Saturday, 25 May 2013

நகுலனின் தனித்திணை- அய்யப்ப பணிக்கர்

தமிழில்: ஷங்கர்

(சினிமா இயக்குநர் மற்றும் நண்பருமான தி.ஜா.பாண்டியராஜன் நகுலன் குறித்து எடுத்த விரைவில் வெளிவர இருக்கும் ‘நினைவுப்பாதையில் மஞ்சள் பூனை ஆவணப்படத்தில், நகுலனின் ஆளுமை மற்றும் படைப்புகள் குறித்து மலையாளக் கவிஞர் அய்யப்ப பணிக்கர் ஆங்கிலத்தில் பேசியது. நகுலனின் எழுத்துக்கள் பற்றி அவர் பேசிய சூழல் இப்போதும் மாறவில்லை என்ற நிலையில்...)

திரு.டி.கே.துரைசாமி, எனக்கு 45 ஆண்டுகளாக நண்பர். நான் அவரை முதலில் சந்தித்தபோது நகுலன் என்ற பெயரில் அறியப்படவில்லை. அவர் முதலில் ஆங்கிலத்தில்தான் அதிகமாக எழுதி வந்தார். மும்பையிலிருந்து வெளிவந்த இதழ் அது என்று நினைக்கிறேன். தாட் என்ற இதழில் அவர் தொடர்ந்து கவிதைகளை எழுதிவந்தார். அவரது ஆங்கில எழுத்துக்களை பிற இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பெரிதாகப் பொருட்படுத்தாதது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அப்போதே அவரது ஆங்கில எழுத்துகள் குறித்து பார்த்தசாரதி போன்றவர்களுடன் பேசியுள்ளேன். ஆனால் அதற்கு போதிய கவனம் கிடைக்கவில்லை. அவரது ஆங்கிலக் கவிதைகள் இப்போது தொகுக்கப்பட்டு புத்தகவடிவில் வந்தால் அதைப் புதிய வெளிச்சத்தில் வாசிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம்.
பிறகு அவர் தமிழில் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர் அவருக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைத்ததென்று கருதுகிறேன். அவர் இப்போது தமிழில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
நான் அவரை 1960 இல் முதல்முறையாகச் சந்தித்தேன். குருக்ஷேத்திரம் என்னும் நெடுங்கவிதை வெளியான பிறகு அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். கோட்டயத்திலிருந்து வந்த பத்திரிக்கை ஒன்றில் அது வெளியாகியிருந்தது. அந்தக் கவிதையை மொழிபெயர்க்க விரும்புவதாக கூறினார். நான் உடனடியாக சம்மதித்தேன். அந்தக் கவிதை அப்போது மலையாளத்தில் கூட பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்குப் பிறகு அவர்தான் குருக்ஷேத்திரத்தை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார். தற்போதும் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பு தான், பிற ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதற்கு ஆதாரமாகப் பயன்படுகிறது. இப்படியாக அவர் எனக்கு சிறந்த நண்பராகவும், நல்ல புரிதல் உணர்வு கொண்ட மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.

அவரது கவிதைகளை எழுத்து பத்திரிக்கை பிரசுரிக்கத் தொடங்கியபோது, நாங்கள் 50களிலும்,60களின் ஆரம்பத்திலும் எழுதத் தொடங்கியிருந்த கவிதை வடிவத்திற்கு ஒருவகை ஏற்பு உருவாகத் தொடங்கியது. அவரது கவிதைகள் என் மீதும் எனது எழுத்துகள் மீதும் வலுவான தாக்கம் செலுத்தியிருக்கின்றன. அவர் நிச்சயமாக ஆங்கிலத்திலும் ஏற்பையும், அங்கீகாரத்தையும் மெதுவாகவாவது பெற்றிருக்க வேண்டும். பெங்குயின் புக் ஆப் இந்தியன் பொயட்ரி இன் இங்கிலீஷ் போயம்ஸ் என்ற நூலை அதின் ஜஸ்வால் தொகுத்தபோது நகுலன் மொழிபெயர்த்த ஷண்முக சுப்பையாவின் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் நகுலனின் கவிதைக்கு இடம் கிடைக்கவில்லை.  இப்படியாக ஆங்கில உலகில் ஒருவகை அநீதி அவரது கவிதைகளை மதிப்பிடுவதில் நடந்தது. அவரது கவிதைகள் முதலில் வெளியானபோது நம்மால் மதிப்பிட முடியவில்லை. வாசகர்களால் தாமதமாக வாசிக்கப்பட்டு காலம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சிறந்த உதாரணம் நகுலன். அவர் அந்த தடைகளைக் கடந்தார்.

நான் அவரது தமிழ்க் கவிதைகளை 1960களின் ஆரம்பத்திலேயே கேட்டுள்ளேன். நகுலனின் குரல் தனித்துவமானது.  
 ஒரு அந்தரங்கமான, வாக்குமூலத்தன்மை வாய்ந்த கவிதைகள் அவருடையது. அவரது அந்தரங்க உலகம் சார்ந்து இருக்கும். அப்படியான ஒரு உலகம் அப்போது இந்திய ஆங்கில எழுத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திருவனந்தபுரம் இந்திய ஆங்கில எழுத்துலகில் அதிகம் இடம்பெறவும் இல்லை. திருவனந்தபுரத்தில் இருந்து ஆங்கிலத்தில் எழுதியவர்களின் முக்கியமானவர் நகுலன்தான்.  அவர் படிப்படியாக ஆங்கிலத்தில் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்தினார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என்று தனது படைப்பாற்றல் முழுவதையும் தமிழில் எழுதுவதிலேயே செலவிட்டார்.

வாழ்க்கை தொடர்பாகவும், கவிதை தொடர்பாகவும் அவருக்கு இருந்த அணுகுமுறையும், கவிதை குறித்த அணுகுமுறையும் மிகவும் அசிரத்தையானது, கவனமற்றது போன்று தோற்றம் கொடுப்பது. அப்படித் தோன்றுமாறு தான் அவர் எழுதினார். சம்பிரதாயமாக பல எழுத்தாளர்களையும் போல கம்பீரமான, உறுதியான குரலில் அவர் படைப்புகள் பேசுவதில்லை. அவர் தன்னைப் பற்றி கூர்ந்த விமர்சனம் கொண்டவர்.

