Saturday, 30 June 2012

கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்

ஷங்கர்ராமசுப்ரமணியன்
(மணல் புத்தகம்,3-  2009 இல் எழுதப்பட்ட தலையங்கம்)
புகைப்படம் - சந்தோஷ் நம்பிராஜன்


ஜப்பானில் உள்ள நாகாசாகியில் வசித்த பெண் ஒருத்தி, கலை வேலைப்பாடுள்ள நறுமணப் புகைச்சிமிழ்களைத் தயார் செய்வதில் அரிதான திறன் பெற்றவளாய் இருந்தாள். அவள் பெயர் கமே. ஜப்பானில் தேநீர் சடங்கு நடக்கும் இடங்களிலும், மடாலயங்களிலும் அவள் தயார் செய்த நறுமணப் புகைச்சிமிழ்கள்தான் அலங்கரித்தன.
கமேயின் தந்தை நல்ல ஓவியக்கலைஞர். அவர் குடிப்பதில் மிகவும் விருப்பமுடையவர். கமே அவள் தந்தையிடமிருந்து கலையையும் குடியையும் கைவரப் பெற்றிருந்தாள்.
கமேக்குச் சிறிது பணம் கிடைத்தால் போதும். ஓவியக்கலைஞர்கள், கவிஞர்கள், பணியாளர்கள் என்று அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்து மகிழ்விப்பாள். ஆண்களுடன் சேர்ந்து கலந்து புகைப்பதிலும் அவளுக்கு விருப்பம் அதிகம். இந்த விருந்துகளில் இருந்துதான் அவளுக்குப் புதிய வடிவங்கள் பற்றிய கற்பனை பிறக்கும்.
கமே தனது படைப்புகளை உருவாக்குவதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால் அவள் உருவாக்கும் ஒவ்வொன்றுமே சிறந்த கலைப்படைப்பு ஆகிவிடும். அவளது நறுமணப் புகைமூட்டிகள் வீடுகளிலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. அந்த வீடுகளில் இருந்த பெண்கள் குடிப்பதேயில்லை. புகைப்பதுமில்லை. அவர்கள் ஆண்களுடனும் சகஜமாகப் பழகுபவர்கள் இல்லை
 
ஒரு நாள் நாகசாகியின் மேயர் கமேயைக் காண வந்தார். தனக்கென்று நறுமணப் புகைச்சிமிழ் ஒன்றை அவள் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேயருக்கான நறுமணப் புகைமூட்டியை உருவாக்க கமே ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டாள். அந்தச் சமயத்தில் மேயருக்கு இடமாற்ற உத்தரவு வந்தது. அந்த அவசரம் காரணமாக மேயர், கமேயிடம் சென்று தனக்காகச் சீக்கிரம் புகைச்சிமிழ் வேலையை முடிக்க வேண்டும் என்று கோரினார்
 
கடைசியில் ஒரு வழியாகத் தூண்டுதல் பெற்ற கமே, ஒரு நறுமணப் புகைச்சிமிழை இரவு பகலாக விழித்திருந்து உருவாக்கினாள். பணி நிறைவடைந்தவுடன் அவள் உருவாக்கியதை மேஜை ஒன்றில் வைத்து நீண்டநேரம் கவனத்துடன் அவதானித்தாள்.
பிறகு அந்த நறுமணப் புகைச்சமிழிதான் தன் துணைவன் என்பதுபோல், அதனுடன் குடிக்கவும், புகைக்கவும் தொடங்கினாள். நாள் முழுவதும் அதனைப் பார்த்துக்கொண்டே கடைசியில், ஒரு சுத்தியலை எடுத்து, நறுமணப் புகைமூட்டியைத் துகள்துகளாக நொறுக்கினாள். அவள் மனம் கேட்டதுபோல் அது பூரணமாக வரவில்லை என்பதை அவள் கண்டாள். தன்னிலையுடனேயே முரண்படுவது தற்கொலைத் துணிகரம், சுயமறுப்பென்று படைப்பூக்கத்தின ஆதார இயல்புகளை மிக எளிமையாக நினைவூட்டும் கதை இது.


