Skip to main content

விசில்



ஷங்கர்ராமசுப்ரமணியன்

ரிலீஸ் நாளன்றே சகுனி படத்திற்கு மாயாஜால் போயிருந்தேன். வெள்ளிக்கிழமை மதியவேளை. படம் போடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் நானும் நண்பரும் நுழைந்துவிட்டோம். அழைத்துப்போன நண்பர் அந்தப் பத்துநிமிடங்களைக் கூட மிச்சம் வைக்காமல் உடனடியாக விமானம் பிடித்து குறட்டையில் ஆழ்ந்துவிட்டார். எங்களுக்குப் பின்வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளம் வந்து அமர்ந்தது. கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகியிருக்காது. உடன் பணிபுரியும் தோழியின் பிறந்தநாள் ட்ரீட்டுக்காக படம்பார்க்க வந்திருக்கிறார்கள். தோழி, திரையரங்கத்தின் இருட்டிலும் நீலஉலோக நிறச் சேலையில் பளபளவென்று இருந்தார்.

படம் போடுவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்தது. கலாய்ப்பும், உற்சாகமுமாக ஒருவரையொருவர் வாரிக்கொண்டிருந்தனர். வார்த்தை நரி, உயர உயரக் குதித்தது உரையாடலில். இன்னும் இரண்டு நிமிடங்கள் படம் போட இருந்தது. அது எல்லாருக்கும் நிச்சயமாகத் தெரியும். அவர்களில் ஒரு பையன் ஒரு விசிலை அடித்தான். ஒரு நண்பர், இன்னும் டெம்போ வேணும்டா மாப்பிள என்றார். இன்னும் சத்தம் கூடியது. என் நண்பர் அப்போதுதான் விழித்தார். மூன்றுக்கு ஒரு யுவதி என்று இருந்த அந்தக் குழுவின் பாலின விகிதத்தில், விசில் நிறைந்த மதிப்பையும், அடித்த பையனுக்கு கூடுதல் மதிப்பெண்களையும் தந்திருக்கும். அதுதான் நியாயமும் கூட.

ஆனால் எனது சிறுவயதில் திரையரங்குகளில் கேட்ட விசில் சத்தங்களின் அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது அது விசிலின் உருப்போலி என்று தோன்றியது. இந்த விசிலும் உயிரைவிட்டு உருவாக்கப்பட்ட ஒலிதான்.

ஆனால் எனது நினைவில் உள்ள விசிலில் உக்கிரம், அடையாளம், கலகம், எதிர்பாராத தன்மை, காத்திருப்பின் நெடுந்தவிப்பு, அபாயம் ஏதும் இல்லை. நான் கேட்ட விசில்கள் திரையரங்குக்கு வெளியே அடிக்கும் மழையையும், வெயிலையும் தாங்கியிருப்பவை. நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை அந்த விசில்களைக் கேட்டிருக்கிறேன். அந்த விசிலைத்தான் நான் மாயாஜாலில் கேட்ட விசில் நகல் செய்கிறது.

படம் போடுவதற்கு முன்னால் விசில் வேண்டும் என்று திரையரங்கமே ஏற்பாடு செய்யும் விசிலின் தன்மையை ஒத்திருந்தது அந்த விசில்.- ஐபிஎல்லின் சீர் லீடர்சைப் போல. வாடிக்கையாளரும், பொருளை விநியோகம் செய்பவரும் முயங்கிவிட்ட இடத்தில், இந்த விசில் வேகவேகமாக இறந்தகாலத்தைப் பிரதிபலிக்க முயன்றதுதான் பரிதாபமானது.

நாம் உருப்போலி செய்ய இயலாதபடி வேகவேகமாக இறந்த காலத்தின் பொருட்களை இழந்துவருகிறோம் என்ற உணர்வு. அந்த விசிலைக் கேட்டபோது எனக்கு ஏற்பட்டது. விளம்பர வடிவமைப்பாளர்களிடமமும், சினிமாக்களிடமும், பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடமும் நமது இறந்தகாலத்தை, அதன் நினைவுகளை சமூகத்துக்கு சமைத்துப் பரிமாறும் வேலையை நாம் ஒப்படைத்துவிட்டோம். அங்கிருந்துதான் விசில் போன்ற தோற்றமுள்ள விசில், மாயாஜால் திரையரங்கத்தில் தயாரிக்கப்படுகிறது.

எனக்கு அருகில், அந்த திரையரங்குக்கு கொஞ்சம் அந்நியமாய், ஒரு அம்மாவும், அவரது மகளும் படத்திற்கு வந்திருந்தார்கள். அந்த அம்மாவை எனது இடதுபுற இருக்கையில் உட்காரவைத்துவிட்டு அடுத்த இருக்கையில் அந்த யுவதி அமர்ந்தார். மகள் தனது கையில் பாப்கார்ன் பாக்கெட்டை வைத்து அரைத்துக்கொண்டிருந்தார். படம் போடுவதற்கு இன்னும் ஒரு நிமிடமே இருக்கும் போது அந்த அம்மா பேசத்தொடங்கினார்.

நம்ம கடலூர்ல இருக்கும்போது, உங்க பெரியம்மா நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்க பெரிய சினிமா பைத்தியம். ஒரு வாரத்தில் நாலு சினிமா. தனியாவே எல்லா தியேட்டருக்கும் போய் பார்த்துட்டு வந்துட்டாங்க. ஐம்பது பைசாதான் டிக்கெட்" என்றார். அந்தப் பெண்ணும் அதைக்கேட்டு வியந்து பாப்கான் அரவையோடு 'சான்சே இல்ல' என்றார்.

அந்தப் பெரியம்மாவை நாம் அத்தனை சீக்கிரத்தில் இழந்திருக்க வேண்டாமோ?

ஆமாம். எனக்கும் ஒரு பெரியம்மா இருந்தாள். பெரியப்பா நாகர்கோவில் ஆரியபவனில் பரிசாரகராக இருந்தார். கோட்டார் குலாலர் தெருவில் அவர்கள் இருந்தனர். அங்குள்ள ஓலைக்கூரை விடுகளில் ஒன்று அது. வீட்டின் திண்ணை ஓரமே சாக்கடை ஓடும். வீடுகளுக்கு மின்சாரம் வரவில்லை. சாயங்காலம் நாலு மணிக்கே வேலைகளை முடித்துவிட்டு பயோனியர் ராஜ்குமாரில் என்ன படம் மாறியிருக்கு என்று பேசத்தொடங்கி விடுவார்கள். பெரியம்மா சினிமாவுக்குப் போகாத நாள் என்றால் இரண்டு நாட்கள் தான் வாரத்தில் இருக்கும். எஸ்எஸ்எல்சி படித்து அரசு வேலைக்குப் போன எனது அம்மா சிவாஜி ரசிகை ஆனாள். பத்தாம் வகுப்பில் படித்து பெயிலாகி, கல்யாணமான பெரியம்மா எம்ஜிஆரின் ரசிகை ஆனாள்.

(காட்சிப்பிழை, ஜூலை இதழில் வெளியானது)

Comments