீங்கள்..அப்போது வந்த கதைகள் மற்றும் சமூகச்சூழல் பற்றி சொல்லுங்கள்?

 ஒரு தனிமனிதன் அல்லது இளைஞன் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிற நிலையைத்தான் அக்காலகட்டத்தில் வந்த சிறுகதைகள் பிரதிபலித்தன. கணையாழி, கசடதபற பத்திரிகைகளில் இப்படியாக எழுதப்பட்ட பல கதைகளைப் பார்க்கலாம். பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவல் இந்த போக்குக்கு கூடுதல் வலுசேர்த்தது. அந்நியமாகும் மனிதனின் தத்தளிப்புகள் தான் எங்கள் கதை உலகமாக இருந்தது. சுகுமாரனின் கவிதைகளை அந்நியமாதல் காலகட்டத்தின் வெளிப்பாடுகள் என்று சொல்லலாம். அடுத்து தமிழ் சூழலுக்கு அறிமுகமான லத்தீன் அமெரிக்க கதைகள் தனிப்பட்ட அளவில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. கதை மையமற்று இருக்கலாம், மறைந்து இருக்கலாம், கதையற்ற வரலாற்று எழுத்து மாதிரி எழுதலாம். இந்த முரட்டுக்குதிரை மீது சவாரி செய்வதற்கான உத்வேகம் வந்துச்சு. அதுதான் எனது இரண்டாவது தொகுப்பான மறைந்து திரியும் கிழவன் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாத்திலேயும் அந்தப் புதுமையின் தாக்கத்தைப் பார்க்கலாம்.

இந்திய வரலாறு என்ற நேஷனல் புக் டிரஸ்ட் போட்ட புத்தகத்தில் விடுதலைக்காகப் போராடிய தீவிரவாதிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. வங்காளத்தைச் சேர்ந்த குதிராம் போஸ், 64 நாள் உண்ணாவிரதம் இருந்த ஜதின்தாஸ், சிட்டகாங் ராணுவப் பாசறையைச் சேர்ந்த சூர்யா சென். இவங்களைப் பற்றி படித்த விஷயங்கள் புதிதாக இருக்குது. குதிராம் போஸோட வயதைப் பார்த்தீங்கன்னா அவன் மைனர். இந்த விஷயங்களை கதையாக எழுதிப்பார்க்கலாம்னு தோணுது. மறைந்து திரியும் கிழவன் கதையில் நேதாஜி காலகட்டத்தைச் சேர்ந்த ஒருவன் நிகழ்காலத்தில் வருவான். ஆனால் அவனோட நினைவுகள் அந்தக் காலகட்டத்திலேயே உறைந்திருக்கிறது. அவன் மூலமாக ஒரு காலகட்டத்தின் கதையை அதில் சொல்கிறேன். அவனது கதையை அப்படியே திரும்ப எழுதமுடியாது. அதற்கு ஒரு மர்மப்பின்னணியைக் கொடுக்கவேண்டும். அதுதான் மறைந்து திரியும் கிழவன்.

 தமிழகத்தின் யதார்த்தம் உங்கள் கதைகளில் மூட்டமாக வருகிறது…பீகாரும் ஜாக்குலினும் கதையில் ஒரு கோவில் நகரில் உள்ள கடையில் காந்தியின் படமும் ஸ்டாலின் படமும் மாட்டப்பட்டுள்ளது…

 அரசு, அதிகாரம், மதம், சாதி, நமது மக்களுக்கு இருக்கும் சினிமா மாயை, அதனுடன் தொடர்புடைய அரசியல், அன்றாட யதார்த்தத்தில் மனிதர்களின் பாவனைகள் இவற்றுக்கு இடையிலான உறவுகளை, அபத்தங்களை ஒரு கதையின் பாவனையில்  கட்டவிழ்த்துப் பார்க்கும் விதமாக அப்போது என் கதைகளை எழுதினேன். கதையின் பாவனையில் ஒரு விமர்சனம் உள்ளே இருக்கும்.  