 படைப்பூக்கமும் அதன் அடிப்படை இயல்பான முரணியல்பும் முற்றிலும் அருகிவரும், படைப்பென்ற பெயரிலான உற்பத்தி அமோகமாகியிருக்கும் தமிழின் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிய ஜென் கதை நமது போதத்தைச் சிறிது துளைக்க வேண்டும்
 
தமிழின் நவீன இலக்கியத்திலும் நவீன எழுத்தியக்கத்திலும் எழுத்து காலம் முதல் நுண்மையான அரசியல் அகற்றம் நிகழ்ந்து வந்தது. அப்போது இயங்கிய எழுத்தாளர்களின் சமூக பொருளாதார, கலாச்சாரப் பின்னணிகள் மற்றும் சார்புகளுடன் தொடர்புடையவை அவை. 70களில் தொடங்கி 80களில் தீவிரப்பட்ட தீவிர இடதுசாரிச் சிந்தனைகளும், அமைப்பியல், பின்நவீனத்துவம் பற்றிய உரையாடல்களும் இதன் பின்புலமாக நடைபெற்ற தலித் அரசியல் எழுச்சியும் இந்த மௌனத்தைக் கலைத்துப்போட்டுப் புதிய அரசியல் பிரக்ஞையைக் கோரின.
ஆனால் இன்று உலகமயமாக்கல் போக்கின் உக்கிரத்தில் அனைத்துக் கருத்தியல்களும், முரணியக்கங்களும், உதிரமும், இருட்டும் சேர்ந்து எழுதிய கொந்தளிப்பான போராட்ட கணங்களும், வெறும் தகவல்களாக தெர்மகோல் உருண்டைகளாக மேலே மிதக்கத் தொடங்கியுள்ளன. இதன் வாயிலாக தட்டையான பொதுப்புத்தி ஒன்று பல்வேறு முகபாவனைகளுடன் வெற்றிகரமாகச் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன் பரவல்தான் இன்றைய நவீன அரசாக மாறியுள்ளது
 
இந்தப் பொதுப்புத்தி, தமிழ்தேசியப் பொதுப்புத்தி, மார்க்சியப் பொதுப்புத்தி, பெரியாரியப் பொதுப்புத்தி, தொண்டூழியசேவைப் பொதுப்புத்தி, தேசியவாதப் பொதுப்புத்தி, சுற்றுச்சூழல் பொதுப்புத்தி, பெண்ணியப் பொதுப்புத்தி வரை பல்வேறு சரக்குகளாக இன்று இதழ்களிலும், இணையதளங்களிலும் அவை இறைந்து கிடக்கின்றன. அதுதான் பல்வேறு இடங்களிலும் நம்மை மறித்து வேறுவேறு கள்ளக் குரல்களில் உரையாடி, சிறைபிடிக்கின்றன
 
வேறு சாத்தியங்கள் மற்றும் அபாயங்களுக்கு உட்பட்ட சக வாழ்க்கை நிலைகள் குறித்த செய்திகளிலிருந்தும் தங்களை முழுமையாகத் துண்டித்துக்கொண்ட இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் பாவனைகளே இந்தப் பொதுப்புத்தியின் உள்வரைபடம். வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த சொல்லாடல்களின் கொடுங்கோன்மைதான் இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதன் நீட்சிதான், உலகிலேயே எளிய நிகழ்ச்சிநிரலாக மாறியுள்ள கலைப்பண்பாட்டுப் பாசாங்குகளை வைத்துக்கொண்டு வாசகர்களாகப் பெருக்கும் தமிழ் நடுநிலை இதழ்களும்உற்பத்தியின் அவசியம் தாண்டிய உபரி உருவாக்கும் குற்றநிலை என்று இதைக் கூறலாம். நீட்சே சொன்னதை மெய்ப்பிக்கும் சூழல் இது. எழுத்தின் உள்ளுயிர் நாறி வருகிறது
 
இப்பின்னணியில்தான் சிறையும் மக்களை அடக்கும் காவல்துறையும் மட்டுமே அரசின் உடைமைகளாக இருப்பதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கும். இந்த நாட்டை எனது இந்தியா என்று புகழ்ந்து கட்டுரை எழுதும் ஜெயமோகனின் தரப்பு எது என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். இன்று அனைத்துத் தளங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சுத்திகரிப்பு மற்றும் இந்தியாவில் உருவாகியிருக்கும் உணர்வு மழுங்கிய மத்தியதர வர்க்கத்தினரின் பிரதிநிதித்துவக்குரல்தான் ஜெயமோகனுடையது. 20 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சென்ற குந்தர்கிராஸ் இந்தியாவில் வளர்ந்துகொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் insensitive ஆக மாறி உள்ளது என்று விமர்சித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குஜராத் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அங்கு வலுப்பெற்று வரும் மதவாதத்துக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அஷீஸ் நந்தியின் கூற்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்
 
