Skip to main content

மறதிக்குள் தொலைந்தவள்


ஷங்கர்ராமசுப்ரமணியன்

சமீபத்தில் மீன்களைப் பற்றிப் படித்த ஒரு விநோதச் செய்தி என்னை ஆச்சரியப்படுத்தது. வீடுகளில் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் தங்க மீன்கள் பற்றியது அச்செய்தி. தங்க மீன்கள் அதிகபட்ச ஞாபகமறதி கொண்டவை. சுற்றி வரும்போது புதிதாக சந்தித்துக்கொள்ளும் இரண்டு தங்க மீன்கள், அடுத்தமுறை சந்திக்கும் போது பரஸ்பரம் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாம். இதைப் படிக்கும்போது அச்செய்தியின் துல்லியம் என்னை மிகவும் நம்பவைத்தது.
தங்க மீனின் மறதியுடன் ஒப்பிடும்போது நாம் பயணிக்கும் சுற்று மிகப்பெரியது. நாம் அலைவது பெரிய வட்டமுடைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியாய் இருக்கலாம்.
ஒரு நாளில் எத்தனை விஷயங்களை மறதிக்குள் விடுகிறோம். ஞாபகத்தோடு மறதியும் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் யுகத்தில் நாம் நிறைய மறப்பது செய்திகளையும்தான். க்ரைம் செய்தியாளனாக நான் வேலை செய்வதற்கு முன்புவரை குற்றமும், மரணங்களும் வேறொரு உலகத்தில் நடக்கின்றன என்ற எண்ணமே எனக்கு இருந்தது.
நான் க்ரைம் ரிப்போர்டராகவும் இருந்தேன் என்று சொல்லிக்கொள்ளும்படியான குறுகிய காலப்பணியில் சேகரித்த, எல்லாரும் மறந்துபோன, என்னால் மறக்க இயலாத செய்தி இது.
அந்த ஆசையில் போனார் கிழவர் முற்றுப்புள்ளி கிடையாது) குடிபோதையில் கொலையானார்... இந்தஏக தலைப்பில் ஒரு செய்தி படித்த ஞாபகமிருக்கிறதா. உங்களுக்கு ஞாபகம் வைத்துக்கொள்ள ஒரு நியாயமும் இல்லை. ஆனால் இந்த செய்தி இரண்டு நாட்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தலைப்புக்கு பின் உள்ள செய்தியை சேகரித்த க்ரைம் செய்தியாளர்களில் நானும் ஒருவன்.
நகரத்தில் நடக்கும் குற்றங்கள், விபத்துகள், மரணங்கள் குறித்த செய்திக்குறிப்புகள் கமிஷனர் அலுவலகத்தில் தினம் வழங்கப்படும். இந்த செய்திக் குறிப்புகளை சேகரித்து அலுவலகத்திற்கு சென்று கோர்வையாக எழுதிக் கொடுப்பது தான், ஒரு செய்தித்தாள் க்ரைம் ரிப்போர்ட்டரின் வேலை என்று முதலில் நினைத்திருந்தேன்.
கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் செய்திகள் மிகச்சிறிய பெட்டிச் செய்திகளாகவே இருந்தன. உப்புமா சுவையில்லாமல் இருந்ததால் கணவர் திட்டி மனைவி தற்கொலை... நான் அலுவலகத்திற்கு சென்று கொடுக்கும் இப்படியான செய்திகள் உடனடியாக உதவி ஆசிரியரின் குப்பைத்தொட்டிக்குள் போய்விடும். கமிஷனர் அலுவலகத்தில் புலப்படாத மூலைகளில் செய்திகள் இருக்கின்றன என்ற உண்மை தெரியவருமுன்னே என் இடம் அலுவலகத்தில் நடுங்கத் தொடங்கியிருந்தது.
அப்படியாக தொடர்ந்த நாள் ஒன்றில்தான் குறிப்பிட்ட செய்திக்குறிப்பு எல்லாருக்கும் சூடாக பரிமாறப்பட்டது. பத்துண பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து வந்து காதலனால் ஏமாற்றப்பட்டு, பாலியல் தொழிலாளியாய் மாறிய பெண் ஒருவர் போதையில் செய்த கொலை பற்றியது அச்செய்தி.
இலங்கைப் பெண் செய்யும் தொழில் பற்றி அவரின் வீட்டு உரிமையாளருக்கோ சுற்றியுள்ளவர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. இலங்கைப் பெண் தினசரி சாயங்காலம் தன் வாடகை வீட்டிலிருந்து புறப்பட்டு பாரிமுனைக்குச் செல்வார். சென்னை வந்து வேலையை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்பும் பயணிகள் தான் இவரது வாடிக்கையாளர்கள். சம்பவம் நடந்த அன்று ஐம்பத்தைந்து வயதுடைய முதியவர் வந்து அழைத்திருக்கிறார். பேரம் ஐநூறு ரூபாயில் முடிக்கப்பட்டது. இலங்கைப் பெண் வழக்கமாக செல்லும் விடுதி உட்பட எங்கேயும் இடம் இல்லை. வேறுவழியில்லை . வடபழனியில் அப்பெண் வாடகையில் குடியிருக்கும் வீட்டுக்கே போய்விடலாம் என்று முடிவு செய்தார்கள். ஆட்டோவில் போகும்போதே, வீட்டில் மது அருந்த தீர்மானித்து இருவருக்கும் பியர் வாங்கி வைத்துக்கொண்டார் முதியவர்.
வடபழனி வீட்டில் நள்ளிரவில் சாப்பிட்ட பீர், போதையையும் நெகிழ்ச்சியையும் இருவருக்கும் ஏற்படுத்தியிருந்தது. சந்தோஷத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல கிழவர் சட்டையைக் கழற்றுகிறார். கிழவரது உடம்பெங்கும் சர்க்கரை புண்கள். இலங்கைப் பெண் அசூயை கொள்கிறாள். இடுப்புக்குக் கீழே செருகப்பட்டுள்ள ரப்பர் குழாயையும் பார்த்ததும் முதியவருடன் ஒத்துழைக்க மறுக்கிறாள். பணத்தையும் போதையையும் வீணாக்க விரும்பாத முதியவர் வற்புறுத்தத் தொடங்குகிறார். ஒரு நிலையில் இலங்கைப் பெண் முதியவரைத் தள்ளி விடுகிறாள். கிழவரின் தலை சுவரில் மோதுகிறது. கிழவர் தரையில் அப்படியே கிடக்கிறார். விபரீதம் புரியாத இலங்கைப் பெண் தூக்கமும், போதையும் ஏற்படுத்திய களைப்பில் உறங்கி விடுகிறார். காலையில் எழுந்து இலங்கைப் பெண் பார்க்கும்போது கிழவர் எழுந்திருக்கவேயில்லை. இரவில் தான் செய்தது ஒரு கொலை என்று அப்போதுதான் அவளுக்கு புரியவருகிறது.