2000-க்கு அப்பால் வேறுவிதமான கதைகள் எழுத தொடங்குகிறீர்கள் இல்லையா…சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் வலுப்பெற்ற பகுத்தறிவு இயக்கம், திராவிட அரசியல் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் உங்கள் கதைகளில் கோட்டுச்சித்திரங்களாக வருகின்றன…

 இப்போது மறைந்து திரியும் கிழவன் பாணியிலான கதைகளை எழுதமுடியாது. 2000-க்குப் பிறகு முழுமையாக கதை சொல்லத் தொடங்கினேன். அது எனக்குத் திகைப்பாகவும் இருந்தது. வாசகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற தயக்கமும் இருந்தது. கதையை மறைத்து எழுதிய நான் புனைவையும் யதார்த்த சம்பவங்களையும் சேர்த்து வெளிப்படையாக கதை சொல்ல ஆரம்பித்தேன்.
நான் சமீபத்தில் எழுதிய நடன மங்கை கதையில் பெரியார் மேல் அபிப்ராயம் உள்ள ஒரு கிழவர் வருவார். இன்னொரு கதையில் பெரியாரே கதாபாத்திரமாக வருவார்.
 எனக்கு மதப்பிடிப்பு இல்லை. கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பிறந்த ராமேஸ்வரம் என்பதால் மதம் சார்ந்து நடக்கும் அத்தனை வியாபாரத்தையும் பார்த்திருப்பதால் இவையெல்லாம் போலியானது என்ற எண்ணம் பாலிய வயதிலேயே ஏற்பட்டு விட்டது. பெரியார் எழுத்துகளும் அதற்குக் காரணம்.

ஆனால் மதம், சம்பிரதாயங்கள் ஒருவனின் நனவிலியில் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன. அது இயற்கையாக நம்மிடம் பதிந்திருக்கிறது. எனது கதை ஒன்றில் ஒரு கதாபாத்திரம் காபரே பார்க்கப் போகிறான். நடனமாடும் பெண் சிலுவை அணிந்திருக்கிறாள். அது அவனை தொந்தரவு செய்கிறது. ஆனால் அதே நேரத்தில் புராண சினிமாவில் சாமி முன்னால் கவர்ச்சி நடனம் நடப்பதை ஒரு இந்துமனம் அதிர்ச்சியாக எடுத்துக் கொள்வதில்லை. சிலுவை என்ற குறியீடு மேல் இந்து மனம் ஒன்றுக்கும் ஒரு மதிப்பீடு இருக்கிறது.

தமிழகத்தில் உருவான சமூகநீதி அரசியலால் பிராமணர்கள் பாதிக்கப்பட்டதான சித்திரம் உங்களது சமீபத்திய கதைகளில் உள்ளதே..

செல்வாக்கோடு இருந்தவர்களுடைய சரிவு என்பது துயரகரமானது. அந்தஸ்தில் இருந்தவர்கள் கீழே விழும்போது உருவாகும் சங்கடத்தை ஒரு எழுத்தாளன் எழுதக்கூடாது என்று சொல்லமுடியாது. எனது கதையில் அப்படியான துயருறும் கதாபாத்திரங்களாக பிராமணர்களும் இருக்கிறார்கள். எனது குறிப்பிட்ட கதையில் திராவிட இயக்கத்தவர் ஒருவர், வீழ்ந்த பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மேல் அனுதாபப்படுகிறார். உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு, கலைஞனுக்குத் தேவையான அம்சம் அது. இட ஒதுக்கீடு குறித்த விமர்சனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