எழுத்தாளர்களின் மத்தியில் அந்தக் குணம் அபூர்வமானது. பெரும்பாலான எழுத்தாளர்கள் மற்றவர்கள் பற்றி கூர்ந்த விமர்சனத்துடன் இருப்பார்கள். ஆனால் அவர்களைப் பற்றி அவர்களுக்கு எந்த சுயவிமர்சனமும் இருக்காது. அப்படியான விமர்சனம் இல்லையெனில் நிழல்கள் போன்ற நாவலை எழுதமுடியாது.

அசிரத்தையான எழுத்து போன்ற தோற்றத்தில் அவர் சிரத்தையுடன் தனது அனுபவங்களை வித்தியாசமான வடிவங்களில் கவிதைகளாக வடித்தவர் அவர். தமிழ்நாட்டில் கல்கி மற்றும் குமுதம் படித்து வளர்ந்தவர்களுக்கு அவரைப் படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கு மேலும் காலம் எடுக்கும். தமிழ்நாட்டில் நகுலன் எழுத்துகளுக்கு பரவலான வாசிப்புத்தளம் இருக்கிறதா என்று எனக்கு இன்னும் சந்தேகமாகவே உள்ளது. ஆனால் இன்னமும் அவர் வித்தியாசமான எழுத்தாளராகவே இருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். விமர்சகர்களும், அறிஞர்களும் அவரை ஏற்றுக்கொண்டாலும் அவர் எப்போதும் தனியாகவேதான் இருப்பார். பிறரின் புகழ் அபிப்ராயங்களில் மின்னாமல், எந்த சமயத்திலும் விலகிநின்று தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்டு தன்னை எப்படி சிதறடித்துக் கொள்வது என்பது அவருக்குத் தெரியும். பாராட்டுகளிலிருந்தும், கரகோஷங்களிலிருந்தும் விலகிப் போவது எப்படி என்று அவர் அறிவார் . அந்தக் குணம் வேறு எந்த இந்திய எழுத்தாளர்களுக்கும் வாய்க்காதது என்று நிச்சயமாக நம்புகிறேன். வருங்காலத்தில் அவரது படைப்புகள் ஆங்கிலத்தில் அல்லது பிற மேலை மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்பதில் எனக்கு உறுதி உள்ளது.  அப்போது அவருக்குத் தற்போதுள்ளதை விட கூடுதலான புகழும் அங்கீகாரமும் கிடைக்கும்.

அவருக்கேயுரிய தனித்திணை அவரது எழுத்து. நகுலன் வெறுமனே கதைகளையோ, சம்பவங்களையோ சொல்வதில்லை. தமிழில் ஆதிக்கம் செலுத்திய போக்கை அவர் பின்பற்றவில்லை.  அதனால் தான் தற்போதும் அவர் சவாலான எழுத்தாளராக இருக்கிறார். எதிர்காலத்திற்குரிய எழுத்தாளர் அவர்.
இன்னும் ஒரே ஒரு விஷயம்தான் சொல்லவேண்டும். எந்த மொழியில் அவர் முதலில் அங்கீகாரம் பெறுவதற்குத் தவறினாரோ, அதற்குக் காரணமும் அவரது எழுத்தின் தனித்துவம்தான். அவரது எழுத்துகள் மந்தையோடு செல்லக்கூடியதாக இல்லாமல் தனித்துவத்துடன் இருந்தன. அதற்காகத் தான் அவர் நகுலன் என்ற பெயரையும் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தற்போது நகுலன் என்ற பெயர் அனைவரிடமும் அங்கீகாரம் பெற்ற பெயராக மாறியிருக்கிறது. நகுலன் என்ற பெயர்தான் தனக்கு துரைஸ்வாமி என்ற பெயரை விடப் பொருத்தமானது என்று அவர்தான் முதலில் உணர்ந்திருக்க வேண்டும். நகுலன், தமிழில் மாபெரும் கவிஞராகவும், எழுத்தாளராகவும் நினைவுகூரப்படுவார்.
டி.கே.துரைசாமி, திருவனந்தபுரத்தில் உள்ள மர் இவார்னியஸ் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தார். அவர் சம்பிரதாயமான விரிவுரையாளர்களைப் போலன்றி மாணவர்களிடம் தனிவகையான ஈர்ப்பை தன்பாணியில் உருவாக்கியிருந்தார். ஆனால் அவருக்கு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து சரியான முறையில் மரியாதை கிடைக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். அவரை நன்றியோடு நினைவுகூரக்கூடிய, தொடர்ந்து வந்து சந்தித்துச் செல்லகூடிய சில மாணவர்கள் இருந்தனர். சில மாணவர்களை ஆங்கிலத்தில் எழுத அவர் ஊக்குவித்தார். அவரின் தாக்கமும் அந்த இளம் எழுத்தாளர்களிடம் இருந்தது. கல்வித்துறை சார்ந்த ஆளுமையாக அவர் இல்லை. தனது எழுத்துகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார்.