ஜெயமோகனின் படைப்பு மற்றும் விமர்சனச் செயல்பாடு இன்றைய நடுத்தர வர்க்கத்தின் ஒற்றை மதிப்பீடான வெற்றி என்ற புள்ளியைச் சென்றடைந்து சேர்வது. மற்றமை என்பதன் மீது பரிசீலனையே இல்லாதது.
ஜெயமோகனைப் பொறுத்தவரை நிர்ணயத்துக்கு உட்படாத எதுவும் இந்த உலகத்தில் இருப்பதற்குத் தகுதி இல்லாதவை. குரங்கென்று ஒன்று இருந்தால் அது தன்னைக் குரங்கென்று சொல்ல வேண்டும். அல்லது குரங்கு இல்லை என்றாவது சொல்ல வேண்டும். இல்லையெனில் குரங்குக்கு சமூகத்தில் செல்வாக்க வரவேண்டும். அதுவரை திருவாளர் ஜெயமோகனின் அபோதக் கண்களுக்குச் சுற்றியலையும் குரங்கு கண்ணுக்கே தெரியாது

 இன்றைய நடுத்தரவர்க்கம் வெற்றி தொடர்பாகவும், அதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் இதே எதிர்நிலைகளில்தான் பயணிக்கிறது. அதன் வழியாகவே அது கொலைகளையும் தன்னுணர்வு அற்று நிகழ்த்திவிடுகிறது
 
ஜெயமோகனின் எழுத்துகளில் உள்ளோடும் வெறுப்பு ஒரு சமூகமோ, குழுவோ தன்னோடு இனம் கண்டுகொள்ளக்கூடிய வெறுப்புக்குத் தீனி போடும் வல்லமை கொண்டது
 
இன்றைய கார்ப்பரேட் சூழலில் நடைமுறையில் உள்ள தன்னையே விளம்பரப்படுத்திச் சந்தைப்படுத்துதல், தொடர்பு வலையை விஸ்தரித்தல், ஆள் பிடித்தல், அதிகாரத்திடம் பணிவாக இருப்பது (அல்லது எதிர்த்து மாற்று அதிகாரத்தில் குளிர்காய்வது) போன்ற சுயமேம்பாட்டு முறைமைகள் அத்தனையையும் தமிழில் அறிமுகப்படுத்திய முன்னோடி ஜெயமோகன்தான். அந்த வகையில் இணையம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தகவல் தொடர்பில் பெரிய வலைத்தளத்தை உருவாக்கிய பெருமை ஜெயமோகனையே சேரும்.
இந்நிலையில் ஜெயமோகன் போன்றோர் ஆன்மிகம் குறித்தும் ஆன்மிகத்தின் தொடக்கப் படிநிலையான நகைச்சுவையையும் பற்றித் தொடர்ந்து கதைப்பதுதான் நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆன்மிக வறுமை...
'ஏழாம் உலகம்' நாவலில் அவர் தமிழகத்தின் மையப்பகுதியான பழனிக்குக் கொண்டு வந்து போடும் உடல் குறையுள்ள கதாபாத்திரங்கள் யார் என்பதை நாம் கவனமாக வாசிக்க வேண்டும். அவர்கள் அத்தனை பேரும், அவர் கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டிய குறைக்கருத்தியல்கள்தான் என்பது தெரியவரலாம். படைப்பூக்கம் விடைபெற்றுக்கொண்டு வாழ்வும் வாசிப்பும் இயக்கமும் கருத்தியலும் காதலும் உயிர்ப்பிழந்து வெறும் பழக்கங்களாக சரியும் நிலையில் வீழும் ஒரு சமூகத்தில்தான் புரோகிதம் தலையெடுக்கிறது. அந்த இடம்தான் ஜெயமோகன்.
இச்சூழ்நிலையில், புறக்கணிப்பிலும் தனித்திருத்தலிலும் தம் படைப்புயிரை உக்கிரத்துடன் தக்க வைத்திருந்த பிரமீள் மற்றும் நகுலனின் நிலைகளை நாம் பரிசீலிக்க வேண்டும்
 