உங்கள் கதைகளில் பெண்கள் அழகும், பயங்கரமுமாகத் தோற்றம் கொள்கிறார்கள்…

பெண்கள் ஆண்களின் மனசைத் தொடர்ந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவன்தான் பார்த்து அலைக்கழிகிறான். அவர்கள் தன்போக்கில்தான் இருக்கிறார்கள். அதுக்கு அடிப்படையான காரணம் பெண்ணின் வசீகரம்.  மனித மனத்திற்கு பிறன்மனை சார்ந்து வசீகரம் இருந்துகொண்டே இருக்கிறது. இதெல்லாம் சேர்ந்து தான் சமூகமும், மனித உறவுகளும் இயங்குகின்றன. தனிப்பட்ட வகையில் பேசினால், நான் காலை நடைப்பயிற்சி போகும்போது, எனக்கு முன்னால் ஒரு பெண் போனால் நான் அதிகநேரம் நடப்பேன். அவள் எட்டு சுற்று வந்தால் நானும் சலிக்காமல் நடப்பேன். பெண் ஒருவகையில் ஆணுக்கு தூண்டுதலைக் கொடுப்பவளாக இருக்கிறாள். அங்கே உறவு கிடையாது. எனது கதைகளில் பெண்கள் வசீகரமாகவும், அதனாலேயே பயங்கரமாகவும் இருக்கிறாள்.

லா.ச.ரா மாதிரி பெண்ணை வழிபாட்டுருவமாகப் பார்க்கிறீர்களா?

ஆராதனைக்குரியதாகப் பார்க்கவில்லை. அன்புக்குரியது, மோகத்துக்குரியது, ஆற்றலுக்குரியது. அப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். பக்தி என்கிற ஸ்தானம் இல்லை. கோவிலில் பார்க்கும்போதும், திருமண வீடுகளில் பார்க்கும்போதும் பெண்கள் அழகாகத் தெரிகிறார்கள். அவர்கள் முகம் சுடர்விடும். அது யதார்த்தம். அதற்குக் காரணம் தெரியவில்லை.

சென்ற நூற்றாண்டில் சிறுகதை வடிவம் தமிழில் சாதனை கண்டது..90-கள் வரைக்கும் வளமான சிறுகதை மரபு இருக்கிறது…அந்தப் பின்னணியில் சிறுகதையின் வடிவம், உள்ளடக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள்…?

சமீபத்திய பத்து வருடங்களில் சிறுகதையில் பெரிய தேக்கம் இருப்பதாகத் தோன்றியது. சமீபத்தில் உருவான நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் எனில் ஜே.பி.சாணக்யா, எஸ்.செந்தில்குமார் போன்றவர்களைச் சொல்வேன். சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகளில் மொழியிலேயே பிரச்சினை இருப்பதாக நினைக்கிறேன். விஷயம் சிக்கலாக இருக்கலாம். ஆனால் மொழிவெளிப்பாட்டிலேயே சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது. இவர்கள் எல்லாரும் எழுதும் கதைகள் பூடகமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். கதாபாத்திரமும், சம்பவங்களும் துலக்கமாக இருப்பதில்லை. புறவாழ்க்கையின் அடையாளங்கள் இல்லை. அவர்கள் கதையைத் துலக்கமாகவும், யதார்த்தமாகவும் சித்தரித்தார்கள் எனில் அந்தக் கதைகள் பிழைக்காமல் கூட போய்விடக் கூடிய அபாயம் இருக்கிறது. 
நவீனத்துவ காலகட்டம் முடிந்த நிலையில் நாம் இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் சிறுகதைகள் கிளாசிக்கலான வடிவத்தை நோக்கி மீண்டும் போகவேண்டும் என்று நினைக்கிறேன்.

சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் கதையை கிளாசிக்கல் கதை என்று சொல்வேன். அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதை அதற்கு உதாரணம்.

இன்றைய சிறுகதை எழுத்தாளனுக்கு உள்ளடக்கம் சார்ந்த சவால்கள் என்னவாக இருக்கின்றன?

