Skip to main content

மழை



 ஷங்கர்ராமசுப்ரமணியன்



ஒரு கொடும் வெயில் நாள்
தன் முடிவில்
மழையால் கனிவது
ஒரு முரண்நகை
சற்று அபத்தம்.
இந்த நீண்ட கோடையின்
கோராமை தாங்காது
சற்றுமுன்
தற்கொலை செய்தவனின் உடலை
மழை நனைக்கிறது
நீ வெயில்கால வீட்டிலேயே
இருப்பதாகவும்
நான் மழைக்கால வீட்டிற்கு
நகர்ந்திருப்பதாகவும் நினைப்பது
ஒரு தோற்றம் தான்
உடை விலகும் அச்சமின்றி
நீ கைகளை உயர்த்தி
சுதந்திரமாய்
கூந்தலை அள்ளி முடிக்கலாம்
என் காமம் அடக்கம் கொண்ட
மேட்டை சுற்றிச் சிரிக்கிறது
இந்த மழை
மூடிய இலைகள்
அதன் தொலைவு
இன்று விற்காமல் போன
பழரசப் பாத்திரம் மழையில்
நனைய
ஈரம் சொட்ட சொட்ட
வீடு திரும்பும் அவன்
நானாகவும் இருக்கலாம். 

(அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் தொகுப்பிலிருந்து)

Comments