இன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு எழுத்து என்பது ஒரு மூலதனம்தான். படிப்படியாகச் செல்வாக்கு பெறும்வரை அவன் தனியன். செல்லும் வழி இருட்டு என்ற புதுமைப்பித்தனின் கவிதை அவனுக்கு முற்றிலும் பொருந்தும். ஆனால் அதற்குப் பிறகு செல்வாக்கு வளர, வளர ஆட்சிஅதிகாரம், சட்டஒழுங்குக்குப் பக்கத்தில் உள்ள இருக்கைகளைப் பகிர்ந்துகொள்வதில் அவனுக்கு ஒரு கூச்சமும் இல்லை.
உலகெங்கும் எழுத்தாளர்கள் விளிம்புநிலையினரோடும் அதன் நிலைமைகளோடும் தம்மை அடையாளம் கண்டு ஒரு அபாயகரமான முனையில் தங்களை வைத்திருக்கிறார்கள். அந்த அனுபவத்தின் மூலவளங்கள் வழியாக வரலாற்றுமௌனத்தைப் பிரதிபலிப்பவர்களாக அவர்கள் போராடிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் சிறுபான்மையினராக இருப்பினும், இத்தரப்பின் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருந்தும் தொடர்ந்து விடுவித்துக்கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கும் ஆளுமைகளாக வேறு, வேறு நிலைகளில் தமிழில் ஷோபாசக்தி, .மார்க்ஸ், சி.மோகன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்றோரின் தொடர்ந்த இயக்கம் சிறிது நம்பிக்கையைத் தருவதாக உள்ளது

 
இன்றைய சவநிலைமையிலிருந்து தப்ப நாம் ஜெயமோகனிடமிருந்து தப்பிக்க வேண்டும். ஜெயமோகனிடம் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ஒரு நபர் அல்ல. அதுதான் இன்று அமெரிக்கா, அதுதான் இன்றைய இந்தியா, அதுதான் இன்று நரேந்திர மோடி, அதுதான் புத்ததேவ் பட்டாச்சார்யா, அதுதான் கருணாநிதி, அதுதான் ஜெயலலிதா... அதுவே நாமாக மாறும் இன்றைய அபாயமும்கூட

 

Friday, 29 June 2012

என்று கருதும்


ஷங்கர்ராமசுப்ரமணியன்
எனது கவிதை ஒரு குட்டிநாயாக வடிவெடுக்கிறது
கருதிக்கொள்ளலாம்
எனது கவிதை ஒரு முட்டையாக இடப்படுகிறது
வைத்துக்கொள்ளலாம்
எனது கவிதை ஒரு குழந்தையாகப் பிறக்கிறது
எண்ணிக்கொள்ளலாம்
எனது கவிதை ஒரு நட்சத்திர மீன்
ஆக்கிக்கொள்ளலாம்

ஆனால்
அந்தக் குட்டிநாயைச் சுற்றி
அந்த முட்டையைச் சுற்றி
அந்தக் குழந்தையைச் சுற்றி
அந்த நட்சத்திர மீனைச் சுற்றி
வடிவம் கொண்டது தவிர
மீந்த பிறிதொன்று 
எதுவும் இல்லை
என்று கருதும்
என் கவிதையின் நியாயம்
மட்டும் புரியாத துக்கம் எனக்கு.

