Skip to main content

மகா சமாதி - லக்ஷ்மி மணிவண்ணன்


                              

""""யாராவது கண்களை ஒரு வினாடி கூட விலக்குவதையோ மறதியாக இருந்துவிட்டதையோ அந்த ராட்சதப் பல்லி பார்த்துவிட்டால் ஆபத்தானதாகி விடுகிறது. அதன் குடல்கள் ஜொலிக்க ஆரம்பிக்கின்றன. அதனுடைய அடக்க முடியாத சக்தியுடன் அமுக்கி வைக்கப்பட்டிருக்கிற கோபத்துடனும், தன்னுடைய பல மீட்டர் கனமுள்ள தோலை வெடிக்கச் செய்துவிடும். எப்படி நடந்ததென்று புரிந்து கொள்ள முடியாத தவறு காரணமாக ஒரு சிறு வழி திறந்திருப்பது தெரிந்துவிட்டால் போதும்""


                                    அணுக்கதிர் வீச்சின் பாதிப்புகள் குறித்த ‘அபாயம்’ நாவலின் முதல் அத்தியாயத்தில் வரும் சில வரிகள் இவை. ஃபிளமிஷ் மொழி நாவலான ஜோஷ் வண்டேலூவின் அபாயம் நாவல் ஆங்கிலம் வழி தமிழில் என். சிவராமனால் மொழிபெயர்க்கப்பட்டு 1986-ல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. அளவில் மிகச்சிறிய அதே சமயத்தில் தீர்க்கமான நுட்பத்துடன் அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகள் குறித்து பேசும் நாவல் இது. அணுக்கதிர் வீச்சு, அணுக்கொள்கை ஆகியவை எப்படி அரசாங்கத்துடனும் அமைப்புடன் கலந்து பௌதீகத் தன்மையை அடைகிறது என்பதை நுண்தளத்தில் ஆராயக் கூடிய நாவல். ஒரு விதத்தில் இதனை ஒரு பின் நவீனத்துவ நாவல் எனவும் கூறமுடியும். பின் நவீனத்துவம் என்பது ஏதோ முறுக்கி திருக்கி வடிவுறும் வஸ்து என கருதும் மனப்பழக்கத்திற்கு எதிரான நாவலும் கூட. அணுக்கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து அமைப்பின் கொடூரமுகத்தை வெளிப்படுத்தும் பல தளங்களைக் கொண்ட நாவல்.

அன்பு, இரக்கம், சமூகத்தில் எல்லோரது பாதுகாப்புப் பற்றிய அக்கறை, நேர்மை ஆகியவற்றை விட விஞ்ஞான முன்னேற்றமும், பொருளாதார மேம்பாடும் முக்கியமானவை என்று கருதும் ஒரு சமூகத்தில் அபாயம் என்பது தனித்த நிகழ்வல்ல. இதுபோன்ற சமூக அமைப்பை உருவாக்கும் கோட்பாடுகளிலிருந்து பிறப்பதுதான் இந்த அபாயம் என்று இந்த நாவல் பற்றிய மொழிபெயர்ப்பாளரின் குறிப்பில் என். சிவராமன் குறிப்பிடுகிறார். இக்குறிப்பிலேயே கதிர்வீச்சில் பாதிப்புக்குள்ளாகி மருத்துவனை செல்வதை பற்றி குறிப்பிடும்போது மருத்துவமனையை ‘வெண்சிறை’ என்று குறிப்பிடுகிறார் அவர். வெண்சிறை எனும் பதம் நூதனமான ஒரு கண்டுபிடிப்பு. புதிய பொருளர்த்ததையும் அது ஏற்படுத்துகிறது. அணுக்கதிர் வீச்சால் பாதிப்புக்குள்ளாபவர்கள் உடனடியாக தனித்த வெண்சிறையில் வைக்கப்படவேண்டியவர்களாகவும், எய்ட்ஸ் நோயாளிகளைக் காட்டிலும் அதிகமாக உறவினருக்கும் பிறருக்கும் அபாயம் விளைவிப்பவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அவர்களிடம் தோன்றும் நோய் அறிகுறிகள் வினோதமாகவும் வியப்புக்குரியதாகவும் ஆய்வுக்குரியதாகவும் மாறிவிடுகிறது. அதுவரையில் அணுக்கொள்கையை அரசாங்கத்தைப் போலவே பின்பற்றியவர்களாகவும் அணுவுலைகளில் பணியாற்றுபவர்களாகவும்கூட அவர்கள் இருக்கலாம்.