சில சமூக மதிப்பீடுகள் நிலைபெற்று விட்டன. அதன் மறுபக்கம் இருக்கிறதல்லவா. அதை இன்று ஒரு எழுத்தாளன் எழுதுவதுதான் சவாலானது. அதை எழுதும்போது மனத்தடை இருக்கக்கூடாது. அரசியல், சமூக உறவுகள் சார்ந்த இன்னொரு தரப்பையும் ஒரு எழுத்தாளன் எழுதவேண்டும். என்னைப் பொருத்தவரை வெவ்வேறு விதமாக அவன் வாழ்நாளில் எழுதிப்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரே விஷயத்தையே அவன் திரும்பத் திரும்ப எழுதக்கூடாது. ஒரு குறிப்பிட்ட தளம் சார்ந்து தான் அவன் இயங்கமுடியும் நிலைமை இருக்கக் கூடாது. காஃப்காவோ, நகுலனோ டால்ஸ்டாய், ஹெமிங்வே கையாண்ட பிரமாண்டத்தை அடையவே முடியாது.  ஒரு எழுத்தாளனுக்கு முன்னால் உள்ள சவால் என்பது அவன் வெவ்வேறு பாணிகளில் அவன் இயங்கவேண்டும்.   

 உதாரணத்திற்கு ஜெயமோகனைச் சொல்லலாம். ஜெயமோகனின் நாவல்கள் மீது எனக்கு ஈடுபாடு இல்லை. சிறுகதை எழுத்தாளர்களில் அவர் முக்கியமானவர். பன்முகத்தன்மையோடு, துணிச்சலாக எழுதுகிறார். தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரை இன்று முக்கியமான ஆளுமை ஜெயமோகன்தான். ஜெயமோகன் மற்ற எல்லா எழுத்தாளர்களையும் குள்ளமாக்கிவிட்டார்.

நீங்கள் மிகக் குறைந்த பக்கங்களில் சிறுகதைகளை எழுதுபவர்.. சமீபகாலமாக பக்க அளவில் மிகப்பெரிதாக வெளியிடப்படும் நாவல்கள் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?

ரஷ்ய நாவல்களைப் பார்த்துதான் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மொந்தையாக நாவல் எழுதும் போக்கை தமிழில் ஜெயமோகன்தான் உருவாக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஜெயமோகன் இல்லாதபோது சிறிய நாவல்கள் வந்தன. அவர் வந்துவிட்டார். அதற்குப்பிறகு சிறிய நாவல்கள் இல்லாமல் போய்விட்டது.
 பெரிய நாவல்கள் மூலம் பெரிய உலகத்தை சிருஷ்டித்துவிட முடியும் என்ற நம்பிக்கை  இங்கே இருக்கிறது. அது சாத்தியமானதும்தான். தால்ஸ்தோய், தாஸ்த்யாவெஸ்கி போன்றோரின் கதைகள் அவ்வளவு விரிவுகொண்டதாக உள்ளன.
ஆனால் எனக்கு பெரிய பிரதேசத்தை சிருஷ்டிப்பதில் லயிப்பு இல்லை. நேர்மையாகச் சித்தரிக்கவேண்டும். படைப்பாற்றலோடு, புதுமையாக சித்தரிக்கவேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது. இன்றைக்கு ஒரு தமிழ் எழுத்தாளன் 200 பக்கத்தில் நாவல் எழுதமுடியாது. அத்தனை பெரிய நாவல்கள் முன்னால் தன் படைப்பு சிறுத்துப் போய்விடும் என்று பயப்படுவான்.

உங்களுக்குத் தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் மனதுக்கு நெருக்கமானது எது?

மனத்தடை இல்லாமல் என் மனது இயற்கையாகப் போய் அமரும் படைப்புகள் என்று மூன்று நாவல்களை என்னால் சொல்லமுடியும். ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சிலகுறிப்புகள் இந்த மூன்று நாவல்களைத் தான் நான் சொல்வேன்.  

உங்கள் கதைகளில் பெரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் சில அபத்தமான சந்தர்ப்பங்களும் முக்கியமான காரணியாக இருக்கிறதா?

தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம் நமது வாழ்க்கையில் இன்றியமையாமல் இருக்கிறது. ஒரு தினசரி செய்தித்தாளில் வந்த செய்தி இது. அதை நான் கதையாக எழுதியிருக்கிறேன். ஒருத்தன் சைக்கிளில் போய்க்கொண்டிருப்பான். வானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் பருந்து தன் காலில் உள்ள பாம்பின் பிடியை விடுகிறது தவறவிடுகிறது. அது அந்த சைக்கிள்காரனின் மேல் விழுந்து கொத்தி இறந்தும் போய்விடுகிறான். இந்த நிகழ்ச்சியின் சாத்தியத்தைப் பாருங்கள். பருந்து பிடியை விடுகிறது. பாம்பும் துல்லியமாக சைக்கிள்காரனின் மேல் விழுகிறது. விழும் பாம்பு அவனைக் கொத்தி செத்தும் விடுகிறான்.
இவனுடைய சாவைத் தற்செயல் என்று சொல்லலாம். ஆனால் அந்த தற்செயல் நிகழ்வில் பயங்கர ஒழுங்கும் திட்டமும் இருக்கிறது. ஒரு திட்டமில்லாத திட்டம் இருக்கிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள். எது நடந்ததோ அதை நடக்க விதிக்கப்பட்டதாக நாம் நினைக்கும் போது தற்செயல்களின் சூதாட்டம் வெற்றிகரமாகத் துவங்கிவிடுகிறது என்றும் சொல்லலாம்.
நான் என் சொந்த வாழ்வை ஒரு வரலாறாக கற்பித்துக்கொண்டால் எனது மனைவியைப் பார்த்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான். அவரைப் பார்க்கவில்லையெனில் எல்லாமே வேறு மாதிரியாக இருந்திருக்கும். எனது உத்தியாகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சின்னத்திருப்பத்தில் இத்துறைக்கு வந்தேன். தற்செயல் நிகழ்வுகளை நாம் அனுமானிக்க முடியாது. மனிதர்களின் வாழ்க்கையில் அதற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.  

ஒரு எதார்த்த நிகழ்ச்சியை உங்களது கதைகளில் தத்ரூபமாகச் சித்தரிக்கிறீர்கள்…அதற்கு காரணம் என்ன?

ஒன்றை தத்ரூபமாகச் சித்தரிப்பதன் மூலம் அதை பரிகாசமாக்கி விடமுடியும் என்பதுதான் காரணம். ஒரு  மத குருவை பக்தர்கள் வரவேற்று, அவரது பாதங்களுக்குப் பூஜை செயவதை எழுதுவதாக வைத்துக்கொள்வோம். பக்தன் அல்லாத ஒருவனுக்கு அந்தச் சித்தரிப்பைப் படிக்கும்போது பரிகாசமாக இருக்கும். பக்தன் படித்தாலும் அவனுக்கு அந்தச் சித்தரிப்பு ஒரு புன்னகையை வரவழைத்தால் அங்கு கதை வெற்றியடைந்துவிடுகிறது.

 உங்கள் கதைகளில் ஆண், பெண்கள் இடையிலான உறவில் வன்முறை  ஒரு அம்சமாகத் தொடர்ந்து வருகிறது…சமூக வாழ்க்கையில் வன்முறையைத் தவிரக்கமுடியாததாகப் பார்க்கிறீர்களா?