Tuesday, 19 June 2012

வணக்கம் தமிழகம்காலை எழுந்தவுடன்
யூட்யூப்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குறையொன்றுமில்லை
அருணாவின் கதிரவன் குணதிசையும் கேட்கலாம்..
மதுரை சோமுவைக் கேட்டபிறகு
அருணா கசக்கத் தொடங்கிவிட்டாள்
பிறகு ஜெயமோகன்.இன்
சாருஆன்லைன்
வழியாக முகநூல்
டாடாவுக்கு படம் எடுத்த லீனா
என்ன சொல்லப்போகிறாள்?
அடுத்து இளையராஜாவின் குரலில் ஜனனி..ஜனனி
எஸ்.ராமகிருஷ்ணன்.காமில்
இன்றைக்குப் புதிய பதிவு இல்லை
கனடா பயணம்
இயல் விருதுவாங்க...
என்னதான் செய்வது...
அலுவலகம்
விநாயகர் காரிய சித்திமாலை
வேர்ட் பைலில் படித்துமுடித்து
அழியாச்சுடரில் புகுந்தால்
போதும் கு.அழகிரிசாமியின் ஒரு சிறுகதை
படித்துவிட்டால் கங்கையில் குளித்த ஒரு பேரமைதி
ராம்பிரசாத் இன்னொரு சி.சு.செல்லப்பா ஆகிவிடுவானா
குனா அழகிரிசாமியின் குழந்தைகள் பாக்கியம் செய்தவர்கள்
என்று முகநூலில் ஒரு நிலைச்செய்தி போட்டுவிட்டேன்
யார் சுவரில் போய் டேக் செய்வது..
எத்தனை லைக் இன்று வரும்..
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
இந்த ஜெயமோகன் அடிக்சன் தான்..
பெரி......ய்...ய ரைட்டர் இல்லையா..
என்ன அநியாயம்?
என்ன தேசியவெறி?
கா.சு கண்ணன் சிலநேரம் சரியாகத்தான் பேசுகிறான்
ஷோபா சக்தி நறுக்கென்று பதில்சொல்வான்.
வினவில் லீனாவுக்கு வசையாம்?
உலகின் அழகிய முதல் பெண்ணில்
உடனே தளராமல் பதிலடி...
அருள்எழிலன் என்றாலே ஆவேசம்தானா?
கார்டூனிஸ்ட் பாலா
தொடர்ந்து களமாடுகிறார்
சரி...ரைட்...ப்ரியாதம்பி
உபயாத்ரீகன் என்றால் என்னப்பா ஆத்மார்த்தி
அடுத்த புத்தக விழாவில் ஆயிரம் கவிதைகளாம்
மனுஷ்யபுத்திரன்
hats off என்று கமெண்ட்ஸ் போட்டாச்சு
இன்று பேயோனை சந்தித்தேன்-எம்டிஎம்
சுரேஷ்டியை எப்படி ட்விட்டரில் தேடுவதாம்
இருள் கவ்வுகிறது
வீட்டில் லைட் போடவில்லை
இன்றைக்கு தமிழ் டர்ட்டி ஸ்டோரிஸ் அப்டேட் என்ன?
ஒக்கால ஓலி
பே சைட் ஆக்கிவிட்டானா
எல்லாருமே
காரியவாதி ஆகிவிட்டால்
தமிழன்தான் என்ன செய்வான் பாவம்..
ரொம்ப நாளைக்குப் பிறகு மாலதி டீச்சர்
ஏ கிளாஸ் கதை...இலக்கியரகம்... சொட்டுகிறது
இந்தியன் போர்ன் வீடியோஸ் மட்டும்தான் இப்போதைக்கு
நிவர்த்தி
ட்யூப்கலோரிலும் தேசி என்ற பெயரில்
அந்நியர்கள் நுழைந்துவிடுகிறார்கள்
தாய்மொழியில் பரவசக் கூச்சல் அழகுதான்
இன்று நான் தன்யன் ஆனேன்..
தளர்ந்துவிட்டால் மீண்டும்
ஜெயமோகன் தளத்துக்குப் போ...
பரிகாரத்துக்கு இன்னொரு பாரதப் பயணமா..
தினமலரில் கருணாநிதியை
இனத்துரோகி என்று திட்டி ஒரு பின்னூட்டம்
போடு
கடையை மூடு
இப்பவே கண்ணைக் கட்டுதே!

Tuesday, 12 June 2012

சி.மோகன் - 60தமிழ்நூல் உலகில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஆஃப்செட் புரட்சியுடன் ஒப்பிடும்போது சி.மோகன் எழுதியுள்ள நூல்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானது. நவீனத்துவம் களைப்பையும், அதிகாரப் பகிர்வையும் பெற்று அரசின் ஒரு பகுதியாகி வரும் காலகட்டத்தில் எதிர்நவீனத்துவவாதியாய்த் தன்னை அடையாளம் கண்டவர். அந்த அடையாளங்கள் தாங்கிய தனித்துவமான 33 கவிதைகள் கொண்ட தொகுதியாக தண்ணீர் சிற்பம் வெளியானது. இத்தொகுப்பு, மோகனின் பிரக்ஞை மேற்கொண்டிருந்த பயணத்தொலைவைக் காட்டுகிறது.

