Skip to main content

ஒரு நாள்



நீதிபதிகள் குடியிருப்பில் தனியே வசிக்கிறார்
மாவட்ட சார்பு நீதிபதி
வீட்டில்
ஒரு நாற்காலி
ஒரு உணவுத்தட்டு
ஒரே ஒரு கத்தியை
பராமரித்து வருகிறார்
காலை நடைக்குச் செல்லும்போது
அழைத்துச் செல்லும் வளர்ப்புநாயை
தெருநாய்களுடன் குலாவ
நீதிபதி அனுமதிப்பதில்லை
குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட
நார்ச்சத்து உணவையே
கவனமாக தேர்ந்தெடுத்து உண்கிறார்
அத்தியாவசியப் பொருட்கள்
காய்கறிகளை சிறுவணிகர்களிடமே
வாங்குகிறார்
பாதுகாப்பான பரஸ்பரநிதி திட்டங்களிலேயே
முதலீடுகளைச் செய்பவர்
குழந்தைத் தொழிலாளர் முறை
மரணதண்டனைக்கு எதிரானவர்
இறைச்சி சாப்பிடாதவர் என்றாலும்
நீதிபதியின் வீட்டுக்கத்தி கூர்மையானது
நீதிமன்றத்தின் ஓய்வுஅறையில்
மதிய உணவுக்குப்பின் சற்று இளைப்பாறி
அன்றைய வழக்குவிவரக் கட்டுகளைப் பிரிக்கிறார்
தாமதமாகிறது
பணிவுடன் உணர்த்துகிறார் ஊழியர்
வேகமாக கூடத்துக்குள் நுழைகிறார் நீதிபதி
கசகசக்கும் வெயிலில்
முடிவில்லாமல் மூச்சைப் பெருக்கியபடி
குற்றத்தரப்பும் வழக்காடுபவர்களும்
சாட்சி சொல்ல தாமதமாக வந்த மருத்துவரும்
போலீஸ்காரர்களும்
சேர்ந்து வளாகத்திண்ணையில் காத்திருக்கிறார்கள்
உறக்கம் அழுத்த
வழக்கைக் கேட்க தொடங்கிவிட்டார்
நீதிபதி
மருத்துவர், இறந்தவரின் தலையில்
காயம்பட்டிருக்கிறது என்கிறார்
நெற்றியிலா, முன்தலையிலா?
திருப்தியான கேள்வி என்று
தன்னையே பாராட்டிக்கொண்டார் நீதிபதி
மருத்துவர் குழம்பி மௌனமானார்.
"போலீசும் மருத்துவரும் சேர்ந்து
நீதிஅமைப்பையே கேலிக்குள்ளாக்குகிறீர்கள்"
அன்றைய கண்டனத்தை நிறைவாகச் செய்துவிட்டு
வழக்கை மற்றொரு தேதிக்கு தள்ளிவைக்கிறார் நீதிபதி.

Comments