""""இந்த நாவலில் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் முக்கியமல்ல எந்தப் பாத்திரமும் தீர்க்கமான தனித்தன்மையுடன் உருவாக்கப்படவில்லை என்பது இந்த நாவலில் ஒரு முக்கிய அம்சம். இது  வேண்டுமென்றே செய்யப்பட்ட ஏற்பாடாக இருக்கவேண்டும். பாத்திரங்கள் எல்லாமே பலிகடாக்கள் கருவிகள் முடிவு முதலிலேயே தெரிந்துவிட்ட இந்த அபாயமான போட்டியில் சூதாடிகள் நாவலுக்கு வெளியே இருக்கிறார்கள்! இதுவும் அபாயம் நாவல் குறித்த மொழிப்பெயர்ப்பாளர் என். சிவராமனின் கருத்து.

அணுவுலை விபத்து என்பது வெடித்துச் சிதறுவது என்கிற எண்ணமே பெரும்பாலும் பொதுப்புத்தியில் செயல்படுகிறது. பொதுபுத்தியை செவ்வனே பராமரிப்பதும் அரசாங்கத்தின் வேலை. செயல்பாடு நடைபெறாத பட்சத்தில் அரசாங்கம் பராமரிப்பு சரியில்லை என எடுத்து கொள்கிறது. அணுவுலைக் கசிவும் ஒரு விபத்தே என்கிற எண்ணம் பொதுபுத்திக்கு இல்லை. அணுவுலை விபத்துக்களைப் பொறுத்தவரையில் உடனடியாக உயிர் பலியானவர்களை பாக்கியசாலிகள் என்று சொல்லலாம். அவர்கள் மட்டும்தான் அணுவுலைகளை நிறுவும் கரங்களிலிருந்து முற்றிலுமாக விடுதலையானவர்கள். பாதிப்புக்குள்ளாபவர்கள் மிஞ்சியிருப்பவர் எல்லோருமே தண்டனைக் கைதிகள் தான். ஊழ் அவர்கள் முன்பாக பகிரங்கமாக அமர்ந்திருக்கிறது.

‘மரங்களுக்கில்லை மனநோய்’ என்று விக்கிரமாதித்யனின் ஒரு கவிதை வரி கூறும். இது சத்தியமான ஒரு வாக்கு. அணுக்கதிர் வீச்சின் முன்னால் இக்கவிதை வரிக்கு அர்த்தம் ஏதுமில்லை. அணுகதிர்வீச்சால் மட்டும்தான் தாவரங்களுக்கும் பித்து நிலையை ஏற்படுத்த இயலும். ஜெர்மனில் வயது முதிர்ந்து ஆயிரம் மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்ட அணுவுலைப் பகுதி முழுவதும் புல் பூண்டுகள் கூட முளைக்க லாயற்றதாகி விட்டது என்கிற செய்தி படித்தேன். இவையெல்லாம் மன்மோகன்சிங்கிலிருந்து ஜெயந்தி நடராஜன் வரையில் அறியாதவையாக ஒன்றும் இருக்க இயலாது சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஒருவர் அணுவுலைகளுக்கும் எனது துறைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று கூறுவது நல்ல வேடிக்கை தான். இத்தகையோர் வாழும் நாட்டில் அணுவுலைப் பாதுகாப்பு குறித்து அமைப்பு விளக்கமளிப்பது அதனினும் வேடிக்கை. அதனினும் வேடிக்கை உலகெங்கும் அணுவுலை விபத்துகள் நடந்த நாடுகளில் விபத்துக்களின் பின்னரும்கூட அணுவுலை அமைப்புகளும் அரசாங்கங்களும் எல்லாம் பாதுகாப்பாகவே இருக்கின்றன என்றே கூறி வந்திருக்கின்றன என்பது தான் அது. உதாரணமாக அண்மையில் ஜப்பான் அணுவுலை விபத்திற்கு பின்னரும் அந்நாடு இவ்வண்ணமே வற்புறுத்தி வருகிறது.