Wednesday, 22 May 2013

மனித வாழ்வு முழுவதையும் பகுத்தறிவு பொறுப்பில் எடுக்கமுடியாது- அசீஸ் நந்தி-3தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்


(ஈரானைச் சேர்ந்த தத்துவவாதி ராமின் ஜகன்பெக்லூவுடன் அசீஸ் நந்தி நடத்திய உரையாடல் நூலான Talking India விலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. அசீஸ் நந்தி 1937 இல் பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராக பயிற்சி செய்தவர். அரசியல் உளவியலாளர் என்று தன்னைப் பற்றி கூறுகிறார். மனித இயல்பிலும், பொதுவாழ்க்கை தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பத்தை அரசியல் உளவியலாளர் என்ற பெயரே நியாயம் செய்வதாக கருதுகிறார். காந்தியை மறுநிர்மாணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி.
வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாசாரத் தரப்புகள் வெறுப்போ,விலக்கமோ இல்லாமல் உரையாடுவதை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இன்று வெவ்வேறு அடையாளத் தரப்புகளும், அதன் தர்க்கங்களும் பரஸ்பரம் மூர்க்கமாக மறுப்பதும், விலக்குவதுமாகவும், வெறுப்பதாகவும் மாறியுள்ள இன்றைய சூழலில் அசீஸ் நந்தியின் உரையாடல் இயல்பை நாம் பரிசீலிப்பது அவசியமானது.
வெகுமக்களின் வாழ்க்கை முறை, விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மேல் கொண்டுள்ள ‘உண்மையான விருப்பை வெளிப்படுத்துகிறார் அசீஸ் நந்தி. சிலேட் செப்டம்பர்-நவம்பர் 2012 இதழுக்காக மொழிபெயர்க்கப்பட்டது. இது முடிவுப்பகுதி)
ஒருவிதத்தில் நவீன பகுத்தறிவின் சடங்குகள், மரபை அழித்துவிட்டன. இருப்பினும் மரபு, நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாக கிராமப்புறங்களிலும் அறிவுஜீவிகளின் சொல்லாடல்களிலும் நுண்மையாக மறுவருகை புரிவதைப் பார்க்கிறோம். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?

நானும் அப்படியே நினைக்கிறேன். ஆனால் கிராமங்களில் அல்ல, நகரங்களில் தான் மதச்சார்பின்மை அதிகம் புலப்படுகிறது. இதை இரண்டு அல்லது மூன்று மட்டங்களில் பரிசீலிக்கலாம். பகுத்தறிவு, மனித வாழ்வு முழுமையையும் பகுத்தறிவு பொறுப்பில் எடுக்கமுடியாது என்பதால் மரபு மீண்டும் மேலெழுகிறது. பகுத்தறிவு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோற்கிறது. காரண-காரிய அறிவால் மட்டும் வாழ நினைக்கும் குறிக்கோள் என்பது போலியானது. 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவால் ஊக்குவிக்கப்பட்ட நோய்க்கூறு என்று அதை வகைப்படுத்தலாம். மக்கள் தங்கள் உணர்வுகள், ஆசாபாசங்கள் மற்றும் உள்ளுணர்வுகளால் வாழ்கிறார்கள். பகுத்தறிவுரீதியாக கிறிஸ்துமஸ் ஒரு பண்டிகை மட்டுமே என்றும் அதற்கு மதரீதியான முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் உணரலாம். ஆனாலும் அவர்களது மனதின் ஒரு மூலையில், கிறிஸ்துமஸ் குறித்த பழைய ஞாபகங்கள் உறுதியாக இருக்கும். இதனாலேயே, மதப்பிடிப்பு இல்லாத கிறிஸ்தவர்கள் கூட தற்போது அந்தப் பண்டிகை, வெறுமனே நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டதற்கு வருத்தப்படுகின்றனர். அந்தப் பண்டிகை வெறுமனே சந்தை நிகழ்வாகப் போய்விடக்கூடாது என்று கருதுகின்றனர். முழுமனதோடு இல்லாவிடினும் அவர்கள் கிறிஸ்துமசின் ஆதி உத்வேகத்துக்கு புத்துயிர் கொடுக்க முயற்சிக்கின்றனர். அப்படியான முறையில் மரபு மீண்டும் வருகிறது.
இரண்டாவது வகையில் பார்க்கப்போனால் மரபுகள், இளங்கலை மாணவர்களுக்கான எளிய பாடப்புத்தகங்கள் போல  வாழ்க்கைக்கான குறுக்கு வழிகாட்டியாக உள்ளன.  அத்துடன் எல்லாரும் வாழ்க்கையின் அனைத்து தளங்களையும் கற்றறிந்து, முழுமையான தர்க்க அறிவுடன், பகுத்தறிவுரீதியாக இருப்பது சாத்தியம் அல்ல. அவர்கள் சில பிராந்தியங்களில் வேரோடிய எதிர்வினைகளுக்கும், உள்ளுணர்வுகளுக்கும், உடனடித் தீர்மானங்களுக்கும் அவர்கள் ஆட்பட வேண்டும். மரபு, வார்படக்கருத்துருவங்கள்(ஸ்டீரியோடைப்ஸ்) வழியாகவே நுழையும். உதாரணத்திற்கு நமக்குத் தெரியவே தெரியாத சமூகக்குழுவிலிருந்து வரும் அந்நியரைச் சந்திக்கும் போது வார்ப்படக் கருத்துருவங்கள் கொண்டே சந்திப்பதை உதாரணமாகச் சொல்லலாம்.
வார்படக் கருத்துருவங்கள் சில சமயங்களில் கையடக்கமான நாட்டார் சமூகவியலாகவோ, தொழில்ரீதியான தன்மையை துறந்த கலாசார மானுடவியலாகவோ பயன்படலாம். அதுபோலவே மரபுகள் அன்றாட வாழ்வில் எளிமையான குடியானவனின் வாழ்க்கைத் தத்துவமாக நுழைகிறது. நீங்கள் அறிவுப்பூர்வமாக எங்கே முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லையோ அங்கே அது எட்டிப்பார்க்கிறது. நீங்கள் இயற்பியல் வல்லுனராக இருந்தால் நீங்கள் இயற்பியல் மரபுகளின்படி நடப்பீர்கள். வாழ்க்கையின் பிற பகுதிகளில் சமூக மரபுகளுக்குக் கட்டுப்படுவீர்கள். அது முரண்பட்டதல்ல. குவாண்டம் விசையியல் ஐன்ஸ்டீனுக்கு அசௌகரியம் தந்தது. அதனால், பகடைக்காய்களை கடவுள் உருட்டவில்லை என்று அவர் சொல்வதற்கு செவ்வியல் இயற்பியலை நாடினார். ஏனெனில் அது அவருக்குப் புதிய பிராந்தியமாக இருந்தது.  அவரால் உணர்வுப்பூர்வமாக அதைப் பற்றிப்பிடிக்க முடியவில்லை. காரண காரிய அறிவை திருப்திப்படுத்தக்கூடிய வழிகாட்டியாகவும் அவர் கருதவில்லை. அதனால் அவர் மீண்டும் மரபில் விழுந்தார். பலசமயங்களில் இதுதான் மரபுகளின் பலமான ஆதாரமாக உள்ளது. ஆயத்தமான, முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்ட, முழுமையாக சிந்திக்கப்பட்ட, பட்டறிவு சார்ந்த எதிர்வினைகளைச் செய்யமுடியாத பரந்தபகுதிகள் வாழ்க்கையில் உள்ளன. அங்கே நீங்கள் மரபுகளில் விழுந்துதான் ஆகவேண்டும். அப்படியான நிலையில், மரபு உங்கள் முன் உள்ள  விருப்பத் தேர்வுகளுக்கு ஒரு வரம்பைக் கட்டுகிறது. மரபை ஒரு எதிர்ப்பு வடிவமாகவோ அல்லது மறுப்பின் அடிப்படையாகப் பார்க்கும் எனது தனிப்பட்ட புரிதலை நான் ஏற்கனவே சொல்லியிருப்பதற்கு நான் மேற்சொன்னது கூடுதலாக வலுசேர்ப்பதாகும். 

