Skip to main content

Posts

Showing posts from March, 2014

சேப்பாக்கம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஏலம் போன விளையாட்டு வீரன் கைத்துண்டை இடுப்பில் செருகி யாருக்கோ சமிக்ஞை செய்து ஒரு இலகுபந்தை வீசுகிறான் அதே மைதானத்தின் வடக்கேயுள்ள பட்டாபிராமன் வாசலுக்கு எதிரே தினமும் எவரோ எதற்கோ தற்காலிகப் பந்தல் நிழலில் நின்று கோஷம் போட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள் கூலி உயர்வு மறுநியமனம் இழப்பீடு கோரி எங்கோ நடந்த துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சிகப்பெழுத்துகளில் துண்டுப்பிரசுரங்களை கடப்பவர்களிடம் கைநீட்டி வினியோகம் செய்கிறார் ஒருவர் இருவர் சிலர் விலகிச்செல்கிறார்கள் காலையிலேயே கடற்கரையில் சல்லாபம் முடித்துத் திரும்பும் வெளியூர் காதலர்கள் துண்டுப்பிரசுரத்தை கோர்த்த கைகளுக்குள் மடித்துக்கொண்டே கோரிக்கைகளை என்ன செய்வதென்று தெரியாமல் உப்பும் நீரும் மண்ணும் உதிராமல் வேகமாகக் கடக்கிறார்கள் விளையாட்டு தொடர்கிறது மினுமினுக்கும் துடைப்பங்களை ஆட்டி தான் ஆடி தசையும் ஆட உற்சாகமூட்டுகிறார்கள் சியர் லீடர் பெண்கள் ஆனாலும் தொடர்ந்து ஆடாமல் ஜெயிப்பவன்தான் மெய்யப்பன்

அந்தியும் புலரியும் ஒன்றாகவே தெரிகின்றன

ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்தி தொடங்கிவிட்டது மரங்கள் கிளைகள் இலைகள் பறவைகள் இருள்கோடுகளாக மாறிவருவதை நிறைவுடனும் நிறைவின்மையுடனும் சேர்த்தே பார்க்க முடிகிறது இருட்டுக்குள் நுழைய விரும்பாமல் தீக்கொன்றை பூக்கள் மட்டும் செஞ்சிவப்பாக அலறுகின்றன குழந்தைகளாய் அவை அடம்பிடிக்கின்றன அந்தத் தீக்கொன்றைகளை எனது காமமாக நான் சூடிக்கொள்ளப் போகிறேன். 0000 அந்தியும் புலரியும் எப்போதும் ஒன்றாகவே தெரிகின்றன இரண்டையும் சந்திக்க வைத்து பொழுதுகளை மயக்கிக் குழப்புவதில் ஒரு அசாதாரண போதையும் உண்டு மரம் திடீரென்று காகங்களாகச் சிதறி மீண்டும் மரமாகும் இரைச்சல் இசையாக மாறத்தொடங்கும் கணம்     நான் சிந்தும் கண்ணீரை எப்படி விளக்குவது?