அணுவுலை அமைப்புகளும் அணுவுலை அரசாங்கங்களும் பல்வேறு வார்த்தைகளை அர்த்தமற்றவையாக்கியிருக்கின்றன. அதில் ஒரு வார்த்தையின் பெயர் தான் பாதுகாப்பு. அணுவுலையின் முன்பாகவே பாதுகாப்பு என்கிற அரசாங்கத்தின் வார்த்தை கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையைப்போல அமர்ந்திருக்கிறது. அந்த குழந்தையை ஆரஞ்சுச்சுளையென கருதி சாப்பிட்டு ஜீரணியுங்கள் என வலியுறுத்தப்படுகிறது. ‘புத்தர் சிரித்தார்’ எனும் சொற்றொடெரைப் போல. புத்தர் முதலில் சிரித்தது முழுமையாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறை சிரித்தபோது பாதுகாப்பு அரண்களில் வைத்து வன்கொடுமைக்குள்ளாகி ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். கொலைகளத்திற்கு எவ்வளவு அழகான பெயர் ‘பாதுகாப்பு அரண்’ என்பது! இலக்கிய வட்டாரங்களில் சொற்களை உடைப்பது தகர்ப்பது அர்த்தங்களை கீறுவது என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இக்காரியங்களை செவ்வனே செய்யத் தெரிந்தவர்கள், கவிஞர்கள் ஆகியோர் வன்முறை அரசாங்கங்களின் ராணுவத்திலும், அணுசக்தித் துறையிலும் பாதுகாப்பு துறைகளிலுமே அனேகமாக இருப்பார்கள் என நினைக்கிறேன். வார்த்தைகளின் அர்த்தங்களை உடைத்து பட்டையைக் கிளப்புவர்கள் அவர்கள்.

‘பசுமைப் புரட்சி’ என்கிற அழகிய பதத்தின் கவியொழுங்கோடுதான் இந்தியாவின் விவசாய நிலங்களெல்லாம் ஒரு யுவதி சூறையாடப்படுவதைப் போல இரக்கமின்றி தட்டையாக்கப்பட்டன. அப்பாவிகள் பலரையும் ராஜிவ் கொலைவழக்கில் சந்தேகித்து ஒடுக்கிய மத்திய புலனாய்வு அமைப்பின் பெயர் ‘மல்லிகை’. மல்லிகை என்றால் எங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்கு தோவாளை மலர் சந்தை நினைவுக்கு வரும். எனது நினைவுக்கு திரும்புபவை கசப்புகள் சில தனிப்பட்ட மனிதர்கள் பெற்றுக்கொண்ட வெளியில் சொல்ல மனங்கூசும் கசப்புகள். எவ்வளவு தேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றால் இவ்வார்த்தைப் பிரயோகங்களெல்லாம் அரசுக்கு கைகூடும்? அர்த்தங்களை இவ்வார்த்தைகளிலிருந்து பிடுங்கும் மாஜிக்கல் வித்துவான் இவர்கள்தான். வளர்ச்சி, முன்னேற்றம் விஞ்ஞானம் அறிவு, நாகரிகம் ஆகிய பதங்கள் எவ்வளவு வினோதமாகவெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன? மக்கள் இவ்வார்த்தைகளின் அவசரகால நம்பகத்தன்மையில் முடங்கும்போது பன்னாட்டு மூலதன அமைப்புகளும், பன்னாட்டு மூலதன அமைப்புகளின் பிம்ப் (ஞiஅயீ) அரசாங்கங்களும் தங்கள் சதுரங்க விளையாட்டில் குதூகலிக்கின்றன. மலைகள் மொத்தமாக ஏலம் விடப்படுகின்றன. நதிகளும் அவ்வாறே. கடலுக்குள் அணுவுலை கசிவு ராணுவச்சிரிப்புடன் இறங்குகிறது. இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்துகிற பிம்ப் (pimp) அரசாங்ககளின் பிரதிநிதிகள் தான் ஜனநாயகம் பற்றிய வகுப்புப்பெடுக்கிறார்கள். அணுசக்தித் துறைக்கு ஆதாரவாக ‘தடையில்லா சான்றிதழ்’ அ.மார்க்ஸ் குறிப்பிடுவதை போல வடகிழக்கு மாநிலங்களை சின்னாபின்னாமாக்கும் ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ இவற்றையெல்லாம் கைகளில் மறைத்து வைத்துள்ள மன்மோகன்சிங் ஜனநாயகத்தை சிலாகிக்கிறார். இது அபத்தமான தருணம்.