ஏ.கே.குமாரசாமி அல்லது செயத் ஹோசீன் நாசர் போன்றவர்களின் மரபு தொடர்பான ஆன்மீகவாதத்துக்கும் உங்களது எழுத்துகள் மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்கும் மரபுவாதம் தொடர்பாக நீங்கள் எங்கே வித்தியாசப்படுகிறீர்கள்?

உண்மையில் அந்த சிந்தனைப் பள்ளி மேல் நிறைய மரியாதை உள்ளது. ஆனால் மரபைப் பார்க்கும் அந்த குறிப்பிட்ட வழியிலிருந்து வேண்டுமென்றே என்னைத் தொடர்ந்து தொலைவுபடுத்திக் கொள்ள முயன்றும் வருகிறேன். மரபு தொடர்பான எனது கருத்து என்பது அன்றாட வாழ்க்கையையும், சாதாரண மனிதனையும் கொண்டாடுவதுதான். அதன்வழியாகவே ஏனெனில் சாதாரண மக்களின் வாழ்வாதார அமைப்புகள் மற்றும் வாழ்க்கை முறையின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நவீனத்துவக் கருத்தாக்கத்தையும் விமர்சிக்கிறேன். இந்த ரீதியில் மரபு சார்ந்த கருத்துக்கு துல்லியமான அரசியல் வாய்ப்பு உள்ளது. அந்த அரசியல் வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது.
சாதாரண மக்கள் தங்கள் விருப்பத் தேர்வுகளை உருவாக்குகிறார்கள் எனில் அவர்கள் போதிய அறிவற்றவர்களாக இருக்கிறார்கள் என்றோ, மூடநம்பிக்கை கொண்டு,  பகுத்தறிவற்று இருக்கிறார்கள் என்றோ அர்த்தம் அல்ல என்பதே மரபுவாதமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பல நூற்றாண்டுகளாகவும், தலைமுறைகளாகவும் சேகரிக்கப்பட்ட ஞானம் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் தேர்வுகளை உருவாக்குகிறார்கள். இந்திய மரபு பற்றி நான் பேசும்போது, இந்திய நேற்றின் 3000 ஆண்டுகள் என் மனதில் உள்ளது. அது சாதாரண இந்தியர்களின் ஆளுமையாகவும் ஆசாபாசங்களாகவும் உள்ளது. சாதாரண இந்தியர்களின் ஆசாபாசங்கள் மற்றும் ஆளுமையையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவற்றுக்கு மரியாதை அளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த அனுபவங்கள், நூற்றாண்டுகளாகச் சேகரமான, வாழ்வின் மீது பரிசோதிக்கப்பட்ட கூட்டு அனுபவங்கள்.
மரபு தொடர்பான எனது அணுகுமுறையின் மற்றொரு அம்சத்தை நான் இந்த உரையாடலில் இதுவரை தொடவேயில்லை. இந்த மரபுகள் எல்லா இடங்களிலும் தேக்கத்தில் இருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன். வாழ்க்கை என்பது மேலதிகமாக தொழில்தன்மை வாய்ந்ததாக உருமாறி வருகிறது. அதன் களங்கள் மேலும் மேலும் நிபுணர்களின் மேலாண்மைக்குள் வந்துகொண்டிருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில் அதிகாரமற்றதிலிருந்து தனது சக்தியைப் பெற்றுக்கொள்ளும் எந்த எதிர்ப்பும், மரபுகளுடன் உரையாடக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். மகத்தான படைப்பெழுத்தாளர்கள் இதை புரிந்துகொண்டே இருக்கின்றனர். அப்படியான ஒரு எதிர்ப்பு வடிவத்தைப் பார்த்து அச்சம் கொள்வது கல்வித்துறை அதிகாரத்துவமாகும். தீவிர எதிர்ப்பின் வடிவத்தை வரையறுக்கும் தங்கள் உரிமை சுருக்கப்பட்டு விடுமோ என்று அவர்கள் பயப்படுகின்றனர். மறுப்பின் புதிய மொழியை அவர்களால் புரிந்துகொள்ளவோ கட்டுப்படுத்தவோ இயலாது. இதுதான் பிராமணிய அச்சம்.