மோகனின் சிறுகதைகள், விமர்சனங்கள், மொழி பெயர்ப்புகளைத் தொடர்ச்சியாகப் பின்தொடரும் வாசகன் என்ற முறையில் பொதுவில் விலக்கப்பட்ட இரவுப் பிராந்தியத்தின் சாத்தியங்கள் குறித்துப் பேசுவதாய் அவரது உலகம் உள்ளது. சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்' படத்தில் ஒரு பணக்காரச் சீமான் இரவில் குடிபோதையில் இருக்கும்போது தெருவில் அலைந்து கொண்டிருக்கும் சாப்ளினைப் பார்த்துத் தனது மாளிகைக்கு அழைத்துச் செல்வார். காலையானவுடன் தன்போதம் வந்து சாப்ளினைப் பணியாளர்களை வைத்துத் துரத்திவிடுவார்.

விலங்குகளின் உலகமும் உதிரி ஒருவனின் இடமும், கலை சார்ந்தவனின் இடமும் இரவுதான் என்ற உண்மையை உணர்த்தும் காட்சி அது. இரவு என்பது நமது ரகசிய விழிப்புநிலைகளுடன் பேசும் வல்லமை பெற்றதாய் இருக்கிறது. மயானக்கொல்லைக்குச் செல்லும் தேவதைகள் இரவிலேயே தெருக்களில் உலாவுகின்றனர். விலங்குகள் நிலவினிலிருந்து பெற்ற காமத்தில் அமானுஷ்யத் தருணங்களில் குலவுகின்றன. வௌவால்கள், பூனைகள், பாம்புகள், எலிகள், புழுப்பூச்சிகள், சிங்கங்கள், கவிதைகள், கனவுகள் போன்ற விலங்குகள் அந்த இரவு உலகினை வெற்றிகொள்கின்றன.
மோகனின் படைப்புவெளியை உடலின் இரவுப் பிராந்தியத்தைப் பேச்சின் ஒளியால், பேச்சற்றதன் இருட்டால் துலக்க முயல்கின்றன எனத் தற்காலிகமாய் இட்டுப்பார்க்கலாம் ஒரு தூண்டிலை. அல்லது நங்கூரத்தை. ஆடும் தூண்டிலைத் தொடரும் சிந்தனை அழுத்தி நிலைக்க வைக்கவேண்டும். நங்கூரமாக்கிவிட்டால் கவிதை சுமையாகிவிடும். சிந்தனையை ஏற்று நங்கூரத்தையும் தூண்டில்போல் ஆடச்செய்யும் அழகு மோகனின் கவிதைகளில் சாத்தியமாகியுள்ளது.

உடலின் இரவு எனச் சொல்லும்போது, பார்க்கப்படாதது என்பதே இங்கு உரைக்கப்படுகிறது. 'அசையும்போது படகு அசையாதபோது தீவு' என்னும் தேவதேவனின் கவிதை வழியாக inertia-நிலை மீது மோகனின் விழிப்புநிலை உள்ளது. தி.ஜானகிராமன் பற்றிய மோகனின் வாசிப்பில், பெண் கதாபாத்திரங்கள் தேர்வு செய்யும் மடத்தனத்தின் மீது மோகன் வைக்கும் கண்டுபிடிப்பு முக்கியமானது.
இந்த நிலைமையே உடலின் இரவு என ஒரு தருணத்தில் இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையின் நீட்சியே 'ஒப்புக்கொடுப்பது' என்ற தேர்வு.
மோகன் தன் முன்னுரையில் தனது கவிதைகள் காலத்தின் தனிமையிலும், காலமற்ற தனிமையிலும் எழுதப்பட்டிருப்பதாய் ஓர் அறிதலை வெளிப்படுத்தியுள்ளார். இது படிக்கும்போது முதலில் சிறுபத்திரிகைகளில் பயன்படுத்தப்படும் அலங்கார சொல்லாட்சி எனத் தோன்றக்கூடும். ஆனால் மோகனின் கவிதைப் பின்னணியில் இந்தக் கண்டுபிடிப்பு பிரக்ஞை முக்கியத்துவம் உடையது. காலத்துக்குத் தன் பழக்கத்தில் எதிர்வினையாற்றிக் கொண்டும், காலமற்ற ஒரு ஸ்தலத்தில் மறுகிக் கொண்டிருப்பதுமான இரண்டு குதிரைகளில் பயணிப்பதுதான் மனம்.
சி.மோகனின் பாதையில் அவர் வசப்படுத்தியிருக்கும், தேர்வு செய்திருக்கும், வெளிச்சப்படுத்தியிருக்கும் இடம் என்று கூட இதைச் சொல்ல முடியும்
ப.சிங்காரம், சம்பத் போன்ற எழுத்தாளர்கள் குறித்து படைப்பூக்கம் கொண்ட அறிமுகங்களையும், விமர்சனங்களையும் எழுதியதன் மூலம் அவர்களை தமிழ் சூழலுக்கு மீண்டும் நினைவூட்டியதில் இவரது பங்கு முக்கியமானது. நடைவெளிக் குறிப்புகள் மற்றும் காலம்,கலை,கலைஞன் போன்ற நூல்கள், எழுத்து மற்றும் கலைச்சூழலுக்குள் நுழைபவனுக்கு சரியான திசைகாட்டிகள். தற்போது வுல்ப் டோட்டம் என்றொரு நாவலை மொழிபெயர்ப்பு செய்துவருகிறார்.
எங்களது ஆசானும், இனிய நண்பரும், தீராக்காதலனுமான சி.மோகனுக்கு இன்று 60 ஆவது பிறந்த நாள்.. 