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம் முழு தேர்ச்சி பெற்றிருக்கும் ஒரே விஷயம் என குறிப்பிடவேண்டுமெனில் எளிய மக்கள் போராட்டங்களைக் கூட சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மாற்றிவிடுவதில் அது அடைந்துள்ள அபார வெற்றியையே சொல்லவேண்டும். காங்கிரஸில் புதிதாக துளிர்விடும் குஞ்சுகள் கூட இம் மன முதிர்ச்சியிலிருந்தே பிறக்கின்றன. உலகமயமாக்கலின் பயன்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்றார் ராகுல்காந்தி. மலைகளை மொத்தாக ஏலம்விட்டு விட்டு அங்கிருந்து இடம் பெயரச் செய்த அடித்தட்டு மக்களையா? கடலை அணுவுலைகழிவாக்கி அகதியாகும் நிலையிலுள்ள வாழ்வாதாரங்களை இழக்கப்போகும் அடித்தட்டு மக்களையா! எவரைக்குறிப்பிடுகிறார். இவர்? ‘பேச்சுவார்த்தை’ என்கிற பொருளை கடுமையான சிதைவுக்குள்ளாக்கிய பெருமையும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு சேரும். இதனைக் காட்டிலும் மிக மோசமான பல அரசாங்கங்கள் உலகில் ஏற்கனவே இருந்திருக்கின்றன இருக்கின்றன. என்றாலும் காங்கிரஸ் அரசாங்கத்தைப் போல நாகரிக முகப்படி அணிந்து உலாவர முடிந்ததில்லை. எதிர் தரப்பு என்ற ஒன்றே கிடையாது என்று கருதிக்கொள்ள முடிந்ததில்லை. பன்முகத்தன்மை என்பதையும் தங்கள் உறுப்புக்கு சாதகமாக அணிந்து கொள்ள முடிந்ததில்லை. பன்முக தன்மையின் சிறப்பை தனது உறைவாளாக இப்போது அதிகம் பயன்படுத்துபவர் மன்மோகன்சிங் ஒருவராகத்தான் இருக்கவேண்டும்!. தெலுங்கானாவிலும், லோக்பால் மசோதாவிலும், கூடங்குளத்திலும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்கூட தனது ஈராக் நடவடிக்கை பற்றி பாவ மன்னிப்பு கோரும் விதத்தில் ஒரு நூல் எழுதும் தேவையிருந்தது. பிரான்சில் உளவுத்துறையினர் பல புரட்சிகளுக்கு சார்த்தர் ஒரு காரணம் அவரை கைது செய்யவேண்டும் எனக்கூறி அனுமதி கேட்டபோது அப்போதைய அதிபர் சார்த்தரைக் கைது செய்வது பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்திற்கு அவமானத்தைத் தரும் என மறுக்கும் தேவையிருந்தது.  ஆனால் இந்தியாவில் இதுபோன்ற தேவைகள் எதுவுமேயில்லை. இங்கே வறுமையை இந்தியாவில் ஒழிப்பது பற்றிய ஆய்வுக்காக பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் ஒரு பொருட்டே அல்ல. இத்தனைக்கும் இவர்கள் வளர்ந்த நாடுகள் என கருதப்படுகிற நாடுகளிடமிருந்துதான் தங்கள் கோட்டுபாடுகளையும் கொள்கைகளையும் அரசாங்கத்தையும் அமைப்பையும் கடன் பெறுகிறார்கள்! செயல்படுத்துகிறார்கள்! பாவமன்னிப்பு கோரவேண்டிய அவசியமேதும் இல்லாமல். 