தொடர்ச்சி என்பது இருப்பதாலேயே தான் நாம் மரபுக்கு மரியாதை அளிக்கிறோமா?
அதற்கு தொடர்ச்சி இருப்பதால் மரியாதை அளிக்க வேண்டியதில்லை. ஆனால் தலைமுறை, தலைமுறையாக வந்த ஞானத்துடன் தோய்ந்திருக்கும் மொழியைப் போன்றது மரபு. அப்படி இருப்பதாலேயே எப்போதும் சரியானதாக இருக்கும் என்றும் அர்த்தம் அல்ல. அதை நாம் மறுக்கும் நிலையில் கூட, தீவிரமாக அதனுடன் உரையாட வேண்டியிருக்கிறது. நீங்கள் தலையீடு செய்யவோ, மாற்றத்தை விழையவோ, ஜனநாயகப்பூர்வமாக புதிய ஒன்றை அறிமுகப்படுத்தவோ நினைத்தால், மக்கள் மீது போலீஸ் முறைகளைப் பயன்படுத்தி உங்கள் கருத்துகளைத் திணிக்கக் கூடாது என்று எண்ணினால் அவர்களது வாழ்வியல் பரப்புக்குள் நீங்கள் நுழைந்தே ஆகவேண்டும்.

மரபே ஒடுக்குமுறை இயல்புள்ளதாக மாறும்போது என்ன நடக்கிறது?

மரபான வடிவத்தில் இருப்பினும் சரி, அப்படி இல்லாமல் இருப்பினும், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவே செய்யவேண்டும். ஆனால் அப்படியான போராட்டத்துக்கு நீங்கள் மக்களைத் திரட்ட வேண்டுமெனில் அது வேறுவகையான ஆட்டநெறிகளைக் கோருகிறது.  நாடாளுமன்றம், பாலங்கள், ரயில் தண்டவாளங்கள் போன்றவற்றின் அடியில் வெடிகுண்டுகள் வைத்து நவீன அரசமைப்பையும், முதலாளித்துவத்தையும் நசுக்கிவிடலாம் என்று எண்ணுபவராக நீங்கள் இருப்பின், உங்களுக்கு மரபுகள் தேவையே இல்லை. மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஊக்கமான பங்களிப்புடன் ஒரு ஒடுக்குமுறை அமைப்பை அகற்றுவதைப் பற்றி நீங்கள் நினைத்தால், அவர்களது மனதைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் சிந்திக்கும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளவும், அவர்களது நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவதற்கும் அவர்களது மரபுகளுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். தங்கள் சொந்த நலன்களைக் காரண காரியப்பூர்வமாக கணக்கிட்டு மக்கள் கலகத்தில் இறங்குவதில்லை. அதனால் தான் நீங்கள் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் அவர்களது மரபுக்குள் நுழைய நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் பேசும் மொழியைப் பேச நீங்கள் அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள இன்னமும் நீங்கள் தீர்மானிக்கவில்லையெனில் உங்களது இலக்குகளை நவீன ஆயுதங்கள் கொண்டோ, அரசின் கொடும் அடக்குமுறை கொண்டோ அடைந்துவிடலாம் என்றோ உங்களது நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அவர்களது கலாசார மொழிவழக்கை நீங்கள் பேசாதவரை அவர்களது ஒத்துழைப்பை நீங்கள் ஒருபோதும் பெறவே போவதில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான்.

(முற்றும்)

Monday, 20 May 2013

காந்தியின் கீர்த்தி குறையவும் இல்லை- அசீஸ் நந்தி-2
தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

(ஈரானைச் சேர்ந்த தத்துவவாதி ராமின் ஜகன்பெக்லூவுடன் அசீஸ் நந்தி நடத்திய உரையாடல் நூலான Talking India விலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. அசீஸ் நந்தி 1937 இல் பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராக பயிற்சி செய்தவர். அரசியல் உளவியலாளர் என்று தன்னைப் பற்றி கூறுகிறார். மனித இயல்பிலும், பொதுவாழ்க்கை தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பத்தை அரசியல் உளவியலாளர் என்ற பெயரே நியாயம் செய்வதாக கருதுகிறார். காந்தியை மறுநிர்மாணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி.
வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாசாரத் தரப்புகள் வெறுப்போ,விலக்கமோ இல்லாமல் உரையாடுவதை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இன்று வெவ்வேறு அடையாளத் தரப்புகளும், அதன் தர்க்கங்களும் பரஸ்பரம் மூர்க்கமாக மறுப்பதும், விலக்குவதுமாகவும், வெறுப்பதாகவும் மாறியுள்ள இன்றைய சூழலில் அசீஸ் நந்தியின் உரையாடல் இயல்பை நாம் பரிசீலிப்பது அவசியமானது.
வெகுமக்களின் வாழ்க்கை முறை, விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மேல் கொண்டுள்ள ‘உண்மையான விருப்பை வெளிப்படுத்துகிறார் அசீஸ் நந்தி. சிலேட் செப்டம்பர்-நவம்பர் 2012 இதழுக்காக மொழிபெயர்க்கப்பட்டது. இது இரண்டாம் பகுதி)


படுகொலை செய்தவர் மற்றும் கொலையுண்டவர் இருவரின் கூட்டு அறிக்கை என்றும் இருவரின் கூட்டு நடவடிக்கை என்றும் உங்களது கட்டுரை ஒன்றில் காந்தியின் படுகொலை குறித்துச் சொல்லியுள்ளீர்கள்... காந்தி இப்படித்தான் தன்னைப் படுகொலை செய்யவேண்டும் என்று அப்பட்டமாக கேட்டதால் நான் அப்படிக் கூறுகிறேன். அதை அவர் பல்வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார். பதிலுக்கு நாதுராம் கோட்சே தனக்கான விடுதலை இச்செயல் மூலமே வரும் என்று காத்திருந்தார். தன்னையே அவர் தந்தைக் கொலையாளி என்றுதான் கூறுகிறார். விசாரணை நீதிமன்றத்தில் தன்தரப்பு வாதத்தை ஒடிபசின் அறிக்கையாகவே மொழிகிறார். இந்தியத் தாயின் நலனுக்காக சொந்த தந்தையைக் கொல்ல வேண்டியிருந்ததாக அவர் கூறுகிறார். அதனால்தான் காந்தியின் முன் பணிந்து வணங்கிய பிறகே சுட்டதாக சொல்கிறார். காந்தியின் மகன் தேவ்தாஸ், பின்னர் கோட்சேயைப் பார்க்கச் சென்றபோது தேவ்தாசின் தந்தையைத் தான் கொன்றிருந்தாலும் தனக்கு எந்த அவமரியாதை உணர்வும் இல்லை என்கிறார். காந்திக்கு தான் ஒரு நாயகனுக்கான மரணத்தை அளித்ததாகவும் வீரனின் மரணத்தை வழங்கியதாகவும் கூறுகிறார். காந்தி அதற்குத் தகுதியானவர் என்று கூறும் கோட்சே, காந்தியும் அதைப் பாராட்டியே இருப்பார் என்கிறார். அந்த இளைஞனின் கூற்றை காந்தியும் ஒப்புக்கொள்ளக் கூடும். வாழ்வைவிட அந்த மரணம் செயல்விளைவு கொண்டது என்று அவர் அறிந்திருக்கக் கூடும்.