Monday, 11 June 2012

குழந்தை காணாமல் போகும் கனவு


ஷங்கர்ராமசுப்ரமணியன்

வழுக்கும் ஈரமண் பாதை அதுகிடுகிடு பள்ளங்களூடாக தடுமாறியபடி நான் நடக்கிறேன். நான் அந்தக் குழந்தையை என் கையிடுக்கில் பிடித்திருக்கிறேன். அவள் ஒரு பொம்மையின் அளவு இருக்கிறாள். அவள் உடலுக்குள் இருதயம் மட்டுமே இருப்பது போலத் துடிக்கிறது. அந்தத் துடிப்பு மட்டுமே அதை உயிரென்று உணரச்செய்கிறது. அந்தக் குழந்தையை அபாயகரமான இந்த இடத்துக்கு ஏன் கொண்டுவந்தேன் என்று ஒரு குறிப்பும் இல்லை. எனது பராமரிப்பில் விடப்பட்ட குழந்தை அது. அதன் பெற்றோர்களுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். திரும்ப அந்தக் குழந்தையை நான் பத்திரமாக அதன் வீட்டில் சேர்க்கவேண்டும். நான் சேற்றில் வழுக்கி வழுக்கி நடக்கிறேன். என் கையிலிருந்து நழுவி பாதாளத்தில் அடிக்கடி துடித்து விழுந்துவிடுகிறது குழந்தை. நான் பதறி இறங்கி எடுக்கிறேன். குழந்தை மண்ணில் விழுந்தவுடன் 'அவ்வளவுதான்' என்று முனகிப் புரண்டுவிடுகிறது.

குழந்தையின் மெல்லிய சருமத்தில் சிறுசிறு ரத்தக்காயங்கள் கூடிக்கொண்டே போகின்றன. குழந்தை என்னிலிருந்து துள்ளி மீண்டும் மீண்டும் விழுகிறது. வீட்டுக்குத் திரும்ப இயலாத குற்றவுணர்வு அதிகரித்தபடி உள்ளது. போகப்போக குழந்தை மேலும் மேலும் ஆழமான பள்ளங்களில் விழுந்து அவ்வளவுதான் என்கிறது.

குழந்தை அழவில்லை. ஆனால் ரத்தம் அதன் மேனியெங்கும் கசியத்தொடங்குகிறது. நான் எப்படி அவளது பெற்றோருக்குப் பதில்சொல்லப் போகிறேன். என் கையில் இருந்து நழுவிவிழுவதற்கான அக்குழந்தையின் விருப்பம், ஒரு வன்மம் போல் செயல்படுகிறது. இக்குழந்தையை விட்டுப்போகவும் வழியில்லை. மறுபடியும் பள்ளத்தில் விழுந்துவிட்ட குழந்தையை ஈர நசநசப்புடன் எடுக்கிறேன்.

வானம் இருண்டு வந்தது. நான் தப்பிக்கும் பாதை முழுக்கவும் அடைபடப் போகிறது. அப்போது எனது கைவிரல்களைப் பார்த்தேன். நகம் முழுக்கவும் அழுக்கேறியிருந்தது.