இலங்கைப் பெண் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த பிறகு கிடைத்த இந்த செய்தி என்னுடைய பணியில் எனக்கு கிடைத்த சூடான செய்தி. இதையாவது சுவாரஸ்யமாக எழுதித்தாருங்கள் என்று எனது உதவி ஆசிரியர் ஆணையிட்டார். எனது மனம் அந்தக் கொலை நடந்த இலங்கைப் பெண்ணின் வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. செய்தியைக் கதையாக சுவையான நிகழ்ச்சிகளின் அடுக்காக மாற்ற முடியாமலேயே உதவி ஆசிரியரின் கணிப்பொறிக்கு அடித்து அனுப்பினேன்.

உதவி ஆசிரியர் என்னைக் கூப்பிட்டுத் தலையில் அடித்துக்கொண்டு, எப்படி இந்த மேட்டரை உப்புச் சப்பில்லாமல் தந்திருக்கீங்க. நீங்க கொடுத்த செய்தியையே எப்படி மாற்றுகிறேன் பாருங்கள் என்று சொல்லி என் கோப்பைத் திறந்தார். என்னுடைய செய்தியை அங்கங்கே தட்டி, அங்கங்கே வளைத்து, உப்பு, மிளகாய் போட்டு நச்சென்று ஒரு தலைப்பையும் வைத்தார். 'அந்த ஆசையில் போனார் கிழவர் (முற்றுப்புள்ளி கிடையாது) குடிபோதையில் கொலையானார்' என்ற தலைப்பில் 5 பத்திகளில் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால் எனக்கு இந்த செய்தி அந்தரங்கமான சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரே ஒரு நாளிதழில் மட்டும் அந்தப் பெண்ணின் நேரடி வாக்குமூலம் வெளியாகியிருந்தது. ஸ்டேஷனில் இருக்கும்போது கொடுத்த அந்த வாக்குமூலத்தின் தன்மை இதுதான். "எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது. இளம்வயசில ஒருத்தன நம்பி இலங்கையிலிருந்து இங்க வந்தேன். அவனும் ஏமாத்திட்டு போயிட்டான். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு இந்த தொழிலுக்கு வந்தேன். இங்க நான் படாத சிரமம் கொஞ்சநஞ்சமா. மூணு பேருன்னு சொல்லிட்டு எட்டுபேர் செய்வாங்க. சிலபேரு ப்ளேடால உடம்ப கீறிடுவாங்க. உடம்பு முழுக்க தழும்புதான். இவனும் நேத்து நைட்டு வழக்கம்போல தான் வந்தான். நான் பிடிச்சு தள்ளினதுல மண்டைய போட்டுட்டான். இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல கொலை செஞ்சவளா நிக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நடக்கணும்."

இந்த செய்திக்கும், வாக்குமூலத்திற்கும் பின் உள்ள கேள்விகள், டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலும், மாஸலோவாவும் எழுப்பும் கேள்விகளுக்கு நிகரானதுதானே. நாம் வசிக்கும் அறைகளில் மூர்க்கம் எப்போதும் ஒரு அசம்பாவிதத்தை நிகழ்த்த காத்திருக்கிறது. நாம் கடக்கும் வீடுகளில் குற்றத்துக்கு முந்திய கணமோ, பிந்தைய கணமோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது நம்மீது கவியும் வரை நமக்கு அது ஒரு செய்தி மட்டும் தான். நான் செய்தியாய் எழுதிய அந்த பெண்ணின் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லை. அவளை கடக்க இயலாத இடர்பாதையில் விட்டுச் சென்றவன் அவள் காதலன் மட்டும்தானா.

Comments