இந்தியா காந்தியை மறந்துவிட்டதா அல்லது காந்தியின் செய்தி இந்தியர்களுக்கு இன்னும் உயிர்ப்புடன் உள்ளதா?

இந்தியா காந்தியை மறக்கவில்லை. ஆனால் நமது அரசியல் தலைவர்களும் அறிவுத்தளத்தில் ஒரு பிரிவினரும் அவரை மறக்க விரும்புகின்றனர். அவர்கள் அவரை மறப்பதற்கு மிகவும் கடுமையாக முயற்சிக்கின்றனர். ஏனெனில் காந்தியின் பல அம்சங்கள் நவீன, தேசிய அரசின் தேவைகளுக்கு பொருந்துபவை அல்ல. நமது அணுசக்திக் கொள்கை, ராணுவமயமாக்கம், தனிநாடு கேட்பவர்களை நாம் நடத்தும் முறை, வளர்ச்சி மற்றும் உயர்தொழில்நுட்பங்கள் தொடர்பான சம்பிரதாய, மையநீரோட்ட கருத்தியல்களை நாம் தழுவிக்கொண்ட முறை ஆகியவை அந்த பொருத்தமின்மையை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகின்றன. காந்தி குறித்த பொது நினைவுகள், இந்திய மேல்தட்டினரை ஸ்தம்பிக்கச் செய்பவையாக உள்ளன. காந்தியின் மரபு அவர்களது கைகளைக் கட்டியுள்ளதாக உணர்கின்றனர். அதனால் உலகளாவிய அரசியல் விளையாட்டில் தாங்கள் ஈடுபடமுடியாமல் இருப்பதாகவும் நினைக்கின்றனர். ஆனால் மிச்சமுள்ள இந்தியாவில் அப்படியில்லை. குறிப்பாக நகர்ப்புற, மத்தியதர வர்க்க, வெகுஜன ஊடகங்களின் தாக்கத்துக்கு உள்ளான வாழ்வுக்கு வெளியே காந்தியின் கீர்த்தி குறையவும் இல்லை. அவரது நினைவு அழியவும் இல்லை. அங்குள்ளவர்கள் அவரது நம்பிக்கைகளும், கருத்துகளும் அர்த்தமுள்ளவை என்று இன்றும் கருதுகின்றனர். இருப்பினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தற்போது வாழும் காந்தியர்களாக இருக்கும் நெல்சன் மண்டேலாவும் ஆங் சன் சு கியும் இந்தியர்கள் அல்லாதவர்கள் என்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. இன்னுமொரு இடத்தில் நான் கூறியிருப்பது போல, காந்தியைவிட சத்தியம் மகத்தானது. நீங்கள் காந்தியை மறந்தால், அவர் வலியுறுத்திய கருத்துகள் உலகின் வேறு பாகங்களில் வேறு வடிவங்களில் எழவே செய்யும். அவை ஒருபோதும் நம்மை காந்தியை மறக்கவிடாது. ஏனெனில் காந்தி மனித விழிப்புணர்வு மற்றும் ஆழ்மனவிருப்பின் நீடித்தசரடுகளை பிரதிநிதித்துவம் செய்பவர். அவரது போதாமைகள், தவறுகளைக் கூறி அவரை நாம் கீழிறக்கி விட முடியாது. மனித குலத்தின் அடிப்படையான அகத்தேவைகள் சிலவற்றோடு பிணைக்கப்பட்ட மதிப்பீடுகளால் உருவானவை அவரது எண்ணங்கள். இந்த விழுமியங்களை அவர் போற்றுவதால் நமக்குப் பிடிக்காமல் போனால், அதனால் அவரை மறந்தால் அந்த எண்ணங்களும் மதிப்பீடுகளும் பொதுவெளிக்கும் வேறு வழிகளில் வேறு நபர்கள் வழியாக நுழையவே செய்யும்.
உங்களது சிந்தனைகளில் காந்தியின் ஆழ்ந்த தாக்கம் எப்படி ஏற்பட்டது? வரலாற்றையும் கலாசாரத்தையும் நவீனத்துவப் பார்வையைக் களைந்து வாசிக்கும் உங்கள் வழிமுறையை காந்தியின் பார்வை வழியாகத்தான் அடைந்தீர்களா?

