Thursday, 31 October 2013

ஆஸ்கர் வைல்டை ரயிலில் படித்தபோது
ஆஸ்கர் வைல்டை ரயிலில் இருந்து படித்த போது, ஒரு கூற்றில் என்னை அவன் வெளியே எறிந்துவிட்டான். சூரியகாந்தி வயல்களில் இருந்து கிளிகள் பறந்தெழுந்தன. ஒரு புத்தகம் இப்படித்தான் ஒருவனை வெளியே விரட்டியடிக்க வேண்டும். பல யுகங்களாகப் பார்த்த மரங்கள் தான். அனைத்தும் புதிதாகத் தெரியத் தொடங்குகின்றன. பூக்கள் திருவிழா கோஷம் போடுகின்றன .  இயற்கைக்கு தன்னுணர்வுள்ள அழகோ, நீதியோ, மகிழ்ச்சியோ, முழுமையோ இல்லை. இயற்கைக்கு நான் வேண்டாம். எனக்குத் தான் அவர்கள் வேண்டும். இயற்கையோடு இணைந்து அதை அழகானதாகவும், நீதியுணர்வு கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் நானே மாற்றிக்கொள்கிறேன். அதை மறுபடைப்பு செய்கிறேன். நான்தான், நான் தான் காலம்காலமாக அதை மனிதாயப்படுத்தி என் கவிதையில், என் ஓவியத்தில், சிற்பங்களில், பாடல்களில், கதைகளில் இணைத்து அதற்கு ஒரு முழுமையைத் தருகிறேன்.