‘பேச்சுவார்த்தை’ என்பது இருதரப்புகள் முயங்கி இருவரும் நகர்ந்து வந்து சேரவேண்டிய ஒரு சமரசப்புள்ளி. இருவரும் வந்தடைய வேண்டிய பொதுவிடம் என்கிற பொருள் இந்தியாவில் பிரிட்டீஷ் அரசாங்கம் செயல்பட்ட வரையில் இருந்தது. அதன் மூலமாகத் தான் இந்திய சுதந்திரப் போராட்டம் விடுதலை கண்டது. தற்போதைய இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை என்பதை தனது நிலைப்பாட்டை பிறர் வலுக்கட்டாயாக ஏற்றுக் கொள்வதற்கான வழி என்றும் தனது நிலைப்பாட்டை மேலும் இறுக்கி  உறுதிப்படுத்துவதற்கான பிறிதொரு வாய்ப்பு என்றும் கருதுகிறது. ஆகச் சுடர் கூடி கொளுத்து விடும் பிரச்சனைகளுக்கு இது முக்கிய காரணம். அரசாங்கம் மலைகளை விற்பதிலிருந்து வீட்டுப்பெண்களை வன்புணர்ச்சி செய்வது வரையில் எல்லாவற்றையும் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், அறிவிற்காகவும் நாகரிகத்திற்காகவுமே செய்கிறது! ஏராளமான மக்கள் பட்டினியில் இருக்கிறார்கள் அடிப்படையில் மருத்துவம் கல்வி ஆகியவை மறுக்கப்பட்டிருக்கிறார்கள். வறுமை வன்முறையில் இருக்கிறார்கள் எனில் அதுவும் முன்னேற்றத்தின் பொருட்டே ஆகும். இதுவே இந்திய அரசாங்கத்தின் இன்றைய நிலைபாடு. முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் அரசாங்கம் வறுமை வன்முறையிலும் ஈடுபடும் எதிர்தரப்புக்கு ஜனநாயகக் கடமை மட்டுமே இருக்கிறது. வன்முறையின் வளர்ச்சிக் கடமை எங்களுடையது. நீங்கள் அதனைப் பராமரிக்கக் தலைப்படவேண்டாம். இதுவே பிரதான செய்தி. இந்திய ராணுவம் வளர்ச்சி, முன்னேற்றம், நாகரிகம், அறிவு ஆகியவற்றை கருத்தடை மாத்திரையாக உட்கொண்ட சகல அதிகாரம் கொண்ட நுட்பமான உணர் நரம்புகளால் ஆன ஆண்குறி.