அது அச்சு அசலான காந்திய வழிமுறை அல்ல. ஆனால் என் பார்வை அதிகமும் காந்தியிடமிருந்து பெற்றது. காந்தியல்லாத வழியில் காந்தியைப் பயன்படுத்தும் என் முறைப்பாடு அது. அதுதான் 1970களிலிருந்து எனது அறிவார்த்த வாழ்க்கையை வடிவமைத்தது. காந்தியைப் பற்றிச் சொல்லும்போது கோபிநாத் கவிராஜ் மற்றும் சினுவா ஆச்சிபியிலருந்து யு.ஆர்.அனந்தமூர்த்தியையும், கஸ்தவா எஸ்தவா போன்ற கலாசார பிரக்ஞையின் குறிப்பிட்ட சரடைப் பிரதிபலித்த ஆளுமைகளையும் சேர்த்துதான் அர்த்தப்படுத்துகிறேன். பிற பலரையும் போலவே, நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் தான் நான் காந்தி நோக்கித் திரும்பினேன். ஏனெனில் ஜனநாயகத்தை ரத்துசெய்வதென்பது இந்தியாவில் சாத்தியம் என்பதை என்னைப் போன்றவர்கள் எண்ணிப்பார்த்ததேயில்லை. பொதுவான தாராளவாத, சோசலிச கருத்தியலில் எந்தப் பதில்களும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இந்திய தேசிய காங்கிரசால் இந்த ஜனநாயக ரத்து என்பது அங்கீகரிக்கப்படும் என்றோ, அக்கட்சி படிபடியாக இந்திராகாந்தியின் ஆதரவாளர்களின் மடமாக சுருங்கும் என்று நாங்கள் கருதவில்லை. நேரு கொண்டிருந்த உலகியல்பார்வையின் சில அம்சங்கள் மீது எங்களுக்கு சில சந்தேகங்கள் இருப்பினும் அவரது உலகநோக்கிற்குள்ளிருந்து அரசியல் சுதந்திரம் மற்றும் குடிமை உரிமைகள் மீது இப்படியான தாக்குதல் வருமென்று நாங்கள் நம்பியதில்லை.. அந்த தருணத்தில் தான் வேறு பலரையும் போலவே நான் காந்தியை நோக்கி நகர்ந்தேன்.
இருப்பினும் காந்தியை நோக்கிய இயக்கம் ஏற்கனவே தொடங்கியிருந்தது. இந்திய அறிவுஜீவி வட்டங்களில்- குறைந்தபட்சம் சில வட்டங்களிலாவது- இந்தியாவில் வசிக்கும் மக்களில் நான்கில் மூன்று பகுதியினர் கிராமத்தினர் என்பதை அங்கீகரிக்கத் தொடங்கியிருந்தனர். அந்த மக்களுக்கு வாக்குரிமையும், சொந்தமான கருத்துகளும், தேர்வுகளும், விருப்பங்களும், உலகப்பார்வைகளும் பொது சொல்லாடலில் பிரதிபலிக்கப்படவேயில்லை என்பதும் உணரப்பட்டது. இந்த விலக்கப்பட்ட குடிமக்கள் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தில் அங்கீகாரத்தை அனுபவித்ததேயில்லை. இந்தியாவின் பிரதமர் பொறுப்பை காமராஜ் நாடார் உதறியது விபத்து அல்ல. ஏனெனில் அவருக்கு இந்தியோ, ஆங்கிலமோ தெரியாது. இந்த விலக்கப்பட்ட குடிமக்களின் பிரதிநிதிகள் பொதுவாழ்வில் நுழைந்தனர் என்றாலும் அடையாளச் சிதைவு வழியாகவே அவர்களின் நுழைவு இருந்தது. அரசியலில் நுழைந்த இந்த புதியவர்கள் தங்களது மூடநம்பிக்கைகள், விருப்பு வெறுப்புகள் மற்றும் தங்களின் பழைய கருத்துகளைக் கொண்டுவருகின்றனர் என்ற புகார்களை நாம் அனைவரும் கேட்டோம்.
இதனால்தான் இந்தியாவில் உள்ள அரசியல் கலாசாரம், ஒருபோதும் தனது உலகத்தில் இருக்கும் சாதாரண மக்களின் விருப்புவெறுப்புகள், முன்தீர்மான எண்ணங்கள், நம்பிக்கைகள், உணர்வுகளுடன் உரையாடக்கூட ஒருவரை அனுமதிக்கவில்லை. இதனால் இந்த உணர்வுகளைப் பெரும்பாலானவர்கள் மறைக்கவும், பொதுவான தாராளவாதக் கருத்துகளையும் முன்பு மோஸ்தராக இருந்த ஜனநாயக சோசலிச சுலோகங்களையும் இந்திய அரசியல் பற்றி பேசும்போது சொல்லத்தொடங்கினார்கள். இதற்கு நேர்மாறாக அவர்கள் மற்றொரு சுயத்தை உள்ளே போஷித்துக் கொண்டிருந்தனர். அந்த சுயத்தை ரகசியமாகவோ, மறைத்தோ பொதுவாழ்வில் கொண்டுவந்தனர். இது பெரிய அளவில் நடந்துவந்த நிலையில், சில இந்திய அறிவுஜீவிகளுக்கு, இப்பிரச்னையை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற விழிப்புணர்வு படிப்படியாக தொடங்கியது. பெருந்திரள், மக்கள், ஒடுக்குமுறை, வன்முறை என்று பேசுகையில் மக்கள்திரளுடன் தொடர்ந்த பரிச்சயம் இருக்க வேண்டும். அவர்கள் இந்த உலகைப் பார்க்கும் விதம், அது தொடர்பாக அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கருத்து, அவர்கள் அரசியலைப்பற்றி நினைக்கும் வழிமுறை, பொதுவாழ்விலிருந்து அவர்களது எதிர்பார்ப்புகள் இவை குறித்தெல்லாம் அறிவுஜீவிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நெருக்கடி நிலை தான், பொதுவான, பழகிய ஸ்லோகங்கள் வேலை செய்யாது என்பதை இங்கே எல்லாருக்கும் பாடம் புகட்டியது. கலாசாரங்கள் மற்றும் மரபுகளின் உள்ளார்ந்த வலிமைகள் மற்றும் வளங்களைப் பரிசீலித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் ஒரு நோக்கத்துக்காக மக்களைத் திரட்டும் நம்பிக்கையையாவது ஒருவர் வைக்கமுடியும். சுதந்திரத்தின் மீது விடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்த்து அவர்களுடன் இணைந்து வேலை செய்யமுடியும்.