எந்த உறவிலும் இல்லாத வன்மம் கணவன்-மனைவி உறவில் இங்கு இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. எனது உத்தியோக வாழ்க்கை சார்ந்து வருடத்திற்கு ஆறு மாதங்கள் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணிபுரிய வேண்டும். நான் போகும் நீதிமன்றத்துக்கு அருகில் குடும்ப நீதிமன்றம் இருந்தது. அங்கே காணும் காட்சிகளை நீங்கள் நம்பவே முடியாது. பிரிந்த கணவனும் மனைவியும் அத்தனை வன்மத்தை பார்வையில் வைத்திருப்பார்கள்.
இந்தியா போன்ற நாட்டில் திருமண உறவு என்பதில் பொருத்தமே இல்லை. எக்சுக்குப் பொருத்தமான கணவன் ஒய்யின் கணவனாக இருப்பான். ஒரு தேசமே பொருத்தமில்லாத மணவாழ்க்கையை ஒரு சகிப்புத்தன்மையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது. காதல் திருமணத்துக்கும் இது பொருந்தும். ஏனெனில் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் காதலிக்கிறார்கள். மேல்நாட்டில் எப்போது பொருத்தம் இல்லையென்று தோன்றுகிறதோ விலகிவிடலாம்.
குடும்பத்துக்குள் இருக்கும் இந்த வன்மம்தான் சமூகம் வரை தொடர்கிறது. அதுதான் அரசாக வடிவம் எடுக்கிறது. இதெல்லாம் எனது கவனத்துக்குரியதாக உள்ளது.

தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

ஒரு சிறிய நாவலை எழுத முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். திராவிட அரசியலின் காரணமாக சில சமூகங்கள் அடைந்த வீழ்ச்சி மற்றும் சில சமூகங்களின் ஏற்றத்தைப் பேசும் படைப்பாக அது இருக்கும். அந்த நாவலின் காலம் 1950-களில் தொடங்கி 70-களில் முடியும். 30,40 பக்கம் தான் வந்திருக்கிறது.

நீங்கள் இப்போதும் சரணடையும் படைப்புகள், எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்?

வண்ணநிலவனுடைய பாம்பும் பிடாரனும் கதை பிடிக்கும்.  அவருடைய நிஜநிழல் கதை எழுதப்பட்ட விதத்தில் என்னைக் கவர்ந்தது. தியோப்ளஸ் என்ற கதாபாத்திரம் வரும். அவன் காந்தி போலவே காலை மடித்து உட்கார்பவன். அவனும் அவனது நண்பனும் பேசிக்கொள்ளும் கதை. அந்த நண்பன் தற்கொலை மனநிலையில் இருப்பான். தியாப்ளஸ் அந்த நண்பனிடம், எதையும் பிடிவாதமாகச் செய்யாதே, எப்படியானாலும் நீ இறந்து போனதாக எனக்கு செய்தி வரும் என்று சொல்வான். அந்த உரையாடலின் போது ஜன்னல் வழியாக ஆட்டுமந்தை ஒன்று போகும். இப்படி சிறுகதைகளை எழுதிய பாணியில் வண்ணநிலவன் முக்கியமானவர். சுந்தர ராமசாமியின் கதைகளைப் பொருத்தவரை பல்லக்குத் தூக்கிகள், வாசனை கதைகள் எனக்கு முக்கியமானவை. 

 உங்களுடைய ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக இருப்பவர் யார்?

ஜெயகாந்தன் கதைகளில் நிறைய சொற்பொழிவு இருந்தாலும் அவர் கதைகள் எனக்கு பிரியமானவையாக இன்னும் இருக்கின்றன. அவருடைய கதைகளில் உபதேசம் இருந்தாலும் அந்த உபதேசம் நமக்குத் தேவை. அவர் எழுதிய பாரிசுக்குப் போ நாவல் முக்கியமானதுதான்.

தீவிரமான கதைகளாக இருக்கட்டும், வெகுஜனக் கதைகளாக இருக்கட்டும் நீதி என்பது வாசகர்களுக்கு எப்போதும் தேவையாகத்தான் உள்ளதா?

 இருந்துகொண்டே தான் இருக்கும். என்னுடைய முதல் ஆசான் ஜெயகாந்தன்தான். என்னுடைய பார்வை மற்றும் மனதை வடிவமைச்சது அவர்தான். தனி மனித உறவுகள், சமூக உறவுகள், கணவன்-மனைவி உறவு, பிறன்மனை உறவுகள் எல்லாவற்றையும் அவர் அர்த்தப்பூர்வமாக விவாதித்திருக்கிறார். அவரைச் சார்ந்துதான் நான் என்னை உருவாக்கிக் கொண்டேன்.
  





 















  


Comments