அணுசக்தி அரசாங்கக் கொள்கையின் பிரதான பண்பு பேராசையிலிருந்து பிறப்பது. பேராசையை பரப்புவதன் மூலமே அதனை கடை பிடிக்கச் செய்வதின் மூலமாகவே அணுசக்தி கொள்கையை வெற்றி இலக்காக மாற்ற முடியும். தேவை, ஆசை இவற்றிலிருந்து, இன்று புனைவாக விளம்பர உத்திகளில் பயன்படுத்துப்பெறும் காமமாக வெளிப்படும் பேராசையும் மாறுப்பட்டவை. தேவை, ஆசை இவையிரண்டும் நடைமுறை சார்த்தியம் கொண்டவை. பேராசை என்பது கருத்தடை சாதனம் அணிந்து வெற்று வெளியில் புணர்வதை போன்றது. ஆனால் பேராசையை காமமாக திரட்டுவதிலேயே நவீன அரசாங்கங்கள் குறிகோளாயிருக்கின்றன. இந்த உளவியல் செயல்பாட்டை உருவாக்குவதன் மூலமாக நிறுவுவதன் மூலமாக அவசரகால பொருளாதாரக் கொள்கை, பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் அதனை சார்ந்த அரசாங்கங்கள் ஆகியவை திளைக்கமுடிகிறது. அதன் காரணமாகத்தான் எதிர் உளவியல் மேதை டேவிட் கூப்பர் உழைப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள், பேராசையைத் தவிர்த்துவிடுங்கள். உங்களுக்கான நேரம், காலம் இவற்றை பிடித்து கொள்ளுங்கள் என்கிறார். பேராசையின் காமமும், நவீன அரசாங்கமும் உங்கள் உடலை உழைத்து சக்கையாகத் துப்பி எறியும் சக்தி படைத்தவை. உழைப்பின் தீராத அடிமையான பலர் பேராசையின் சீக்கு பிடித்தவர்கள். சில ரோஜா மலர்களைப் பறித்து நீங்கள் அழகு பார்க்கலாம். வெறி முற்றி தின்றும் தீர்க்கலாம். ஒன்றுமில்லை. ஒரு ரோஜா தோட்டத்தையே நீங்கள் தின்று தீரும் பேராசை கொண்டால் அஜீரணத்தால் மரணமடைவதைத் தவிர வழிகிடையாது. ரோஜா தோட்டத்தின் அடிப்புறத்தில் தான் உங்களை அடக்கம் செய்யும் மகா சமாதியும் திறந்திருக்கிறது. மந்தையில்லை என நீங்கள் அடையாளம் கொள்வதை விரும்பினால் கவிதை, கலை, படைப்பு எல்லாம் இருக்கட்டும் முதலில் உழைப்பதை நிறுத்துங்கள். நீங்கள் கண்டுபிடிக்கும் நேரம் மட்டும்தான் நீங்கள் வாழும் நேரம் உலகம் முழுவதும் ஒரே கட்டுப்கோப்புக்குள் வரவேண்டும் என்பதும் உலகம் முழுவதும் உள்ளவர்கள் அனைவரையும் நிர்வாணமாகக் கிடத்தி மாற்று பாலோர் அதன்மேல் உருளவேண்டும் என நினைப்பதும் ஒரே விதமான பேராசைகள்தான்.

இத்தகையதொரு, பொய்மையின் ரோஜா தோட்டத்தினடியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மகா சமாதிதான் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள இரட்டை அணுவுலைகளும். இப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கவேண்டிய பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் உண்டு. அச்சம் போக்கவேண்டும் என்கிற வாக்கியத்தில் பேய்பிடி நீக்க வேண்டும் என்பதை போல் பல அரசியல்வாதிகள் கில்லி விளையாடுகிறார்கள். அதில் முத்து பளுத்திருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் பொதுவான அச்சம்தான் என்ன? அல்லது இப்போதைய அச்சம் என்ன? அதனைப் போக்கும் வல்லமையாருக்குண்டு? ஒருவர் வாழ்நாள் முழுவதற்குமான பாசாங்கான அரசியலில் வாகை சூடமுடியும். என நிரூபித்து களம் கண்ட மாபெரும் தலைவரல்லவா அவர்? கூடன்குளம் பகுதி மக்கள், ‘அச்சத்தைப் போக்குங்கள் எச்சத்தைப் போக்குங்கள்’ என்றெல்லாம் கேட்கவில்லை. உங்களுக்கு அணுவுலைகள் கதிர்வீச்சு பலன்கள் விபத்து பற்றியெல்லாம் எவ்வளவு தெரியுமோ அதேயளவுக்கு அப்பகுதி மக்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். உங்களின் சாதூர்யமான பேச்சுகளோடு சேர்த்து இரண்டு அணுவுலைகளையும் மூடுங்கள் என்கிறார்கள் அவர்கள்.