அழகு சுந்தரம் திரிபுரசுந்தரி

ஷங்கர்ராமசுப்ரமணியன்


நரியும், கொக்கும் பரஸ்பரம் விருந்துவைத்த கதை தெரிந்திருக்கும் உங்களுக்கு. அது ஒரு நீதிக்கதை. ஆனால் அந்தக்கதை குறிப்பிடும் நீதியை மட்டும் கொஞ்சம் விலக்கி வைத்துவிடலாம் இப்போது.

நரியின் பெயர் அழகு சுந்தரம். கொக்கின் பெயர் திரிபுரசுந்தரி. அழகு சுந்தரம் எட்டாத திராட்சைக் கொடிகள் இருக்கும் தோட்டத்துக்கு வயல் வரப்பொன்றின் வழியாக, நாக்கை நீட்டியபடி போய்க்கொண்டிருந்தது. சட்டென்று ஒரு கணத்தில் வெண்கொக்கு ஒன்று வயலுக்கு நடுவில் எழுந்து பறக்க, பச்சைக்கும், வெள்ளைக்கும் ஏற்பட்ட தீவிரமுரணில் வரப்பில் மயங்கி விழுந்தது அழகுசுந்தரம். பிறகு தெளிந்த நரி நண்பர்களிடம் பேசி, தான் பார்த்த கொக்கின் பெயர் திரிபுரசுந்தரி என்று அறிந்துகொண்டது.

அதிலிருந்து தந்திரநரி என்று அழைக்கப்பட்ட அழகுசுந்தரம், அன்றாடம் விரக தாபத்துடன் வயல்வெளிகளில் ஒற்றைக்காலில் தவம் இருக்கத் தொடங்கியது. திரிபுரசுந்தரியும், தன்னை காதலிக்கும் நரியின் பெயர் அழகுசுந்தரம் என்று கேள்விப்பட்டவுடன் உடனே காதலில் விழுந்தது. சுந்தரம்- சுந்தரி என்று தரையில் தனது கூரலகால் எழுதிப் பார்த்தது திரிபுரசுந்தரி.

ஒரு நாள் திரிபுரசுந்தரி, தனது வீட்டுக்கு அழகுசுந்தரத்தை விருந்துக்கு அழைத்தது. அருமையான அரிசியில் இனிப்பான பாயசம் செய்திருந்தது. அழகு சுந்தரமும் ஆசையோடு வந்தது. கொக்கு, தான் குடிக்கும் குறுகிய வாயுள்ள குடுவையில் பாயசத்தை ஊற்றி நரிக்குக் கொடுத்தது. நரியோ ஏமாந்துபோனது. ஆனால் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தாத நரி, குடுவையின் திறப்பில் தனது நுழையாத வாயை வைத்து, அருமை அருமை பாயாசம் அருமை என்று பாராட்டியது. திரிபுரசுந்தரியின் அறியாமையை மன்னித்த அழகுசுந்தரம், தன் வீட்டுக்கு ஒருநாள் சுந்தரியை விருந்துக்கு அழைத்தது.

திருடிச் சேகரித்த பழங்களிலிருந்து அரிதானவற்ற ருசித்துப் பொறுக்கி தன்கையால் திராட்சை மது ஒன்றை நரி தயாரித்தது. திரிபுரசுந்தரியும் விருந்துக்கு வாய் ஊற வந்தது. நரியோ தான் சாப்பிடும் தட்டில் மதுவை ஊற்றி தனது காதலியின் முன்வைத்தது. திரிபுரசுந்தரியும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தவில்லை. அருமையான மது...அருமையான மது என்று கூறி அலகை நாட்டி பருகுவது போல பாவனை செய்தது.

அழகு சுந்தரத்துக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருமணம் நிச்சயமானது. தேனிலவும் முடிந்தது. அழகு சுந்தரத்துக்கும், திரிபுரசுந்தரிக்கும் குழந்தைகள் பிறந்தன. அழகு சுந்தரத்துக்கும், திரிபுரசுந்தரிக்கும் எல்லா தம்பதிகளையும் போலவே திருமணம் புளிக்கத் தொடங்கியது. கூச்சலும் குழப்பங்களும் ஏற்பட்டன. அழகு சுந்தரமும், திரிபுரசுந்தரியும் தங்கள் 25 ஆவது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடினர். இருவரும் மேட் ஃபார் ஈச் அதர் என்று அன்றிரவு சொல்லிக் கொண்டனர்.