Skip to main content

மதியத் தூக்கம்



ஷங்கர்ராமசுப்ரமணியன்



அந்த மலைமண்டபக் கல்முற்றத்தின்
குளிர்ச்சியில்
நதியென பண்டிகைக்கால ஸ்படிக ஒளி
நால்திசையிலும் படர
உனக்காக காத்திருந்தேன்.
அண்மை அறையிலிருந்து உணவின் நறுமணம்
காற்றில்
ரகசியமாய் நீ பிரவேசித்தது எனக்குத் தெரியும்
உன் நிழல் என் உடல் படரும்வரை
நான் திரும்பவேயில்லை
என் இதழ்பெற்ற நீ குனிகையில்
கொலுசொலியுடன் சிறுபாவாடை
குழந்தைகள்
ஆரவாரத்துடன் நம் இடம் கடந்தனர்
முற்றம் கடந்தபின்
அவர்கள் நினைவில் நாம் இல்லை
மலைமுகப்பில்
உடை பரபரக்க உன் கரம் பற்றினேன்
மண்டபம் திரும்புகையில்தான் நீ
மறைந்துபோனாயோ கிருஷ்ணா
எல்லாம் கனவு போல் இருக்கிறது
அறை மூலையில் உன் காலணி
இருந்தது
உன் இருப்பின் அதிர்வை
என்னுடன் அரூபமாய் காட்டித்தந்த்து
இருப்பினும்
என் தலைகோதி சிரம்பற்ற நீ இல்லை
அந்தி கவிழும் ஆற்றாமையில்
நிலைக்கண்ணாடி வந்தடைந்தேன்
கண்ணாடி நீலச்சொரூபமாய்
தளும்ப ஆரம்பித்திருந்தது.

 (மிதக்கும் இருக்கைகளின் நகரம்-2001 தொகுதியிலிருந்து)

Comments