கூடங்குளம் அணுவுலைகளை மூடக்கோரி போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு ஆதரவாக இரண்டு முறை இடிந்தகரைக்குச் சென்று வந்தோம். பா. செயப்பிரகாசத்தோடு கோணங்கி சென்று வந்ததாக கவிஞர் பாலை நிலவன் மூலம் அறிந்தேன். சாத்தூருக்கு தெற்கே கேரளத்தில் கொல்லம் வரைக்குமான பெரிய கல்லறை இவ்வணுவுலைகள் என்று கோணங்கி பேசினார் என்று அறிந்தேன். நாங்கள் கிருஷ்ண கோபால், கமலம் அசோக் ஆகியோர் முதல்முறை ராஜபாளையம் வழக்கறிஞர் பால்ராஜ் மற்றும் தோழர்களோடு சென்று வந்தோம். அன்றுதான் நடிகர் விஜயகாந்தும் இடிந்தகரைக்கு வந்திருக்கிறார். அப்போதுதான் அது மக்களின் முதல்கட்ட போராட்டமாயிருந்தது. மறுநாள் மேதா பட்கர் வந்திருந்தா விஜயகாந்த் நடிப்பதற்கு அன்று சற்று சிரமப்படவேண்டியிருந்தது. இவ்வகை சிரமங்களுக்கெல்லாம் சிறப்பாக பழக்கமாயிருப்பவர்கள் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் இம்முறை எங்கள் பகுதியில் பேரூராட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஆசி பெற்ற வேட்பாளர், புரட்சி கலைஞர் கேப்டன் ஆசிபெற்ற சின்னம் அரிவாள்சுத்தி நட்சத்திரம் என்கிற அடைமொழிகளோடு களமிறங்கிக் கலக்கினார். இவ்வடை மொழிகளையெல்லாம் கேட்டபோது தங்களுடைய மரணத்தை பிரகடனப்படுத்துகிறார்களோ எனத் தோன்றியது. தி.மு.க அ.தி.மு.க ஆகிய இருபெரும் கட்சிகளும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நாண்டு போனாலும் இவர்கள் ஒரு டம்மிப்பீஸைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் படித்து புரிந்து கொண்ட டயலடிக் மெட்டீரியஸிஸம் அத்தகையது. ஒருவேளை அது டயபட்டிக் மெட்டீரியஸிஸமாக இருக்குமோ என்னவோ? தீக்கதிர் இதழ் அணுவுலைகளுக்கு ஆதரவான அணுசக்தித்துறையில் பணியாற்றியவர்களின் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடுகிறது. தா.பாண்டியன் உளறுகிறார். என்னவாயிற்று இவர்களுக்கு!

இரண்டாவது கட்ட போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தந்து குமரி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் குமார செல்வர், ஜே.ஆர்.வி.எட்வர்ட், ஜி.எஸ்.தயாளன், வழக்கறிஞர், டி.வி.பாலசுப்பிரணியம், கிருஷ்ணகோபால் குறும்பட இயக்குநர் கவிஞர் பைசல், ரிஷிநந்தன், டாக்டர் ஜெனார்த்தனன் ஆகியோர் கழிந்த 9-10-2011 அன்று கலந்துகொண்டோம். இடிந்தகரையைச் சேர்ந்த கிராம மக்களின் அணுவுலைகளுக்கெதிரான போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூர்வீகமாக இப்பகுதியில் வாழும் பெண் தெய்வங்களின் போராட்டம் என்றே எனது மனதில் பதிவானது. நல்லதங்காள், கண்ணகி ஆகியோரை நினைவுபடுத்தக்கூடிய போராட்டம் இது. குலசை முத்தாரம்மன், முப்பந்தல் இசக்கி, தென்தாமரைக்குளம் பத்திரகாளி, கொல்லங்கோடு, பகவதி, மேரி மாதா எல்லோரும் இணைந்து களமிறக்கியிருக்கும் போராட்டம். சுடலைமாடன்கள் தூய சவேரியார்கள் எல்லோரும் உறுதுணை. இப்போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்று கூடங்குளம் அணுவுலைகள் மூடப்பட்டால் இத்தெய்வங்கள் வெற்றி பெற்றுவிடும். அரசாங்கம் வெற்றி பெற்றால் தெய்வங்கள் தோல்வியடைந்ததாகத் தான் அர்த்தம்.