மரபு என்னும் கருத்து குறித்து உங்களிடம் நான் பேசவிரும்புகிறேன். அது மிகவும் முக்கியமானது. இன்றைய மரபை எப்படி வரையறுப்பீர்கள். அதை எப்படி விவரிப்பீர்கள்? நவீனம் என்ற கருத்தியலுக்கு உங்கள் வரையில் அது எப்படி எதிராகத் திகழ்கிறது?

நான் எப்போதும் வரையறைகளை தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால் உங்களுக்காக அதை முயற்சிக்கிறேன். காலத்தின்மீது கூட்டாகவும், தனிப்பட்ட வகையிலுமான இருத்தலுணர்வின் தொடர்ச்சியை உத்தரவாதம் செய்யும் கலாசாரத்தின் ஒரு பகுதிதான் மரபு என்று நினைக்கிறேன். அதனால்தான் மரபுகளைப் பற்றி பேசும்போது, பகுத்துணரும் தர்க்க அறிவையும் தாண்டிய ஒரு அமைப்பாக நமது மனதில் இருக்கிறது. சுயத்தைப் பற்றிய கருத்தொன்றும் நம்மிடையே உள்ளது.  அது தொடர்ந்து வரும் ஒன்று எனவும் அது இறந்தகாலத்தோடு தொடர்ச்சியை வைத்திருப்பது போலவே எதிர்காலத்தோடும் தொடர்ந்து பராமரிக்கும் என்பதே. அதே தொடர்ச்சியைத்தான் நாம் பேசிய கூட்டுநினைவு பகிர்கிறது. இந்த ரீதியில்தான் நான் மரபுகளைப் பற்றிப் பேசுகிறேன். பொதுவான, ஒத்த பண்புகளுடைய, நினைவு கொள்ளப்படும் நம்பிக்கைகள், விழுமியங்கள், பண்புக்கூறுகள் என எல்லாவற்றையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். இதற்கெல்லாம் மேலாக முரண்களைக் களையும் புராணிகங்கள் வழியாக அவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம்.
காலம்காலமாக கலாசாரரீதியாக உருவான அறிவு அமைப்பின் தொகுதியாக மரபை பார்ப்பதன் மூலம் என்னுடைய ஆய்வில் அதற்கு இரண்டாவது அர்த்தம் ஒன்று இருக்கிறது. பகுக்கும் தர்க்க அறிவைத் தாண்டிய அமைப்பாக மரபு உள்ளது என்ற உண்மையை நான் அங்கீகரித்தாலும் நான் மேற்சொன்னதன் அடிப்படையில் மரபு என்ற கருத்துக்கு தெளிவான அடிப்படை இருக்கிறது. இந்த அர்த்தம் நவீனத்துவர்களிடம் கடும் உணர்வுகளைத் தூண்டக்கூடியது. அறிவொளிக்காலப் பார்வையும், மதச்சார்பற்ற கருத்தியல்களும் ஆன்மீகம் மற்றும் மதத்தின் வடிவக்கூறுகளை பன்மைப்படுத்த அனுமதிப்பவை. ஏனெனில் இந்த வடிவக்கூறுகள் முக்கியத்துவம் அற்றதாகவோ, குறைந்த முக்கியத்துவம் கொண்டவையாகவோ பார்க்கப்பட்டன. குறிப்பாக அறிவியலைப் பொருத்தவரை, அறிவின் பன்மைத்துவம் அபாயமாகவும், கவிழ்க்கும் தன்மையுடயதாகவும் நம்முடைய காலத்தில் ஆழமாக வேரோடிப் போயிருக்கும் படித்த மேட்டுக்குடி மக்களின் அறிவார்த்த, தார்மீக அந்தஸ்துக்கு சவாலாகவும் பார்க்கப்படுகிறது.  
நான் உரிமைகொள்ள ஆசைப்படும் மூன்றாவது அர்த்தமும் உண்டு. மரபு குறித்த இந்த அர்த்தம் சில சமயங்களில் கலாசாரத்தின் அர்த்தத்துடன் குவிந்துவிடக்கூடியது. அந்த அர்த்தப்படி நவீனத்துவத்தை மறுப்பதாக மரபு இருக்கிறது..நவீனத்துவத்துக்கு எதிர்சொல்லாக மரபை மறுகண்டுபிடிப்பு செய்யவும், ஒரு விரும்பத்தக்க சமூகத்துக்கான மாற்று நோக்கங்களுக்காகவும், எதிர்ப்புக்கான மூலவளமாகவும் மரபைப் பயன்படுத்த விரும்பினேன்.

 (தொடரும்)

Friday, 17 May 2013

நான்கு கவிதைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

மஞ்சள் ரோஸ்
மஞ்சள் ரோஸ்
என்று
தயங்காமல்
அவளை அழைத்துவிடு
அவள் தானாகவே
ஒரு மஞ்சள் ரோஸ்
ஆகிவிடுவாள்
இல்லையென்றாலும்
கவலை இல்லை
அவளை
ஆக்கிவிடலாம்.

000
நான் சிறையிருக்கிறேன்
ஆனால் 
குரங்குகள் உண்டு
வெளிச்சம் உண்டு
காதல் உண்டு
பாடல்கள்
உண்டு
00000இவள்
அவள் அல்ல
அவளை நான்
பார்த்த
பொழுது
இவள்
குழந்தையாக
இருந்திருப்பாள்
ஆனால்
இவள்
ஜெயலட்சுமிதான்

000000

மதியவேளை
மெல்ல மயங்குகிறது
இதற்கு முன்பு யாரும்
பார்த்திராத
மயக்கம் அது
நான் பார்க்கிறேன்..
மரம்
ஜன்னல்
இலைகளில்
தெரியும்
பறவைகள்
பார்வைக்கு
முன்பைவிட
துல்லியமடைகின்றன
ரோஜாவின் நிழலில் அல்ல
அரச மரத்து நிழலில்
இருக்கிறது
என் வீடு
000000
(கல்குதிரை-பனிக்கால இதழ்-21)