Saturday, 12 October 2013

எண்ணற்ற ஜன்னல்கள் மற்றும் வாயில்கள்

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் வழியாக மிக நுட்பமாக பரிசீலனை செய்தவர். மாறிவரும் மனித உறவுகள், அவனின் தனிமை, தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான மோதல்கள், அமைப்புகள் முன் மனிதன் சின்னஞ்சிறிய பரிதபாகரமான உயிராக மாறிநிற்பது ஆகியவற்றை காஃப்கா துல்லியமாக விசாரணை செய்துள்ளார்.
மனிதனை ஆரோக்கியமாகவும்அகிம்சை முறையிலும் சிறைப்படுத்திய, அவர்களை வளர்ப்பு மிருகங்களாகச் சுருக்கிய அலுவலகம் என்னும் தீங்கைப்  பற்றி தனது உருவக கதைகள் வழியாக பல்வேறு சித்திரங்களை காஃப்கா உருவாக்கியுள்ளார்.  
விசாரணை நாவலில் கண்ணுக்குப் புலப்படாத அமைப்பின் கீழ்நிலை ஊழியர்களால் யோசப் க. ஒரு நாள் காலை, எந்தக் காரணமும் இல்லாமல் அவன் அறையில் படுக்கையிலிருந்து எழும்முன்பாகவே கைது செய்யப்படுகிறான். அதைத் தொடர்ந்து தன்னை எப்படியாவது குற்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்க தொடர்ந்து போராடுகிறான். நீதி அமைப்பின் குளறுபடிகளை தன் மீதான தவறாக போடப்பட்ட வழக்கின் வழியாக சரிசெய்யவும், எதிர்த்துப் போராடவும் துணிபவன். ஆனால் படிப்படியாக யோசப் க. நம்பிக்கை இழக்கிறான். நீதி விசாரணைகளில் ஏற்கனவே காத்திருக்கும் எண்ணற்ற நபர்களைப் போல கிட்டத்தட்ட மூடநம்பிக்கைகளுக்குத் தள்ளப்படுகிறான். யோசப் க, கைது செய்யப்பட்டவனே தவிர அவனுக்கு எதுவுமே மறுக்கப்படவில்லை. காதலிப்பதற்கோ, உணவுண்பதற்கோ, நடமாடுவதற்கோ எதுவும் மறுக்கப்படவில்லை. தாம் கண்ணுக்குப் புலனாகாத ஒரு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறோம் மற்றும் விரட்டப்படுகிறோம் என்ற பிரக்ஞை தரும் தீராத வலியுணர்வைத் தவிர அந்தக் கைது எதையுமே யோசப் க.விடமிருந்து பறிக்கவில்லை. இறுதியில் தான் செய்த குற்றம் எதுவென்று தெரியாமலேயே 31 ஆவது பிறந்த நாள் அன்று இருட்டில் அகௌரவமான முறையில் இரண்டு காவலர்களால் தண்டிக்கப்பட்டு உயிர்துறக்கிறான்.
21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கும் நமக்கு காஃப்காவின் படைப்புகள் பொருத்தப்பாட்டுடன் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டியது அவசியம். காஃப்கா அவர் காலத்தில் இருந்த சில, பல நன்மைகளை தன்னகத்தே வைத்திருந்த நவீன ஜனநாயக அரசு மற்றும் நிர்வாக, நீதி அமைப்பில் நேரத்தொடங்கியிருந்த அபத்த நடைமுறைகளையும், குளறுபடிகளையும் ஆராய்ந்துள்ளார்.
இன்று நாம் காணும் ஜனநாயக அரசு மற்றும் நிர்வாக அமைப்பின் சர்வ வல்லமை சென்ற நூற்றாண்டில் வெளிப்படையாக தெரிந்ததுபோல கண்ணுக்குப் புலப்படும் தன்மை கொண்டதல்ல. அதன் இருத்தலுக்கு ஒரே வெளிப்படையான நியாயமாக திகழ்ந்த வெகுமக்களின் நலன்களை நிர்வகிப்பதிலிருந்தும் விலகி விட்டது. அதன் அதிகாரத்துவத்தையும், வல்லமையையும் புதிய அமைப்புகள் மூலம் நிர்வகிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழுவின் மேல் செலுத்தும் உரிமையையும், எதேச்சதிகாரத்தையும் பல கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் பெற்றுவருகின்றன. இந்தச் சூழலில் நம் காலத்தின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள, விமர்சிக்க காஃப்கா மேலும் பொருத்தபாடு உடையவர் ஆகிறார்.
எப்போதெல்லாம் ஒரு தனிமனிதனின் மேல் புலப்படாத ஒரு அமைப்பின் கரம் நீள்கிறதோ, எப்போது தன் மேல் நடக்கும் தாக்குதல்களுக்கு காரண-காரியங்களைத் துலக்கமுடியாமல் மனிதன் அவதியில் சகலத்தையும் பிராண்டி, உழன்று தன்னையும் துன்பத்திற்கு ஆட்படுத்திக் கொள்கிறானோ அதுவெல்லாமே காஃப்காவுக்கு நெருக்கமான தருணங்கள் தான். ரகசிய மரணதண்டனைகளும், அணுஉலைகள், அணைகள் போன்ற திடீர் திட்டங்களும், நம் குடிமக்களின் அங்கீகாரம் பெறப்படாமலேயே திணிக்கப்படும் நிலம் இது. பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் இல்லை. நீதிமன்றங்களில் நீதிபதி இல்லை. தண்டனைகளைத் தீர்மானிப்பது ஊடகங்களின் விவாத மேடைகள். முடிவுகள் எங்கோ, யாராலோ, யார் நலனுக்காகவோ எடுக்கப்படும் நிலையில் நமது நாடாளுமன்றம், ஒரு மெய்நிகர் தோற்றமே. சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் சார்பாக பெட்ரோலியக் குழாய்கள் தஞ்சையின் வேளாண்மை நிலங்களில் ஊடுருவிய சம்பவம் ஒரு உதாரணம்.
அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்கள்- தொழிலாளர்கள் முதல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள்வரை- தாங்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, அதற்கான சாட்சியங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய நீதிஅமைப்பின் கீழ் நாம் இருப்பதால், காஃப்கா இன்னும் பொருத்தப்பாடு உடையவர் ஆகிறார்.      

(தொடரும்)   
(சிலேட் இதழ்)