அணுவுலைகளில் வேலை பார்ப்பவர்களில் ஒருபகுதியினர் இம்மக்கள் தங்களுக்கெதிராய் போராடுவதாக நினைக்கிறார்கள். உங்களையும் சேர்த்து பாதுகாப்பதற்காகத்தான் இத்தெய்வப் போராட்டம் என்பதை நீங்கள் உணர்வதற்குள் இவ்வுலைகள் மூடப்பட்டுவிட வேண்டும். துரதிர்ஷ்டங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. கார்பைட் பகுதியில் பணி வேலைக்குச் சேர்ந்த சிலர் திருமணம் முடிந்து குழந்தைகள் பெற்றபின் இவ்வேலைக்கு வருவது நல்லது என்கிற வரையில் தெளிவாயிருக்கிறீர்கள். நல்லது. அபாயம் நாவல் முழுமையாக உங்களுக்கான நாவல்தான் முக்கியமாக. அது குறிப்பாக பணிபுரியும் உங்களைப் பற்றியே பேசுகிறது. அதன் இரண்டாம் பதிப்பை க்ரியா பொருத்தமான இச்சூழ்நிலையில் கொண்டு வந்திருப்பதாக அறிந்தேன். மூன்றாம் பதிவு வரும்போது நிச்சயமாக அது உங்களுக்கு பயன்படாது. அணுவுலைகள் மூடப்பட்டுவிட்டாலும் கூட நீங்கள் வேறு அணுவுலைகளில் பணி செய்ய வற்புறுத்தபடலாம் அல்லது ஏதேனும் வெண்சிறையில் இருக்கலாம். ரஷ்யாவில் நடந்த செர்னோவில் விபத்தை தொடர்ந்து அங்கு விளைந்த தானியங்களில் கதிர்வீச்சின் தாக்கம் ஏற்பட்டது. உலகின் சிறிய நாடுகள் கூட கதிர்வீச்சின் காரணமாக ரஷ்யாவின் கோதுமைகளை இறக்குமதி செய்ய மறுத்துவிட்டன. இந்தியா என்கிற நல்லரசு மட்டும்தான் அப்போது ரஷ்ய கோதுமைகளை இறக்குமதி செய்து ரேஷன் கடைகள் மூலம் இந்தியா முழுவதும் விநியோகம் செய்தது. இந்தியா முழுவதும் பரவியிருக்கும் மார்பக புற்றுநோய் கர்ப்பபை புற்றுநோய் ஆகியவற்றிற்கும் இக்கோதுமைகளுக்கும் தொடர்பிருக்கலாம். நோய்கள், வறுமை விபத்து, இவையெல்லாம் நேரடி அரசியலோடு தொடர்புள்ளவை. பாகிஸ்தானில் கராச்சி நகரில் (20-11-2011) 89 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணுவுலையில் நீர்க்குழாயில் ஏற்ப்பட்ட கசிவில் காரணமாக நகர் முழுவதும் ஏழு மணி நேரம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு நிலைமை சரிச்செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது. கூடங்குளம் இரட்டை அணுவுலைகளை ஒப்பிடும்போது 89 மெகாவாட் அணுவுலை ஒரு இட்லி குக்கர் அவ்வளவுதான்.


நான் வசிக்கும் வீட்டின் பின்புறத்தில் ஒரு வயதான மாமரம் தாய் மரமாக நிற்கிறது. ஐப்பசியின் துவக்கத்திலேயே உடலெல்லாம் தளிர்த்து குதூகலிக்கிறது அத்தாய்மரம். முன்பக்கத்தில் நிற்கும் மாமரம் அதன் கன்று. குறைவான இடவசதியிலும் அத்தாய் மரத்திற்கு பருவகாலங்களோடும் ஆகாயத்தோடும், பிரபஞ்சத்தோடும் எவ்வளவு ஆச்சரியமான தொடர்பிருக்கிறது. ஒரு பக்கக் கொம்புகள் இற்று நொறுங்கிய பின்னும் இயற்கையின் திமிர் அதற்குள் இருக்கிறது. அது தாய்மரம் மட்டுமல்ல. எனது குழந்தைகளுக்குத் தெய்வம். அது மாம்பழங்களைத் தரும் நாட்களில் குழந்தைகள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். அதன் மீது வாழும் காலத்திலேயே ஒரு அணுக்கதிரியக்க மழை பெய்யுமாயின் அது நிச்சயமாக தெய்வ குற்றம். எப்போதும் சொந்தமான ஒரு வரியை பிரதி உருவாக்கும் போது வழக்கம் போலவே எனது வாய்ப்புகள் முடிவடைகின்றன.

(நன்றி- தீராநதி)

Comments